நாயை மாடியிலிருந்து வீசி வீடியோ எடுத்து பதிவிட்ட மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மீது வழக்கு

சென்னைக்கு அருகில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தெரு நாய் ஒன்றை மாடியிலிருந்து தூக்கிப்போட்ட விவகாரத்தில் இருவர் மீது காவல்துறை வழக்குப் பதிவுசெய்து அவர்களைத் தேடிவருகிறது.

படத்தின் காப்புரிமை fb

இளைஞர் ஒருவர் தெருநாய் ஒன்றை மூன்றாவது மாடியிலிருந்து தூக்கிப் போடும் காட்சிகள் நேற்றிலிருந்து சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து, அந்த வீடியோவில் இடம்பெற்றிருக்கும் இளைஞரை கண்டுபிடிக்க விலங்குகள் நல ஆர்வலர்கள் முயன்றனர்.

முடிவில், நாயைக் கீழேத் தூக்கி வீசியவரும் அதனை வீடியோ எடுத்தவரும் தனியார் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படிப்பவர்கள் எனத் தெரியவந்ததாக விலங்குகள் நல ஆர்வலரான ஷ்ரவண் கிருஷ்ணன் தெரிவித்தார்.

இதையடுத்து, கவுதம் சுதர்சனன், ஆஷிஷ் பால் ஆகிய இருவர் மீது குன்றத்தூர் காவல்நிலையத்தில் இந்தியக் குற்றவியல் சட்டம் 428, 429, மிருகவதைத் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

"சம்பந்தப்பட்ட மாணவர்களில் ஒருவர் திருநெல்வேலியையும் மற்றொருவர் நாகர்கோவிலையும் சேர்ந்தவர்கள் . இருவரும் காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டுமென இருவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது " என குன்றத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் ஃப்ராங்க் ரூபன் பிபிசியிடம் கூறினார்.

மேலே இருந்து வீசப்பட்ட நாய் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாக குன்றத்தூர் காவல்நிலையத்தின் ஆய்வாளர் பிபிசியிடம் கூறினார்.

அதன் காலில் மட்டுமே காயம் ஏற்பட்டிருப்பதாகவும் அதற்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்