மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 60 திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு

தமிழகத்தின் தலைமை செயலகத்திற்குள் அனுமதியின்றி கூடியதற்காகவும், அந்த வளாகத்தில் சட்டப்பேரவையின் போட்டி கூட்டத்தை நடத்தியதற்காகவும், சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவின் 60 உறுப்பினர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை BBC World Service
Image caption கோப்பு படம்

கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதியன்று, தலைமை செயலகம் முன் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் போட்டி சட்டசபை கூட்டம் நடத்தினர். இது தொடர்பாக கோட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அனுமதியின்றி கூடுவது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, நாகர்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய மு.க.ஸ்டாலின், தாங்கள் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்றார்.

தமிழக தலைநகர் சென்னையில் சட்டப்பேரவை மாதிரிக் கூட்டம் நடத்தியதற்காக எங்கள் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக திமுகவை சேர்ந்த சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து மு.க.ஸ்டாலின் மேலும் குறிப்பிடுகையில், நாளை திங்கள்கிழமை நடைபெறவுள்ள காவல்துறை மானியக் கோரிக்கையில் ஜெயலலிதா பேசுவார் என்பதால், அப்போது தி.மு.க.வின் உறுப்பினர்கள் சட்டம் ஒழுங்கை பற்றி பேசக் கூடாது என்பதற்காகவே இத்தகைய வழக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என குற்றஞ்சாட்டினார்.

பிணையில் வெளிவரக்கூடிய சட்டப்பிரிவுகளின் கீழ் தான் இந்த வழக்குகள் பதியப்பட்டுள்ள போதும், இது அரசியல் ரீதியான பழிவாங்கும் போக்கு என மு.க.ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இதற்கிடையே சென்னையில் இதே விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் ஒரு அவசர கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்கள் மத்தியில் பேசிய திமுகவின் மாநிலங்களவை உறுப்பினரும், அதிகாரபூர்வ பேச்சாளருமான டி.கே.எஸ்.இளங்கோவன், இந்த விவகாரத்தில் சட்ட ஆலோசனை பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

தொடர்ந்து நாளையும் திமுக போராட்டங்களை தொடரும் பட்சத்தில், கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, மாநிலம் முழுவதும் நாளை கண்டனக் கூட்டங்கள் நடைபெறும் என திமுக ஏற்கெனவே அரிவித்துள்ளது.