எம்.பி பதவியை ராஜினாமா செய்ய முடியாது: சசிகலா புஷ்பா

அ.இ.அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா தன்னுடைய எம்.பி பதவியை ராஜினாமா செய்ய முடியாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை

கடந்த சனிக்கிழமையன்று, தில்லி விமான நிலையத்தில் , தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவுடன் ஏற்பட்ட மோதலில், அவரது கன்னத்தில் அறைந்தார் சசிகலா புஷ்பா. அதைத் தொடர்ந்து, நடந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிப்பதற்காக சென்னையில் அதிமுக பொதுச் செயலரும், முதல்வருமான ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அழைக்கப்பட்டார்.

இந்த நிலையில், திங்கட்கிழமை காலை மாநிலங்களவையில் இப் பிரச்சினையை எழுப்பினார் சசிகலா புஷ்பா. திருச்சி சிவாவை அடித்தது தவறு என்றும் அதற்காக அவரிடம், அக்கட்சியின் தலைவர்களிடமும் மன்னிப்பு கோருவதாக கண்ணீர் மல்க பேசினார்.

''ராஜிநாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டேன்''

இதனைத் தொடர்ந்து, மதியம் தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா புஷ்பா, தன்னுடைய மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யுமாறு கட்சித் தலைமையால் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், ஆனால் தான் எக்காரணத்தை கொண்டும் ராஜிநாமா செய்யப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Imran Qureshi

போயஸ் கார்டனுக்கு தான் திட்டமிட்டு அழைக்கப்பட்டதாகவும், அங்கிருந்தவர்கள் தன்னை வெளியே போக அனுமதிக்கவில்லை என்றும், கைப்பேசியை பறித்து வைத்துவிட்டதாகவும் குற்றஞ்சாட்டி உள்ளார்.

மேலும், அ.இ.அ.தி.மு.கவில் தலைமையில் உள்ளவர்கள் தன்னுடைய எம்.பி பதவியை ராஜினாமா செய்யக்கோரி நிர்பந்தித்தாகவும், அதற்காக தில்லிக்கு தம்பித்துரையை உடன் அனுப்ப வைத்தாகவும் அவர் கூறினார்.

''தவறு செய்யவில்லை; விலக மாட்டேன்''

ஒரு தவறும் செய்யாத தான் பதவி விலகப்போவதில்லை என்றும், தலைமையால் எப்படிப்பட்ட துன்பங்களை சந்தித்தாலும் அதை எதிர்த்து நிற்ப்பேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும், இந்த விவாகரத்தில் தனக்கு ஆதரவாக இருந்த கனிமொழி மற்றும் காங்கிரஸ் எம்.பிக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார்.

தன்னுடைய எம்.பி பதவியை கட்சித் தலைமை வேறு ஒரு நபருக்கு வழங்கும் முயற்சியில், கடந்த ஆறு மாத காலமாக தன் மீது அவதூறான குற்றச்சாட்டுகளை கட்சித் தலைமை பரப்பி வருவதாகவும் அ.இ.அ.தி.மு.க தலைமை மீது சசிகலா புஷ்பா குற்றஞ் சாட்டியுள்ளார்.