கமல்ஹாசனுக்கு எலும்புமுறிவு: தனியார் மருத்துவமனையில் அறுவைசிகிச்சை

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட நடிகர் கமல்ஹாசனுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

படத்தின் காப்புரிமை
Image caption கோப்பு படம்

நள்ளிரவு 3 மணியளவில், தனது சென்னை ஆழ்வார்பேட்டை அலுவலகத்தின் படிக்கட்டில் சறுக்கி விழுந்த கமல்ஹாசனுக்கு முதுகு மற்றும் காலில் அடிபட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவருக்கு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துள்ளனர். அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை ஒன்றை செய்துள்ளதாகவும், அதனால் கமல்ஹாசன் முழுமையாக குணமடைய ஒரு சில வாரங்களாவது ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கமல்ஹாசனை சந்திக்க அவரது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்டோர், அவர் சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனை இருக்கும் பகுதியில் கூடியுள்ளார்கள்.

'சபாஷ் நாயுடு' என பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன், சென்ற வாரம் தான் அமெரிக்காவில் நடைபெற்று வந்த படப்பிடிப்பிலிருந்து இந்தியாவிற்கு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.