சென்னை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சிறுவர்கள் தப்பி ஓட்டம்

சென்னையில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டிருந்த சிறுவர்களில் 33 பேர் இன்று தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இவர்களில் 29 பேர்வரை தற்போது மீட்கப்பட்டுள்ளனர். மீதமிருப்பவர்களைக் காவல்துறை தற்போது தேடிவருகிறது.

Image caption அரசினர் கூர்நோக்கு இல்லம்,புரசைவாக்கம்

சென்னை புரசைவாக்கத்தில் அமைந்திருக்கும் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் குற்றங்களில் ஈடுபடும் 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் அடைக்கப்பட்டுவருகின்றனர். தற்போது இந்த இல்லத்தில் 75க்கும் மேற்ப்டடவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இந்த இல்லத்தில் அடைக்கப்பட்டிருக்கும் மூத்த சிறுவர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையில் நேற்றே மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதே போன்ற மோதல் இன்று காலையிலும் ஏற்பட்டது.

இரு தரப்பினரும் பல்வேறு பொருட்களைக் கொண்டு தாக்கிக்கொண்டனர் என்றும் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி 35 சிறுவர்கள் இல்லத்தை விட்டு வெளியேறியதாகவும் காவல்துறை தரப்பு தெரிவிக்கிறது.

இந்தத் தகவலை அறிந்த பெற்றோர்கள், இல்லம் முன்பாகக் குவிந்தனர். தங்கள் குழந்தைகளைப் பார்க்க அனுமதிக்க வேண்டுமெனக் கோரினர்.

Image caption குழந்தைகளைப் பார்க்கக் காத்திருக்கும் பெற்றோர்

சிறு சிறு குற்றங்களுக்கூட காவல்துறையினர் இந்த இல்லத்தில் கொண்டுவந்து அடைத்துவிடுவதாகவும், இங்கு நிலைமை மிக மோசமாக இருப்பதால் தங்கள் குழந்தைகள் மிகவும் பயந்து போயிருப்பதாகவும் இல்லத்தில் அடைக்கப்பட்டிருக்கும் குழந்தைகளின் பெற்றோர் கூறினர்.

Image caption குழந்தைகளைப் பார்க்க அனுமதிக்கக் கோரும் பெற்றோர்

இதற்கிடையில், தப்பிச் சென்றவர்களில் 29 பேரை காவல்துறையினர் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து மீட்டனர். அவர்கள் மீண்டும் இல்லத்தில் கொண்டுவந்து அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையில் கூர்நோக்கு இல்லத்திலிருந்து வெளியேறிய 4 சிறுவர்கள் தங்கள் கைகளையும் உடலையும் கண்ணாடித் துண்டுகளால் பலர் முன்பாக அறுத்துக் கொண்டனர். அந்தச் சிறுவர்களுக்கு தற்போது சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது.

கொலை போன்ற பெரிய குற்றங்களில் ஈடுபட்டதாக கைதுசெய்யப்பட்ட சிறுவர்களையும் சந்தேக வழக்குகளில் பிடிக்கப்பட்ட சிறுவர்களையும் ஒரே இடத்தில் அடைக்கக்கூடாது என்றும் இல்லத்தின் முன்பாக கூடியிருந்த பெற்றோர் கோஷமிட்டனர்.