சென்னை ரயிலில் குண்டு வைத்தவர்கள் 'சிமி' இயக்கத்தினர்: சிபிசிஐடி

  • 11 ஜூலை 2016

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த குண்டுவெடிப்பு தொடர்பான குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுவிட்டதாக இந்த வழக்கை விசாரித்துவரும் குற்றப்பிரிவு புலனாய்வுத் துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Image caption பெங்களூரிலிருந்து சென்னை வழியாக கவுஹாத்திக்கு செல்லும் ரயில் சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் நின்றிருந்தபோது இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது

கடந்த 2014-ஆம் ஆண்டு மே 1-ஆம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காலை நேரத்தில் இரண்டு குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. இதில் ஸ்வாதி என்ற இளம்பெண் ஒருவர் பலியானார்.

இந்த வழக்கை சிபிசிஐடி எனப்படும் தமிழக அரசின் குற்றப்பிரிவு புலனாய்வுத் துறை விசாரித்துவந்தது. இந்த நிலையில், இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உயிரிழந்த ஸ்வாதிக்கு போதுமான இழப்பீட்டை வழங்க வேண்டுமெனக் கோரி, கோவையைச் சேர்ந்த துரை செல்வன் என்ற வழக்கறிஞர் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில், சிபிசிஐடி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை அடையாளம் கண்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிமி இயக்கத்தைச் சேர்ந்த ஐஜாஜுதீன், ஜாகிர் ஹுசைன், மெஹபூப் ஆகிய மூவர்தான் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்குக் காரணமானவர்கள் என்றும் முதலாவது குற்றவாளியான ஐஜாஜுதீன், தெலுங்கானா காவல்துறையுடன் நடந்த மோதலில் கடந்த ஆண்டு ஏப்ரல் 4-ஆம் தேதியே கொல்லப்பட்டு விட்டதாகவும் சிபிசிஐடி தெரிவித்துள்ளது.

Image caption குண்டுவெடிப்பு நடந்த ரயில்பெட்டியில் மோப்பநாய்கள் மூலமும் தடயம் நடந்த தேடும் பணி

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பிற குற்றவாளிகளான ஜாகிர் ஹுசைன், மெஹபூப் ஆகிய இருவரும் ஒதிஷா மாநிலத்தின் ரூர்கேலாவில் கடந்த பிப்ரவரி மாதம் 17-ஆம் தேதி கைது செய்யப்பட்டு விட்டதாகவும் அவர்கள், சென்னை குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தங்களுக்கு உள்ள தொடர்பை ஒப்புக்கொண்டிருப்பதாகவும் சிபிசிஐடி கூறியுள்ளது.

தற்போது மத்தியப் பிரதேசத்தில் ஒரு கொலை வழக்கில் விசாரணையை எதிர்கொண்டுள்ள இவர்களை சென்னைக்கு அழைத்துவந்து விசாரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் குற்றப்பிரிவு புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.

உயிரிழந்த ஸ்வாதிக்கு ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டிருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சிபிசிஐடியின் வாதத்தை ஏற்றுக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் முதலாவது அமர்வு, இந்த வழக்கை தேசியப் புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும் என்று கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து முடித்துவைத்தது.

குண்டுவெடிப்பு சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போதுதான் முதன்முறையாக காவல்துறை தகவல்களை வெளியிட்டுள்ளது.