''எங்கள் தலைமுறையின் நடிகர் திலகமே'': கமலுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

கலைத்துறையில் ஆற்றிய சேவைக்காக ஃபிரான்ஸ் அரசாங்கம் செவாலியே விருதை கமல் ஹாசனுக்கு நேற்று அறிவித்தது. இதுகுறித்து, திரைப்படத்துறையினரும், அரசியல் பிரமுகர்களும் கமல்ஹாசனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty
எங்கள் தலைமுறையின் நடிகர் திலகம்: ரஜினிகாந்த்

''எங்கள் தலைமுறையின் நடிகர் திலகம் செவாலியே அருமை நண்பர் கமல்ஹாசன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்'' என்று நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்.

மிக முக்கியமான திருப்புமுனை: மு.க.ஸ்டாலின்

திரையுலகில் கடின உழைப்பு, கலைத்திறமை ஆகியவற்றால் சர்வதேச அளவிலான செவாலியே விருது கிடைத்திருப்பன் மூலம் தமிழ் திரையுலகத்திற்கும், ஏன் ஒட்டுமொத்த இந்திய திரையுலகத்திற்குமே நமது கமலஹாசன் அவர்கள் பெருமை சேர்த்திருக்கிறார்.

நடிகர் திலகம் சிவாஜி அவர்களுக்குப் பிறகு செவாலியர் விருது பெறும் தமிழ் நடிகர் கமல்ஹாசன் என்பது எனக்கு மட்டுமல்ல, தமிழ் திரையுலகில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும்.

படத்தின் காப்புரிமை DMK

"களத்தூர் கண்ணாம்மா" படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, திரைத்துறையில் கடந்த அரை நூற்றாண்டுகளாக கொடி கட்டிப் பறந்து வரும் அவர் இதுவரை பத்மஸ்ரீ, பத்மபூஷன் மற்றும் கலைத்துறையினருக்கு வழங்கப்படும் பல்வேறு தேசிய, மாநில விருதுகளையும், ஃபிலிம் பேர் விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

அவரது சாதனைக்கு மேலும் ஒரு மகுடம் சூட்டுவது போல் கிடைத்திருக்கும் ஃபிரான்ஸ் நாட்டின் செவாலியே விருது திரையுலக வாழ்வில் அவருக்கு மிக முக்கியமான திருப்பு முனையாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

நடிகர், இயக்குநர், திரைக் கதாசிரியர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடாலாசிரியர் என சினிமாவில் பன்முகத் திறமையாளரான நடிகர் கமல்ஹாசன் அவர்கள் மேலும் பல விருதுகளை வாங்கிக் குவிக்க வேண்டும்'' என்று தி.மு.கவின் மு.க ஸ்டாலின் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகிற்கு கிடைத்த அங்கீகாரம்: தென்னிந்திய நடிகர் சங்கம்

''கமல்ஹாசனுக்கு செவாலியே விருதை ஃபிரான்ஸ் அரசாங்கம்அறிவித்துள்ளதை தமிழ் திரையுலகிற்கு கிடைத்த ஓர் அங்கீகாரமாக நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களால் பாராட்டப்பட்ட கமல்ஹாசன் அவர்களுக்கு அதே செவாலியே விருது கிடைத்திருப்பது சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது'' என்று தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.