பாலாற்று தடுப்பணையில் குதித்து விவசாயி தற்கொலை?

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையின் உயரத்தை அதிகரித்ததை எதிர்த்து தமிழக விவசாயி ஒருவர் நேற்று தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் நிலையில், தமிழக அரசு அதனை மறுத்துள்ளது.

சித்தூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பள்ளம் என்ற இடத்தில் உள்ள தடுப்பணையின் உயரத்தை ஆந்திர அரசு 9 அடியிலிருந்து 12 அடியாக உயர்த்தியுள்ளது. அணையின் உயரத்தைக் குறைக்க வேண்டுமென தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அணையின் உயரத்தைக் குறைக்க வேண்டுமெனக் கோரி, ஆந்திர முதல்வருக்கு ஜெயலலிதா கடிதம் ஒன்றையும் எழுதினார்.

இந்த அணை தொடர்பாக உள்ளூர் மக்கள் போராட்டங்களையும் நடத்திவந்தனர்.

இந்த நிலையில், நேற்று மாலையில் கீழ்பள்ளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீநிவாசன் என்பவர், சர்ச்சைக்குரிய தடுப்பணயில் தேங்கியிருக்கும் தண்ணீரைப் பார்த்து வேதனையடைந்து, அதற்குள் விழுந்து தற்கொலைசெய்துகொண்டதாக செய்திகள் ஊடகங்களில் வெளியாயின. அவரது உடல் இன்று காலையில் மீட்கப்பட்டு குப்பம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல் துறையினர் விசாரணயில், ஸ்ரீநிவாசன் அணையில் நின்று வேடிக்கை பார்க்கும்போது உள்ளே தவறி விழுந்து இறந்துவிட்டாரெனத் தெரியவந்துள்ளதாகக் கூறியிருக்கிறார். அவரது குடும்பத்தினருக்கு 3 லட்ச ரூபாய் நிவாரண நிதியும் அறிவித்திருக்கிறார்.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. தமிழக அரசின் அனுமதியைப் பெறாமல் அணையின் உயரத்தை அதிகரித்தது தவறு என அறிவிக்க வேண்டும்;

பெரும்பள்ளம், கங்கணஉறள்ளி, சித்தாவூர், கங்குந்தி ஆகிய இடங்களில் உயர்த்தப்பட்ட தடுப்பணைகளின் உயரத்தைக் குறைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை தமிழக அரசு அந்த மனுவில் முன்வைத்திருக்கிறது.

தமிழக அரசு இந்த விவகாரத்தில் மெத்தனமாக இருப்பதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை குற்றம் சாட்டியுள்ளனர்.

கர்நாடக மாநிலம் கோலாரில் உற்பத்தியாகும் பாலாறு, ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தின் வழியாக வேலூர் மாவட்டத்தில் நுழைந்து தமிழகத்தில் 222 கி.மீ. தூரத்திற்குப் பாய்கிறது.