அதிமுகவிலிருந்து சசிகலா புஷ்பா நீக்கம்

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவை, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி அதிமுக பொது செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை
Image caption கோப்பு படம்

கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால் சசிகலா புஷ்பா, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக, அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014-ஆம் ஆண்டில், அதிமுகவின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராக சசிகலா புஷ்பா தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநிலங்களவை உறுப்பினராக ஆவதற்கு முன்னர், அவர் தூத்துக்குடி மாநகராட்சி மேயராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, கடந்த சனிக்கிழமை மாலையில், புது தில்லி விமான நிலையத்துக்கு வந்திருந்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவை, அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா திடீரென தாக்கியுள்ளார் என்று செய்திகள் தெரிவித்துள்ளன.

அப்போது அங்கு பாதுகாப்புக்கு இருந்த காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்து, பின்னர் தலையிட்டு இருவரை தடுத்ததாகவும் செய்திகள் கூறின.

டில்லியில் உள்ள சசிகலா புஷ்பாவின் இல்லத்தில், திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் கல் வீசி தாக்குதலில் ஈடுப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று இந்த விவகாரம் தொடர்பாக, சசிகலா புஷ்பா மற்றும் திருச்சி சிவா ஆகிய இரு மாநிலங்களவை உறுப்பினர்களும் , தங்கள் கட்சியின் தலைமை முன்பாக விளக்கம் அளித்ததாகவும் செய்திகள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், இன்று மாநிலங்களவையில் சசிகலா புஷ்பா பேசுகையில், ''நடந்த சம்பவத்துக்கு திருச்சி சிவாவிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது. அரசு எனக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும்'' என்று தெரிவித்தார்.

மேலும், தான் மாநிலங்களவை உறுப்பினர் பதவியியிலிருந்து விலக நிர்பந்திக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.