துணைவேந்தரின்றி தமிழக பல்கலைக்கழகங்கள்

தமிழ்நாட்டின் முக்கியமான மூன்று பெரிய பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமிக்கப்படாமல் இருப்பது குறித்து கல்வியாளர்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் கவலையும் கண்டனமும் தெரிவித்திருக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty
Image caption ஆவணப்படம்

தமிழ்நாட்டில் உள்ள மிகப் பெரிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகம், பிற குறிப்பிடத்தக்க பல்கலைக்கழகங்களான சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஆகியவை தற்போது துணை வேந்தர்கள் இன்றி இயங்கிவருகின்றன.

மிகப் பழமையான சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த தாண்டவன் கடந்த ஜனவரி மாதத்தில் ஓய்வுபெற்றுவிட்ட நிலையில், அந்தப் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தரை இதுவரை அரசு நியமிக்கவில்லை.

அதேபோல மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த கல்யாணி மதிவாணன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஓய்வுபெற்றுவிட்டார். அங்கும் புதிய துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை.

தமிழகத்தில் உள்ள 500க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளை நெறிப்படுத்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த ராஜாராம் கடந்த மாதம் ஓய்வுபெற்றுவிட்டார். அந்த இடமும் இதுவரை நிரப்பப்படவில்லை.

Image caption சென்னை பல்கலைக்கழகம்

இம்மாதிரி தமிழகத்தின் மூன்று முக்கியமான பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமிக்கப்படாமல் இருப்பது குறித்து கண்டனம் தெரிவித்திருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இதனால், பல்கலைக்கழகங்களின் பல்வேறு பணிகள் முடங்கிக் கிடப்பதாக குற்றம்சாட்டியிருக்கிறார். துணைவேந்தர் பதவிகள் ஏலம் விடப்படுவதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார்.

சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு தேர்வுக் குழு பல மாதங்களுக்கு முன்பே அமைக்கப்பட்டுவிட்ட நிலையிலும் பெரிதாக எந்த முன்னேற்றமும் இல்லை.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தேர்வுக் குழுவில் இடம்பெற்றிருந்த உறுப்பினரான பேராசிரியர் மு. ராமசாமி, அந்தக் குழுவின் முடிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வெளியேறிவிட்டார்.

அந்தப் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரை உடனடியாக நியமிப்பதைவிட நல்ல துணை வேந்தரை நியமிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம் என்கிறார் சேவ் மதுரை காமராஜர் யுனிவர்சிட்டி அமைப்பின் இணை அமைப்பாளரான விஜயகுமார்.

துணைவேந்தர் இல்லாத நிலையில், சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஆகியவை ஒருங்கிணைப்பாளர் குழுவின் மூலம் தற்போது இயங்கிவருகின்றன. இவற்றால் கல்வி குறித்த சரியான முடிவுகளை எடுக்க முடியாது என்கிறார் அரசு கல்லூரி ஆசிரியர் மன்றத்தின் முன்னாள் தலைவர் பா. சிவக்குமார்.

இந்த விவகாரம் குறித்து தமிழக உயர்கல்வித் துறை செயலர் கார்த்திக்கிடம் கேட்டபோது, விரைவில் இது குறித்துப் பதிலளிப்பதாக மட்டும் தெரிவித்தார்.