'மீண்டும் எழுதுவேன்'- பெருமாள் முருகன் அறிவிப்பு

  • 6 ஜூலை 2016

'மாதொருபாகன்' நாவலை எழுதிய எழுத்தாளர் பெருமாள் முருகன், மீண்டும் எழுதப்போவதாக அறிவித்திருக்கிறார்.

இது குறித்து முகநூல் மூலமாக அறிக்கை வெளியிட்டிக்கும் அவர், தீர்ப்பு மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாகவும் உள்ளொடுங்கிப் புகைந்த மனதிற்குப் பெரும் ஆறுதலாக இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

"எழுத்தாளர் உயிர்த்தெழுந்து மீண்டும் எழுதட்டும்" என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பின் இறுதி வாசகத்தின் ஒளியைப் பிடித்து எழ முயல்வதாகவும் மகிழ்ச்சிப் பரவசம் காரணமாக மனது இன்னும் கொஞ்சம் அவகாசம் கேட்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

எழுத்தாளர் பெருமாள் முருகனின் 'மாதொரு பாகன்' நாவலுக்குத் தடைவிதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

படத்தின் காப்புரிமை

தமிழ்ப் பேராசிரியரும் பிரபல தமிழ் எழுத்தாளருமான பெருமாள் முருகன் எழுதி 2010ஆம் ஆண்டில் வெளியான 'மாதொருபாகன்' என்கிற நாவல் திருச்செங்கோட்டின் பிரபல கோவில் திருவிழாவையும், ஹிந்து மதக்கடவுளரையும், இந்து பக்தர்களையும் இழிவு செய்வதாக பல்வேறு அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் இந்தத் தீர்ப்பை உயர் நீதிமன்றம் வழங்கியது.

'மாதொரு பாகன்' நாவலுக்குத் தடைவிதிக்க வேண்டும், எழுத்தாளர் பெருமாள் முருகன் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளுடன் இந்த வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

பெருமாள் முருகன் மீது கிரிமினல் வழக்குத் தொடர வேண்டும் என்ற கோரிக்கையையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

2010ஆம் ஆண்டில் 'மாதொரு பாகன்' நாவல் வெளியிடப்பட்டது. திருசெங்கோட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில் திருவிழாவையும் குழந்தையில்லாத பெண்களையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த நாவல் இந்து மதத்தையும் குறிப்பிட்ட சமூகத்தினரையும் இழிவுபடுத்துவதாக பல்வேறு அமைப்புகள் 2015ஆம் ஆண்டின் துவக்கத்தில் எதிர்ப்புத் தெரிவித்தன.

இதையடுத்து, நாமக்கல் மாவட்ட வருவாய்த் துறை அலுவலர் தலைமையில் 2015 ஜனவரி 12ஆம் தேதி ஒரு சமரசக் கூட்டம் நடத்தப்பட்டு, அதில் பெருமாள் முருகனிடம் நிபந்தனையற்ற மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கப்பட்டது.

இதையடுத்து, பெருமாள் முருகன் என்ற எழுத்தாளர் மரணமடைவதாக தனது முகநூல் பக்கத்தில் பெருமாள் முருகன் அறிவித்தார்.

இந்தச் செய்தி குறித்து மேலும்