ராம்குமாரை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி

மென்பொறியாளர் ஸ்வாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரை, மூன்று நாட்கள் போலிஸ் காவலில் எடுத்து விசாரிக்க தமிழக காவல்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Image caption கோப்புப்படம்

நீதிமன்றக் காவலில் உள்ள ராம்குமாரிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கூறிய தமிழக காவல்துறை, 5 நாட்களுக்கு காவலில் எடுக்க அனுமதி கோரி மனு ஒன்றை தாக்கல் செய்தது.

அதே சமயம் ராம்குமார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு ஒன்றில், ராம்குமாருக்கு உடல் மற்றும் மனதளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி காவல்துறையின் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை பெருநகர 13 வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் முன்பாக ராம்குமார் இன்று ஆஜர்படுத்தப்பட்டிருந்த போது, அவரது உடல்நிலை மற்றும் இதர விவகாரங்கள் தொடர்பாகவும் விசாரணை நடைபெற்றது.

பின்னர் காவல்துறையினரின் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி கோபிநாத், 5 நாட்களுக்கு பதிலாக 3 நாட்களுக்கு மட்டும் ராம்குமாரை காவலில் எடுத்து விசாரிக்க தமிழக காவல்துறைக்கு அனுமதி வழங்கினார்.

முன்னதாக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராம்குமாரை, கடந்த 4 ஆம் தேதியன்று அந்த வளாகத்திலேயே நீதிபதி கோபிநாத் முன்பாக ஆஜர்படுத்தினர்.

அப்போது ராம்குமாருக்கு வரும் 18 ஆம் தேதி வரை, அதாவது 15 நாள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டிருந்தார்.

கடந்த 1 ஆம் தேதி இரவு திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டைக்கு அருகில் உள்ள டி.மீனாட்சிபுரம் பகுதியில் இருந்த ராம்குமாரை தமிழகக் காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது நடவடிக்கையின் போது, ராம்குமார் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தில் தானாகவே தனது கழுத்தை அறுத்துக்கொள்ள முயற்சித்ததாக தமிழகக் காவல்துறை தெரிவித்துள்ளது.