இந்திய மத்திய அமைச்சரவையில் புதிதாக 19 அமைச்சர்கள்

புதிதாக 19 அமைச்சர்களை இணைத்து, பிரதமர் மோதி மத்திய அமைச்சரவையை மாற்றியமைத்துள்ளார். அமைச்சரவை இவ்வளவு பெரிய அளவில் மாற்றியமைக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.

மூத்த பத்திரிகையாளர் எம்.ஜே. அக்பர், பா.ஜ.கவின் தேசிய துணைத் தலைவர் எஸ்.எஸ். அலுவாலியா, ஃபக்கன் சிங் குலஸ்தே, ரமேஷ் சின்னப்ப ஜிகாஜின்னகி, ஜஸ்வந்த் சிங் பபோர், மகேந்திர நாத் பாண்டே, அனில் மாதவ் தாவே, அர்ஜுன் ராம் மேக்வால், ராஜென் கொஹெய்ன், கிருஷ்ணா ராஜ், பர்ஷோத்தம் ரூபலா, அனுப்ரியா படேல் உள்ளிட்டவர்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.

மத்திய இணை அமைச்சராக சுற்றுச்சூழல் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களக் கவனித்துவந்த பிரகாஷ் ஜாவ்தேகர், கேபினட் அமைச்சராக்கப்பட்டுள்ளார்.

புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 19 அமைச்சர்கள், 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருப்பதை மனதில் கொண்டு இந்த மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இதற்கு முன்பாக மத்திய அமைச்சரவை 2014 நவம்பரில் மாற்றியமைக்கப்பட்டது. தற்போது மத்திய அமைச்சரவையில் 64 பேர் உள்ளனர். விதிகளின்படி 82 அமைச்சர்கள் வரை அமைச்சரவையில் இருக்க முடியும்.

அமைச்சர்களுக்கான பொறுப்புகள் இன்று மதியம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அமைச்சரவையில் இன்று காலையில் புதிதாக 19 அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில், 5 அமைச்சர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

ரசாயனம் மற்றும் உரத்துறை இணையமைச்சர் நிகல் சந்த் மேக்வால், மனித வளத்துறை இணையமைச்சர் ராம் ஷங்கர் கதேரியா, நீர்வளத் துறை இணையமைச்சர் சன்வர் லால் ஜாட், பழங்குடியினர் விவகாரத்துறை இணையமைச்சர் மன்ஷுக்பாய் டி.வஸ்வா, விவசாயத் துறை இணையமைச்சர் எம்.கே. குந்தரியா ஆகியோர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.