"தவறு செய்து விட்டோம்" - தலித்துகள் தாக்கப்பட்ட விஷயத்தில் குஜராத் போலிஸ் அதிகாரி ஒப்புதல்

குஜராத்தில் பசுவின் தோலை உரித்துக் கொண்டிருந்த தலித்துகள் நால்வர் ஒரு "பசு பாதுகாப்புக் குழுவினரால்" தாக்கப்பட்ட சம்பவத்தை போலிசார் தவறாகக் கையாண்டுவிட்டதாக ஒப்புக்கொண்டிருக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை AP

ஜூலை மாதம் 11ம் தேதி குஜராத்தின் உனா என்ற கிராமத்தில் இந்த சம்பவம் குறித்து புகார் வந்தபோது, சம்பந்தப்பட்ட துணை ஆய்வாளர், இந்த தலித்துகளை போலிஸ் நிலையத்துக்குக் கொண்டுவராமல், அவர்களை பசுப் பாதுகாப்புக் குழுவினரிடம் கையளத்தித்தாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து பிபிசியின் ஹிந்தி சேவையிடம் பேசிய துணைக் காவல் கண்காணிப்பாளர் கே.என்.பட்டேல், உனா போலிசார் சரியான நடவடிக்கையை எடுத்திருந்தால் நிலைமை இவ்வளவு மோசமாகப் போயிருக்காது என்றார்.

இந்தப் பசு பாதுகாப்புக் குழுவினர் அந்த நான்கு தலித்துகளையும் போலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லாமல் மூன்று மணி நேரங்களுக்கும் மேலாக அவர்களைக் கடுமையாகத் தாக்கியிருக்கின்றனர் என்று பட்டேல் கூறினார்.

இந்த நால்வரும் உயிருடன் ஒரு பசுவை தோலுரித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. முதலமைச்சர் ஆனந்திபென் பட்டேல் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை ஒன்றுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை PIB
Image caption விசாரணைக்கு உத்தரவிட்ட முதல்வர் ஆனந்திபென் பட்டேல்

மூன்று மணி நேரமாக இந்த தலித்துகள் தாக்கப்பட்ட பின்னரும்கூட உள்ளூர் போலிசார் தலையிடவில்லை என்று பட்டேல் கூறினார். இந்த சம்பவத்தில் தங்கள் கடமையைச் செய்யத் தவறியதாக நான்கு போலிசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

பசுப் பாதுகாப்புக் குழுவினர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக போலிசார் தாக்கப்பட்ட தலித்துகள் மீதே விலங்கு வதைத் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் எழுந்த எதிர்ப்புகளும், கோபமுமே உள்ளூர் போலிசாரை இப்போது 16 பசுப் பாதுகாப்புக் குழுவினரைக் கைது செய்யவைத்திருக்கிறது.