ஸ்வாதி கொலை:எட்டு நாட்களில் முடிவுக்கு வந்த தேடுதல் வேட்டை

சென்னையைச் சேர்ந்த 24 வயது மென்பொறியாளர் ஸ்வாதி கடந்த மாதம் 24ஆம் தேதி கொல்லப்பட்டார். அந்தக் கொலை வழக்கில் இன்று ஒருவரைக் கைது செய்திருக்கிறது. இதுவரை அந்த விவகாரத்தில் நடந்தவை.

24 ஜூன்: சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் காலை 6.40 மணியளவில் அடையாளம் தெரியாத நபரால் ஸ்வாதி வெட்டிக் கொல்லப்பட்டார்,.

25 ஜூன்: அருகில் உள்ள வீடுகளில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான சந்தேக நபரின் படம் ஊடகங்களுக்கு வெளியிடப்படுகிறது.

26 ஜூன்: சந்தேக நபரின் இரண்டாவது வீடியோ காட்சி வெளியாகிறது.

27 ஜூன்: ரயில்வே காவல்துறையின் விசாரணையில் முன்னேற்றமில்லாத நிலையில், வழக்கு சென்னைப் பெருநகர காவல்துறைக்கு மாற்றப்படுகிறது. 8 தனிப்படைகள் அமைக்கப்படுகின்றன.

28 ஜூன்: ஸ்வாதி வழக்கில் முன்னேற்றம் இல்லாதது குறித்து கண்டனம் தெரிவிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.

30 ஜூன்: சந்தேக நபரின் தெளிவான படம் வெளியிடப்படுகிறது. அந்தப்படத்தை வைத்து சூளைமேடு பகுதியில் விசாரிக்கும்போது, சந்தேகநபர் தங்கியிருந்ததாகச் சொல்லப்படும் விடுதியின் காவலாளி அந்த நபரைத் தெரியும் என கூறியதாக காவல்துறை கூறுகிறது.

1 ஜூலை: திருநெல்வேலி மாவட்ட காவல்துறை செங்கோட்டை அருகில் உள்ள டி. மீனாட்சி புரம் பகுதிக்குச் சென்று சந்தேகநபரான ராம்குமார் என்பவரைச் சுற்றிவளைக்கிறது. அவர் கழுத்தை அறுத்து தற்கொலைசெய்ய முயற்சித்தபோது, காப்பாற்றப்பட்டதாக காவல்துறை தெரிவிக்கிறது.

2 ஜூலை: ஸ்வாதி கொலையில் குற்றவாளியைப் பிடித்துவிட்டதாக சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் டி.கே. ராஜேந்திரன் அறிவிக்கிறார். கூட்டாளி யாரும் கிடையாது என்றும் கூறுகிறார்.