32 தமிழர்களை விடுதலை செய்ய ஆந்திர முதல்வருக்கு ஜெயலலிதா கடிதம்

Image caption ஆவணப்படம்

செம்மரங்களை வெட்டவந்ததாகக் கூறி ஆந்திர மாநிலத்தில் கைதுசெய்யப்பட்டிருக்கும் 32 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக இன்று அவர் சந்திரபாபு நாயுடுவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்த 32 தமிழர்களும் சென்னையிலிருந்து திருப்பதிக்கு கருடாத்ரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றபோது, ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் கைதுசெய்யப்பட்டதாகக் கூறியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை pti

ரயிலில் பயணிகளாகச் சென்றவர்கள், வனம் தொடர்பான குற்றங்களுக்காக கைதுசெய்யப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கும் ஜெயலலிதா, அவர்கள் எந்த வனப்பகுதிக்கும் அருகில் செல்லாதபோது, அவர்களை எப்படி இது தொடர்பாக குற்றம்சாட்ட முடியுமெனத் தெரியவில்லையெனக் கூறியிருக்கிறார்.

ஆகவே ஆந்திர முதல்வர் தலையிட்டு, 32 பேரையும் விடுதலை செய்ய வேண்டுமென்றும் இதற்கென தமிழகத்தின் சார்பில் 2 வழக்கறிஞர்களை நியமிப்பதாகவும் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.