கபாலி பட டிக்கெட்டுகள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார்

படத்தின் காப்புரிமை

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே நடித்து பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் கபாலி திரைப்படம் வெள்ளிக்கிழமை வெளியாகவிருக்கும் நிலையில், அந்தப் படத்தின் டிக்கெட்டுகள் தமிழகம் முழுவதுமே அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் எழுந்திருக்கின்றன.

சென்னையில் சுமார் 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் நாளை வெளியாகவிருக்கும் கபாலி திரைப்படத்திற்கான முதல் மூன்று நாட்களுக்கான டிக்கெட்டுகள் முழுமையாக விற்கப்பட்டுவிட்டன.

பிரபலமான திரையரங்குகள் மட்டுமே முதல் சில நாட்களுக்கான டிக்கெட்டுகளை இணையம் மூலம் வாங்கும் வசதிகளைத் தந்திருக்கின்றன. மற்ற திரையரங்குகள் அனைத்திலும் முதல் சில நாட்களுக்கான டிக்கெட்டுகள் மொத்தமாக விற்கப்பட்டுவிட்டதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வெள்ளிக்கிழமையன்று அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படவிருக்கிறது. பல திரையரங்குகளில் இந்த முதல் காட்சிக்கான டிக்கெட்டின் விலை ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்கப்படுவதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை
ஒட்டுமொத்த விற்பனை?

வேறு ஒரு திரையரங்கில் காலை 6 மணி காட்சிக்கு டிக்கெட் எடுத்தவர்கள் அதற்கு முன்பாக படத்தைப் பார்க்க கூடுதல் விலை கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள்.

சென்னையில் பல நிறுவனங்கள் முதல் சில நாட்களுக்கான டிக்கெட்டுகளை மொத்தமாக வாங்கி, தங்கள் பணியாளர்களுக்கு வழங்கியிருக்கின்றன. ஆனால், ரஜினி ரசிகர்களைப் பொறுத்தவரை முன்பைப் போல ரசிகர் மன்றங்களுக்கு என தனிக் காட்சிகள் போதுமான அளவில் வழங்குவதில்லை என்ற குறை இருக்கிறது.

படத்தின் காப்புரிமை

தமிழகத்தில் 2009ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஓர் அரசாணையின்படி, சென்னையில் திரையரங்குகளில் குறைந்தபட்சக் கட்டணம் 10 ரூபாயாகவும் அதிகபட்ச கட்டணம் 120 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் நிலை நகரங்களில் அதிகபட்சக் கட்டணம் இன்னும் குறைவு. ஆனால், மதுரை, திருச்சி போன்ற நகரங்களில் கபாலி படத்திற்கு முதல் இரண்டு நாட்களுக்கான டிக்கெட் 300 ரூபாய்க்கு மேல் விற்பனையாகி வருகிறது.

பெரும்பாலான திரையரங்குகளில் டிக்கெட்டுகளில் கட்டணம் குறித்த விவரம் இல்லை என்ற புகார் இருக்கிறது.