ஆபாசப் படத்தால் பெண் தற்கொலை: சேலத்தில் ஒருவர் கைது

சேலம் மாவட்டத்தில் தன்னைப் போல மார்ஃபிங் செய்யப்பட்ட ஆபாசப்படம் வெளியடப்பட்டதால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் வழக்கில் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இந்த வழக்கை விசாரிக்க லஞ்சம் வாங்கிய ஒரு காவலர் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை PA

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியைச் சேர்ந்த வினு ப்ரியா என்ற பெண்ணின் மார்ஃபிங் செய்யப்பட்ட ஆபாசப் படம் ஒன்று கடந்த ஜூன் 16ஆம் தேதியன்று ஃபேஸ்புக்கில் வெளியானது.

அந்தப் பக்கத்தை முடக்கும்படி கோரியும், அதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரியும் வினுப் பிரியாவின் பெற்றோர் காவல்துறையை அணுகியபோது, நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக புதிதாக செல்போன் ஒன்று வாங்கித் தர வேண்டுமென இணையம் தொடர்பான குற்றங்களை விசாரிக்கும் "சைபர் க்ரைம்" பிரிவைச் சேர்ந்த காவலர்கள் கேட்டதாகவும், புதிதாக போன் வாங்கிக் கொடுத்த நிலையிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையென வினுப் ப்ரியாவின் பெற்றோர் புகார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், வினுப் பிரியா திங்கட்கிழமையன்று தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

படத்தின் காப்புரிமை THINKSTOCK

தாங்கள் பல முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால்தான் தங்கள் மகள் தற்கொலைசெய்து கொண்டார்; இதற்குக் காரணமானவர்களைக் கைதுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி வினுப் பிரியாவின் உடலை வாங்க மறுத்து அவரது பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கல்பாரப்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் என்ற இளைஞரைக் காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டிருப்பதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அமித் குமார் சிங் ஊடகங்களிடம் தெரிவித்திருக்கிறார்.

நடவடிக்கை எடுப்பதற்கு செல் போனை லஞ்சமாக கேட்டு வாங்கிய தலைமைக் காவலர் சுரேஷ் குமார் என்பவரை மாவட்ட காவல்துறை ஆணையர் இடைநீக்கம் செய்திருக்கிறார்.

வினுப் பிரியாவின் பெற்றோர் புகார் கொடுக்கச் சென்றபோது புகாரை வாங்காமல் இழுத்தடித்த மகுடஞ்சாவடியைச் சேர்ந்த துணை ஆய்வாளர் பிரகாஷ் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வினுப் பிரியாவின் பெற்றோர் கோரியிருந்தனர்.

ஆனால், அவர் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் காவல்துறை தெரிவித்திருக்கிறது.