சென்னை மென்பொறியாளர் ஸ்வாதி கொலை வழக்கில் ஒருவர் கைது

சென்னையைச் சேர்ந்த மென்பொறியாளர் ஸ்வாதி ரயில் நிலையத்தில் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ராம்குமார் என்பவரை காவல்துறை கைது செய்துள்ளது.

Image caption ஸ்வாதி கொலை வழக்கில் கைதான சந்தேக நபர் ராம்குமார்

கடந்த 24ஆம் தேதியன்று சென்னையின் மையப் பகுதியில் உள்ள நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளரான ஸ்வாதி என்பவர் இளைஞர் ஒருவரால் காலை ஆறரை மணியளவில் வெட்டிக்கொல்லப்பட்டார்.

இந்த விவகாரத்தை முதலில் ரயில்வே காவல்துறை விசாரித்து வந்த நிலையில் பிறகு, சென்னை மாநகர காவல்துறை இதனை விசாரிக்க ஆரம்பித்தது.

அருகில் இருந்த வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான படங்களை வெளியிட்ட காவல்துறையினர், அதனை வைத்து குற்றவாளியைத் தேடிவந்தனர்.

கொலை நடந்து ஒரு வாரம் கடந்தும் குற்றவாளி பிடிபடாத நிலையில், நேற்று நள்ளிரவில் ராம்குமார் என்ற பொறியியல் பட்டதாரியை காவல்துறையினர் திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டைக்கு அருகில் உள்ள டி. மீனாட்சிபுரத்தில் என்ற இடத்தில் கைதுசெய்தனர்.

Image caption மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்படும் ராம்குமார்
வேலை தேடி சென்னை வந்தவர் ?

அவர் வேலை தேடி சென்னைக்கு வந்ததாகவும், ஸ்வாதியின் வீட்டிற்கு அருகில் உள்ள மேன்ஷன் ஒன்றில் தங்கியிருந்ததாகவும் காவல்துறை தரப்பு தெரிவிக்கிறது.

அந்தப் பகுதியில் உள்ள மேன்ஷன்களில் தங்கியிருந்து ஊருக்குச் சென்ற பத்து பேர் குறித்து விசாரித்த காவல்துறை, பிறகு ராம்குமாரை குறிவைத்தது.

நேற்று காலை முதலே திருநெல்வேலியில் முகாமிட்டிருந்த காவல்துறையினர் நேற்று இரவில் ராம்குமாரைக் கைதுசெய்ய முயற்சித்தபோது, அவர் வேறொரு அறைக்குள் சென்று பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தபோது, காவல்துறை அதனைத் தடுத்து கைது செய்துள்ளது.

பிறகு பாளையங்கோட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த இளைஞர் மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு நலமாக இருப்பதாகவும் விரைவில் சென்னைக்குக் கொண்டுவரப்படவிருப்பதாகவும் காவல்துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி உள்ளூர் ஊடகச் செய்திகள் கூறுகின்றன.