கர்நாடகத்திடம் 50 டிஎம்சி தண்ணீர் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழகம் மனு

கர்நாடக அரசு தமிழகத்துக்கு உடனடியாக பிலிகுண்டுலுவில் இருந்து 50 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக, தமிழக அரசு இன்று தாக்கல் செய்துள்ள மனுவில், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி உத்தரவின்படி, கர்நாடக அரசு ஆகஸ்ட் 19-ம் தேதி நிலவரப்படி, தமிழகத்துக்கு 50.52 டிஎம்சி தண்ணீர் பற்றாக்குறை வைத்திருக்கிறது என சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, மேட்டூர் அணையில் 28 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது. காவிரி பாசனப் பகுதியில் உள்ள 15 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்ய இந்தத் தண்ணீர் போதுமானதாக இல்லை. சாகுபடியை உடனடியாகத் துவங்காவிட்டால் 40 லட்சம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மேலும், தண்ணீர் விடாமல் தாமதப்படுத்துவதால், வடகிழக்குப் பருவமழையால் அந்தப் பயிர்கள் கடுமையாக நாசமாகும் சூழ்நிலையும் ஏற்படும் என தனது மனுவில் தமிழக அரச குறிப்பிட்டுள்ளது.

தண்ணீர் பற்றாக்குறை காலத்திலும், கடந்த 2015-16-ம் ஆண்டில் கர்நாடக அரசு நடுவர் மன்றத்தால் தனக்கு ஒதுக்கப்பட்ட 250 டிஎம்சியை விட கூடுதலாக 53 டிஎம்சி தண்ணீரைப் பயன்படுத்தியுள்ளது என தமிழம் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளது.

அதே நேரத்தில், தமிழகத்துக்கு கடந்த ஜூன் மாதத்தில் இருந்து ஆகஸ்ட் மாதம் 19-ம் தேதி வரை சிறிதளவு தண்ணீர் கூட கர்நாடகத்திலிருந்து வரவில்லை. அதாவது 50.52 டிஎம்சி பற்றாக்குறை உள்ளது. இதுதொடர்பாக, கர்நாடகத்திடமிருந்து கோரிக்கை வைத்தும் எந்தவித பலனும் இல்லை என்று தெரிவித்திருக்கிறது.

2016-17-ஆம் தண்ணீர் ஆண்டில், கர்நாடகத்தில் தென்மேற்குப் பருவமழை சராசரியாக பெய்துள்ளதாகவும் தமிழகம் குறிப்பிட்டிருக்கிறது.

கர்நாடக முதலமைச்சர் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தபோது, இந்த தண்ணீர் ஆண்டில் 150 குளங்களை நிரப்ப அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக, பெரியபட்டணம் அருகே காவிரி ஆற்றில் இருந்து, தண்ணீர் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால், இதுபற்றி நடுவர் மன்றத்துக்கு அவர்கள் தெரிவிக்கவில்லை. நடுவர் மன்றமும் இதற்கு அனுமதியளிக்கவில்லை என தமிழக அரசு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், மேலும் பல நீர்ப்பாசனத் திட்டங்களையும் அனுமதியின்றி கர்நாடகம் செயல்படுத்துவதாகவும், நடுவர் மன்ற உத்தரவுக்கு எதிராக, தனது நீர்ப்பாசனப் பரப்பை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் தமிழகம் தனது மனுவில் குற்றம் சாட்டியுள்ளது.

நடுவர் மன்ற இறுதி உத்தரவின்படி, கர்நாடகத்தின் தண்ணீர் பயன்பாடு மற்றும் நீர்வரத்து குறித்து கண்காணித்து உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும். ஆனால், அந்தக் குழு அவ்வாறு உத்தரவு பிறப்பிக்கவில்லை. அதனால், தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, பிலிகுண்டுலுவில் இருந்து கர்நாடக அரசு உடனடியாக 25 டிஎம்சி தண்ணீரை 10 நாட்களிலும், மீதமுள்ள 25 தண்ணீரை அடுத்த மூன்று வாரங்களுக்குள்ளும் திறந்துவிட உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு தனது மனுவில் வலியுறுத்தியுள்ளது.