கூடங்குளம் அணு உலையின் இரண்டாவது அலகில் மின்சார உற்பத்தி துவக்கம்

கூடங்குளம் அணு உலையின் இரண்டாவது அலகில் மின்சார உற்பத்தி துவங்கியுள்ளது.

ஞாயிற்றுக் கிழமையன்று இரவு 8.56க்கு 'க்ரிட்டிகாலிட்டி' எனப்படும் மின் உற்பத்திக்கான அணுக் கரு தொடர் வினை துவங்கியதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கு முன்னதாக மின்சாரம் தயாரிப்பதற்கான அணுக்கரு பிளவு, வெள்ளிக்கிழமையன்று மாலை 7.52க்குத் துவங்கியது. இதற்கு 48 மணி நேரத்திற்குப் பிறகு மின் உற்பத்தி துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரவு மின் உற்பத்தி துவங்கியதாக அறிவிக்கப்பட்டது.

45 நாட்களில் 400 மெகாவாட்

1000 மெகாவாட் உற்பத்தித் திறனுள்ள இந்த அணு உலையில், 45 நாட்களில் 400 மெகாவாட் உற்பத்தி எட்டப்படும்போது, மின் வழித்தடத்துடன் இணைக்கப்படும். அதன் பின் படிப்படியாக 1,000 மெகாவாட் உற்பத்தி எட்டப்படும் என இந்திய அணுசக்தி கழகம் தெரிவித்திருக்கிறது.

ரஷியா தொழில்நுட்ப உதவியுடன் கட்டப்பட்ட இந்த அணு உலையில், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வைக்கும் பணிகள் மே 11ஆம் தேதி துவங்கி மே 19ஆம் தேதி நிறைவடைந்தன.

கூடங்குளம் அணு உலையின் முதல் அலகில் மின் உற்பத்தி 2013ஆம் ஆண்டு ஜூலை 13ல் துவங்கியது. அதே ஆண்டு அக்டோபரில் மின் வழித்தடத்துடன் இணைக்கப்பட்டது.

இருந்தபோதும், முதல் அலகு தொடர்ச்சியாக பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது.

தமிழகத்திற்கு 562.5 மெகாவாட் மின்சாரம்

முதல் அணு உலையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 1000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் பட்சத்தில் அதிலிருந்து தமிழகத்திற்கு 562.5 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். மீதமிருக்கும் மின்சாரம், அருகிலுள்ள மாநிலங்களுக்கு அளிக்கப்படும்.

இரண்டாவது அலகில் மின் உற்பத்திக்கான தொடர்வினை துவங்கியதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.

''இரண்டாவது அணு உலையில் மின் உற்பத்தி பெரும் சதி''

ஆனால், கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளரான சுப. உதயகுமார், முதல் அணு உலையிலேயே பெரும் பிரச்சனைகள் இருக்கும்போது இரண்டாவது அணு உலையில் மின் உற்பத்தி துவங்கியதாக அறிவிப்பது பெரும் சதி என்று குறிப்பிடுகிறார்.

தமிழகத்தில் உபரியாக உள்ள மின்சாரத்தை பிற மாநிலங்களுக்கு விற்பனை செய்வதற்கு போதிய வழித்தடங்களை அமைக்க வேண்டுமென தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரியிருப்பதைச் சுட்டிக்காட்டும் உதயகுமார், இவ்வாறான நிலையில், மேலும் 2 அணு உலைகளை கூடங்குளத்தில் அமைக்கத் திட்டமிடுவதை ஏற்க முடியாது என்றும் ஜூலை 16ஆம் தேதி இதனை எதிர்த்து பெரும் ஆர்ப்பாட்டத்தை திருநெல்வேலியில் நடத்தப்போவதாகவும் கூறினார்.

கூடங்குளத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலைகளை அமைக்கும் பணிகள் விரைவில் துவங்கவுள்ளன.