ஸ்வாதியை பல நாட்களாக பின்தொடர்ந்த கொலையாளி: சென்னை நகர காவல்துறை ஆணையர் தகவல்

சென்னையில் ரயில் நிலையம் ஒன்றில் பலர் முன்னிலையில் வெட்டிக் கொல்லப்பட்ட ஸ்வாதி என்ற 24 வயது மென் பொறியாளரை, தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் நபர் நீண்ட நாட்களாக பின்தொடர்ந்து சென்றதாக சென்னை நகரக் காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 24-ஆம் தேதி காலை ஆறரை மணியளவில், சென்னை நகரின் மையப் பகுதியில் உள்ள நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பலரது முன்னிலையில் ஸ்வாதி வெட்டிக்கொல்லப்பட்டார்.

முதலில் ரயில்வே காவல்துறை விசாரித்த இந்த வழக்கு, மூன்று நாட்களுக்குப் பிறகு சென்னை நகரக் காவல்துறைக்கு மாற்றப்பட்டது.

கொலை நடந்த ரயில் நிலையத்தில் கண்காணிப்புக் கேமராக்கள் ஏதும் இல்லாத நிலையில், அருகில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான சந்தேக நபரின் படத்தை காவல்துறையினர் வெளியிட்டனர்.

மேலும் ஸ்வாதி பணிபுரிந்த அலுவலகம், அவரது சக ஊழியர்கள், நண்பர்கள் எனப் பலரிடம் காவல்துறை விசாரணை செய்துவந்தது.

ஸ்வாதியின் வீடு அமைந்திருந்த சூளை மேடு பகுதியில் தங்கும் விடுதிகள் அதிகம் என்பதால் அனைத்து விடுதிகளிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

சூளைமேடு பகுதியில் உள்ள ஏ.எஸ். மேன்ஷன் என்ற தங்கும் விடுதியில் தங்கியிருந்தவர்கள் பற்றிய பதிவில் இருந்த ராம்குமார் என்பவரின் படமும் சந்தேக நபரின் படமும் ஒத்துப் போனதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.

ராம்குமார் விடுதியில் இல்லாத நிலையில், அவரது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டி. மீனாட்சிபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு திருநெல்வேலி மாவட்டக் காவல்துறையினர் அனுப்பப்பட்டதாகவும், அவரைப் பிடிக்க முயன்றபோது கையில் வைத்திருந்த ஆயுதத்தால் கழுத்தில் காயம் ஏற்படுத்திக்கொண்டதாகவும் காவல்துறை கூறியிருக்கிறது.

அதன் பிறகு திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இந்த நிலையில், இன்று காலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மாநகரக் காவல்துறை ஆணையர் டி.கே. ராஜேந்திரன், இந்தக் கொலை விவகாரத்தில் ராம்குமார் என்ற ஒருவர் மட்டுமே ஈடுபட்டிருப்பதாக கருதப்படுவதாகவும் கூட்டாளி யாரும் இல்லையென்றும் தெரிவித்தார்.

திருநெல்வேலியில் உள்ள ஜஸ்டின் பொறியியல் கல்லூரியில் மெக்கானிகல் பொறியியல் படிப்பை முடித்திருக்கும் ராம்குமார், 3 மாதங்களுக்கு முன்பு வேலைதேடி சென்னைக்கு வந்தது சூளைமேடு பகுதியில் தங்கியதாகவும் காவல்துறை கூறுகிறது.

தற்போது கைதுசெய்யப்பட்டிருக்கும் இந்த வாலிபர் ஸ்வாதியுடன் பழகவிரும்பி, அதற்கு ஸ்வாதி மறுத்துவிட்ட நிலையிலேயே அந்த வாலிபர் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக ஆணையர் டி.கே. ராஜேந்திரன் தெரிவித்தார்.

புலனாய்வு முடியும்வரை வேறு தகவல்களை வெளியிட முடியாது என்றும் டி.கே. ராஜேந்திரன் கூறினார்.

பட்டப்பகலில் ஸ்வாதி கொலைசெய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஒரு வாரத்திற்குப் பிறகு கொலையாளி என சந்தேகிக்கப்படும் ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது.