பாஜக முக்கியத் தலைவர் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம்

படத்தின் காப்புரிமை n
Image caption கோப்புப்படம்

உத்தரப் பிரதேச மாநில மூத்த பாரதீய ஜனதா கட்சித் தலைவர்களில் ஒருவரான பிரிஜ்பால் திவோடியா, வியாழக்கிழமை இரவு டெல்லியை அடுத்த காஜியாபாத் அருகே மர்மநபர்களால் சரமாரி துப்பாக்கித் தாக்குதலுக்கு உள்ளானார். அவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முராத் நகரில் இருந்து காஜியாபாத்துக்கு தனது காரில், பாதுகாவலர்கள் உள்ளிட்ட ஐந்து பேருடன் சென்று கொண்டிருந்தபோது, இரண்டு பக்கங்களிலும் இருந்து வந்த கார்களில் இருந்த மர்ம நபர்கள், அவரது காரை நோக்கி ஏராளமான சுற்றுக்கள் துப்பாக்கியால் சுட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படுகாயமடைந்த பிரிஜ்பால், அவரது பாதுகாவலர் ஆகியோர் முதலில் காஜியாபாத்தில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து நொய்டாவில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக போலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்களை மேற்கோள் காட்டி அதிகாரிகள் கூறுகின்றனர்.

தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஏ.கே. 47 ரக துப்பாக்கி, கைத் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் தாக்குதல் நடத்த இடத்திலிருந்து கைப்பற்றப்பட்டிருப்பதாகவும், போலீசார் தீவிர தேடுதல் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும் கூடுதல் டிஜிபி தல்ஜீத் சவுத்ரி தெரிவித்தார். முன்விரோதம் காரணமாக இந்தத் தாக்குதல் நடந்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.