கல்விக்கடன் விவகாரம், மாணவரின் தற்கொலையை அடுத்து போராட்டம்

பொதுத் துறை வங்கி ஒன்றிலிருந்து கல்விக்கடன் பெற்ற மாணவர் ஒருவர் அந்தக் கடனை வசூலிக்க வந்தவர்கள் செய்த கெடுபிடியின் காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தையடுத்து, தமிழ்நாட்டில் கல்விக் கடன் குறித்த விவாதங்களும் போராட்டங்களும் நடக்க ஆரம்பித்துள்ளன.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த லெனின், பொறியியல் கல்லூரியில் படிப்பதற்காக தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றிலிருந்து இந்திய ரூபாய் ஒரு லட்சத்து 90 ஆயிரத்தைக் கடனாகப் பெற்றிருந்தார்.

பொறியியல் கல்வியில் சில பாடங்களில் தேர்ச்சி பெறாததால், அவரால் வேலைக்குச் செல்ல முடியவில்லை. இதனால்,கடனையும் திருப்பிச் செலுத்தாமல் இருந்தார்.

இந்த நிலையில், சம்பந்தப்பட்ட தேசிய மயமாக்கப்பட்ட வங்கி இம்மாதிரி வழங்கப்பட்ட மாணவர்களுக்கான கல்விக் கடனை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்தது. அந்த தனியார் நிறுவனம் கடன்களை தீவிரமாக வசூலிக்க முடிவெடுத்து, கடன் பெற்றவர்களிடம் கடுமையாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஜூலை 16ஆம் தேதியன்று அந்த மாணவர் தனது வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதையடுத்து இந்த விவகாரத்தை கையில் எடுத்த மாணவர் சங்கங்கள், தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்த ஆரம்பித்துள்ளன.

சென்னையில் இன்று போராட்டம் நடத்திய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் பாரத ஸ்டேட் வங்கியின் தலைமையகத்தை முற்றுகையிட முயன்றனர். இதனைக் காவல்துறையினர் தடுத்ததால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மாணவர்கள் பெற்ற கடன்களை வங்கிகள் வேறு யாருக்கும் விற்கக்கூடாது என மாணவர் சங்கங்கள் கோரியுள்ளன. நாளையும் சில சங்கங்கள் போராட்டங்களை அறிவித்துள்ளன.

பாரத ஸ்டேட் வங்கி தான் அளித்த கடன்களில் சிலவற்றை வராக்கடன்களாக முடிவுசெய்து, அவற்றை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்துள்ளது. இதையடுத்து அந்த நிறுவனம், அந்தக் கடன்களை மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்துள்ள நிலையிலேயே இந்த தற்கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது.