அமில வீச்சு வழக்கில் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்

காரைக்காலைச் சேர்ந்த வினோதினி என்ற இளம் பெண் மீதான அமில வீச்சு வழக்கில் சுரேஷ் என்பவருக்கு விதிக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

Image caption வினோதினி மீதான அமில வீச்சு வழக்கில் குற்றவாளிக்கு வழங்கிய ஆயுள் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது

புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணையில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20 ஆம் நாள் தீர்ப்பு வெளியானது.

அந்த நீதிமன்றத்தின் கூடுதல் அமர்வு நீதிபதி வைத்தியநாதன் பிறப்பித்திருந்த தீர்ப்பின்படி, வினோதினியை கொலை செய்த குற்றத்திற்காக சுரேஷுக்கு ஆயுள் தண்டனையும், வினோதினி மற்றும் உடனிருந்தவர்களை காயப்படுத்தியதற்காக 4 ஆண்டு கால சிறை தண்டனையையும் விதித்தார்.

இதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதிகள் நாகமுத்து மற்றும் பாரதிதாசன் ஆகியோரை கொண்ட அமர்வு, சுரேஷுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து உத்தரவை வெளியிட்டுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், தீபாவளி பண்டிகையை கொண்டாடிவிட்டு சென்னை திரும்புவதற்காக குடும்பத்தினருடன் பேருந்து நிலையம் சென்று கொண்டிருந்த பொறியியல் பட்டதாரி வினோதினி மீது சுரேஷ் ஆசிட் வீசினார்.

படுகாயமடைந்த வினோதினி பின்னர் 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12 ஆம் நாளன்று சிகிச்சை பயனளிக்காமல் உயிரிழந்தார்.

அவர்கள் காதலித்ததாகவும், பல உதவிகள் தான் செய்ததாகவும், ஆனால் பொறியாளரான பிறகு தன்னை உதாசீனப்படுத்தினார் வினோதினி, திருமணம் செய்து கொள்ளவும் மறுத்தார், எனவே ஆத்திரப்பட்டு ஆசிட் வீசியதாக சுரேஷ் கூறியிருந்தார்.

அச்சம்பவம் அகில இந்திய அளவில் அதிர்ச்சி அலைகளை எழுப்பியது. சம்பவத்திற்கு மறுநாளே சுரேஷ் கைது செய்யப்பட்டார்.

காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணையின் போது அரசு தரப்பிலான வாதத்தில், குற்றஞ்சாட்டப்பட்டிருந்த சுரேஷுக்கு மரண தண்டனை விதிக்கவே கோரப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.