நீதிமன்ற முற்றுகை போராட்ட அறிவிப்பு வெளியிட்ட 105 தமிழக வழக்கறிஞர்கள் இடைநீக்கம்

தமிழகத்தை சேர்ந்த 105 வழக்கறிஞர்களை இடைநீக்கம் செய்யதுள்ள இந்திய பார் கவுன்சில், நாட்டின் அனைத்து நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்களில் அவர்கள் வழக்காட தடையும் விதித்துள்ளது.

படத்தின் காப்புரிமை

சென்னை உயர்நீதிமன்றத்தின் வளாகத்திற்கு முன்பாக நாளை (திங்கள்கிழமை) காலை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்கிற அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்த சூழலில், நீதிபதிகளை கூட நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்கிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில் வழக்கறிஞர்கள் மேற்கொள்ளும் போராட்டங்களை கைவிட, இந்திய பார் கவுன்சில் ஜூலை 22 தேதி வரை காலக்கெடு விதித்திருந்தது.

இதன் பின்னரும் கூட முற்றுகை போன்ற போராட்டங்களை நடத்தப்போவதாக அறிவிப்பு வெளியாகியதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர்களால் உருவாக்கப்பட்டுள்ள 'கூட்டு நடவடிக்கை குழு'வின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமலைராஜன், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் செயலாளர் அறிவழகன், மகளிர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் நளினி உள்ளிட்டோர் இடைநீக்கம் செய்யப்பட்ட 105 வழக்கறிஞர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்கள்.

தமிழகத்தில் வழக்கறிஞர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் நீடிக்கும் அசாதாரண சூழல் தொடர்ந்தால், இது போன்ற நடவடிக்கைகள் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.