தடைகளைத் தாண்டி படையில் இணைந்தது தேஜஸ் போர் விமானம்

இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட போர் விமானம், தேஜஸ், பல கட்டங்களைத் தாண்டி, 31 ஆண்டுகளுக்குப் பிறகு விமானப் படையில் சேர்க்கப்பட்டுள்ளது.

ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தேஜஸ், ஏற்கெனவே நீண்ட காலமாக விமானப் படையில் உள்ள ரஷ்யத் தயாரிப்பான மிக்-21 விமானங்களுக்குப் பதிலாக,

விமானப் படைக்கு வலுச்சேர்க்கும்.

படையில் சேர்க்கப்படுவதன் அடையாளமாக, இரண்டு தேஜஸ் விமானங்களை, ஏரோநாடிக்ஸ் நிறுவம், விமானப்படைக்கு வெள்ளிக்கிழமை வழங்கியது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் முதலாவு போர் விமானம் இதுவல்ல. ஏற்கெனவே, எச்.எப்.24 என்ற விமானத்தை, 1961-ம் ஆண்டு ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் வடிவமைத்தது.

தேஜஸ் இந்தியாவில் வடிவமைக்கப்பட்டாலும், என்ஜின், ரேடார் உள்ளிட்ட சில தொழில்நுட்பங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. படையில் சேர்க்கத் தகுதியானது என 2011-ல் சான்றிதழ் வழங்கப்பட்டது.

ஃப்ளையிங் டேகர்ஸ் 45 என்ற விமானப் படைப் பிரிவில் இந்த இரு தேஜஸ் விமானங்களும் சேர்க்கப்படும் என்றும், இந்த நிதியாண்டில் மேலும் 6 விமானங்களையும், அடுத்த நிதியாண்டில் 8 விமானங்களையும் சேர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விமானம், உலகிலேயே சிறிய, இலகு ரக, ஒற்றை என்ஜின், நவீன போர் விமானம் என்று இந்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வானிலிருந்து வானுக்கும், வானிலிருந்து தரைப்பகுதிக்கும் ஆயுதங்களைக் கொண்டு சேர்க்கும் திறன் படைத்த தேஜஸ், தொழில்நுட்பத் தடைகள் காரணமாக பல ஆண்டுகள் தாமதத்தை எதிர்கொள்ள நேர்ந்தது.

கடந்த 1988-ல் இந்தியா நடத்திய அணுகுண்டு சோதனைகளை அடுத்து, அமெரிக்கா விதித்த தடைகள் காரணமாக, இந்த விமானத்தை உருவாக்குவதில் மேலும் தாமதத்தை ஏற்படுத்தியது.