சேலம் ரயில் கொள்ளை வழக்கு: குற்றப் பிரிவு புலனாய்வுத் துறைக்கு மாற்றம்

சேலம் - சென்னை ரயிலில் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பட்ட சேதமடைந்த ரூபாய் நோட்டுகள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பான விசாரணை, மாநில குற்றப் பிரிவு புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Express Photo

இதற்கான உத்தரவு, நேற்று (புதன்கிழமையன்று) இரவில் பிறப்பிக்கப்பட்டது.

சேலம் வட்டாரத்தைச் சேர்ந்த மூன்று தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலிருந்து சேதமடைந்த 500 மற்றும் 1000 ரூபாய் மதிப்பிலான நோட்டுகள் திரட்டப்பட்டு 226 பெட்டிகளில் அடைக்கப்பட்டு ரயில் மூலம் சென்னைக்கு அனுப்பப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு 342.75 கோடியாகும்.

அந்த ரயில் சென்னை வந்து சேர்ந்தபோது ரயில் பெட்டியில் ஓட்டை போடப்பட்டு, 5.75 கோடி ரூபாய் அளவுக்குப் பணம் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் இதுவரை எந்தத் துப்பும் கிடைக்கவில்லை.

ரயில் பெட்டிகளின் தொழில்நுட்பம் தெரிந்தவர்களே இதைச் செய்திருக்க முடியும் என ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் நேற்று தெரிவித்தனர்.

இதற்கிடையில், இது தொடர்பாக இன்று ஆய்வு நடத்திய ரயில்வே பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குனர் எஸ்.கே. பகத், "இது முன்னெப்போதும் நடந்திராத சம்பவம். இதனை அரசு மிகத் தீவரமாக கவனத்தில் கொண்டுள்ளது" என்று கூறினார்.

இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிவனு பாண்டியன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.