சிறையில் சித்திரவதை: மனித உரிமை ஆர்வலர் புகார்

சேலம் மாவட்டம் முள்ளுவாடி பகுதியில் ரயில்வே பாதையின் மீது பாலம் கட்டும் பணிகளைத் தடுத்து ஆர்ப்பாட்டம் செய்ததாகக் கைது செய்யப்பட்ட சூழலியல் செயற்பாட்டாளரும் சேலம் மக்கள் குழு ஒருங்கிணைப்பாளருமான பியூஷ் மனுஷ், தான் சிறையில் இருந்தபோது தாக்கப்பட்டதாக புகார் கூறியுள்ளார்.

சிறையிலிருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது இதனைத் தெரிவித்தார்.

மக்களிடம் முறையாக அறிவிப்புச் செய்யாமலும் மாற்றுப் பாதை ஏற்பாடு செய்யாமலும் முள்ளுவாடி பகுதியில் பாலம் கட்டும் பணிகளை மேற்கொண்டதாகக் கூறி சேலம் மக்கள் குழுவினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதையடுத்து இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பியூஷ் மனுஷ் மற்றும் அந்தக் குழுவைச் சேர்ந்த கார்த்திக், முத்து ஆகியோர் கடந்த ஜூலை 8ந்தேதி கைது செய்யப்பட்டனர்.

மற்றவர்களுக்கு கீழ் நீதிமன்றத்தில் கடந்த ஜூலை 14-ம் தேதியன்று ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் பியூஷிற்கு ஜாமீன் வழங்க காவல்துறை ஆட்சேபம் தெரிவித்ததால், ஜாமீன் மறுக்கப்பட்டது.

இதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்ட பியுஷ் மனுஷை முப்பதுக்கும் மேற்பட்ட காவலர்கள் தாக்கியதாக அவரது மனைவி மோனிகா முன்னதாகப் புகார் கூறினார்.

மேலும், சேலம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவையும் தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி, நிபந்தனை ஜாமீன் அளித்து புதன்கிழமையன்று உத்தரவிட்டார்.

இதையடுத்து வியாழக்கிழமை மாலை சிறையிலிருந்து வெளியில் வந்த பியூஷ் மனுஷ், சிறை வாயிலில் கூடியிருந்தவர்களைப் பார்த்ததும் கதறியழத் துவங்கினார். பிறகு, தான் சிறைக்குள் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும் அழுதபடியே தெரிவித்தார்.

பியுஷின் இந்தப் புகார் குறித்து காவல்துறை இதுவரை கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.