கொலை நகராகிறது சென்னை: மு.க.ஸ்டாலின் விமர்சனம்

தமிழகத்தில் நடைபெற்று வரும் கொலை சம்பவங்களை பட்டியலிட்டு கூறிய மு.க.ஸ்டாலின், சென்னை மாநகரமும் கொலை நகரமாக மாறியுள்ளது என விமர்சித்துள்ளார்.

சென்னை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த சூளைமேடு சேர்ந்த 24 வயது இளம் பெண் கொல்லப்பட்ட நிலையில், ஸ்வாதியின் பெற்றோரை தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

பெண்களுக்கான பாதுகாப்பு சட்டம் செயல்படுகிறதா?

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 13 அம்சங்களை கொண்ட பெண்களுக்கான பாதுகாப்பு சட்டத்தை கடந்த 2013 ஆம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசாங்கம் அறிவித்திருந்தது. ஆனால், அது செயல்படுகிறதா என்பது கேள்விக்குறியாகவே இன்றளவும் இருந்து வருகிறது என குற்றஞ்சாட்டினார்.

தமிழகத்தில் இரண்டாவது முறையாக ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வின் அரசாங்கம் பொறுப்பேற்ற பின்பும் கூட சென்னையில் படுகொலைகள் தொடர்வதால், வீட்டுக்கு வெளியே வரக்கூடிய பெண்களுக்கு என மட்டும் இல்லாமல், வீட்டிற்குள் இருக்கும் பெண்களுக்கும் இச்சம்பவங்கள் மிகப்பெரிய அச்சத்தை உண்டாகியுள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறினார்.

ஆட்சியில் இருப்பவர்களே பொறுப்பு

அத்தோடு இது போன்ற கொலை சம்பவங்கள் தொடராமல் தடுப்பதற்கு ஆட்சி பொறுப்பில் இருப்பவர்கள் தங்களை முழு அளவில் ஈடுப்படுத்திக் கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஸ்டாலின், கொலை செய்யப்பட்ட ஸ்வாதியின் பெற்றோர்கள் தன்னிடம் பேசிய போதும் கூட இது போன்ற கொடுமையான சம்பவங்கள் தொடரக்கூடாது என்றும், இதுவே கடைசி சம்பவமாக இருக்க வேண்டும் என்றும் பெருந்தன்மையாக கூறியது தன்னை உலுக்கியதாகவும் குறிப்பிட்டார்.

கடந்த 24 ஆம் தேதியன்று வெள்ளிக்கிழமை காலையில் பணிக்குச் செல்வதற்காக நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு ஸ்வாதி வந்த நிலையில், ஒருவர் அவரை அணுகி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, ஸ்வாதியை வெட்டிக் கொன்றார்.

இது தொடர்பான விசாரணைகளில் காவல்துறை தற்போது ஈடுபட்டுள்ளது. இன்னும் கொலையாளி பிடிபடவில்லை.