570 கோடி ரூபாய் பறிமுதல்; சி.பி.ஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கண்டெய்னர் லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்ட 570 கோடி ரூபாய் கரன்சி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணையை சி.பி.ஐ. எனப்படும் மத்திய புலனாய்வுத் துறை மேற்கொள்ள வேண்டும் என கூறி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினரான டி.கே.எஸ்.இளங்கோவன் தொடுத்திருந்த இது தொடர்பான வழக்கில் தான் இன்று நீதிபதி சுப்பையா இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 16ஆம் தேதி நடக்கவிருந்த நிலையில், மே 14ஆம் தேதியன்று திருப்பூர் மாவட்டத்தில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, மூன்று கண்டெய்னர் லாரிகளில் கட்டுக் கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பிறகு இந்தப் பணம் தங்களுக்குச் சொந்தமானது என கோயம்புத்தூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கூறியது. கோயம்புத்தூரில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு பணம் கொண்டுசெல்லப்படவிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்தப் பணம் தமிழகத்தைச் சேர்ந்த பெரிய அரசியல் கட்சி ஒன்றுக்குச் சொந்தமானது என சில கட்சிகள் குற்றம்சாட்டிவந்தன.

இந்த விவகாரத்தை அமலாக்கத் துறையும் சிபிஐயும் விசாரிக்க உத்தரவிட வேண்டுமெனக் கோரி தி.மு.க. சார்பில் பிரதமர், சி.பி.ஐ. இயக்குனர், உள்துறை அமைச்சர், ரிசர்வ் வங்கியின் ஆளுனர் ஆகியோருக்கு மனு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், தாங்கள் அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டுமெனவும் கோரி தி.மு.கவின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கில் தான் இன்றைய தினம் இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.