கண்டெய்னர் லாரி விசாரணை: தமிழகத் தேர்தல் எப்படி நடந்தது என்பது தெரியவரும் என்கிறார் ஸ்டாலின்

தமிழக சட்டமன்ற தேர்தல் எவ்வாறு நடைபெற்றது என்பது கண்டெய்னர் லாரி விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி நடைபெறும் சி.பி.ஐ. விசாரணையில் புலப்படும் என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க..ஸ்டாலின் குறிப்பிட்டார்.

சென்னை கோபாலபுரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலினிடம், 570 கோடி ரூபாய் கரன்சிகளுடன் பறிமுதல் செய்யப்பட்ட கண்டெய்னர் லாரிகள் விவகாரம் தொடர்பான வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது குறித்து கேட்கப்பட்டபோது , பதிலளித்த அவர் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி நடைபெறவுள்ள சிபிஐ விசாரணையில் தமிழக சட்டமன்ற தேர்தல் எப்படி நடந்தது என்பதும் வெளியாகும் என்றார்.

மேலும் தேர்தலின் போது திருப்பூர் அருகே, கண்டெயினர் லாரிகளில் 570 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என சட்டமன்றத்தில் பேச முயன்றபோது, சபாநாயகர் அதனை அனுமதிக்கவில்லை. ஆனால் இப்போது சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

கண்டெய்னர் லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்ட 570 கோடி ரூபாய் கரன்சி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணையை சி.பி.ஐ. எனப்படும் மத்திய புலனாய்வுத் துறை மேற்கொள்ள வேண்டும் என கூறி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு தமிழக அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

குறிப்பாக மக்கள் நல கூட்டணியில் இடம்பெற்றுள்ள ம.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் வை.கோ. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்து பேசினார்கள்.

அத்தோடு சி.பி.ஐ. விசாரணைக்கு பிறகு சட்டமன்ற தேர்தலின் போது நடைபெற்ற முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வரும் என்றும் தெரிவித்தனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 16ஆம் தேதி நடக்கவிருந்த நிலையில், மே 14ஆம் தேதியன்று திருப்பூர் மாவட்டத்தில் காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, மூன்று கண்டெய்னர் லாரிகளில் கட்டுக் கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பிறகு இந்தப் பணம் தங்களுக்குச் சொந்தமானது என கோயம்புத்தூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கூறியது. கோயம்புத்தூரில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு பணம் கொண்டு செல்லப்படவிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்தப் பணம் தமிழகத்தைச் சேர்ந்த பெரிய அரசியல் கட்சி ஒன்றுக்குச் சொந்தமானது என சில கட்சிகள் குற்றம்சாட்டிவந்தன.

இந்தச் செய்தி குறித்து மேலும்