சிறுவாணி விவகாரம்: செப். 3 -இல் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கான மத்திய அரசின் அனுமதியை, கேரள மாநில அரசுக்கு வழங்க கூடாது என்பதை வலியுறுத்தும் ஆர்ப்பாட்டம் ஒன்றை, வரும் செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதியன்று கோவையில் நடத்தப் போவதாக திமுக பொருளாளரும் சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை BBC World Service
Image caption கோப்புப் படம்

திமுக தலைவர் கருணாநிதியும் இன்று இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்ட மத்திய அரசு ஒப்புதல் வழங்கினால், தமிழ்நாட்டின் மூன்று மாவட்டங்கள் பாலைவனமாகி விடும் என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளின் சார்பிலான அறிக்கைகளை வெளியிட்ட பிறகே, தமிழக அரசு விழித்துக் கொண்டு, தமிழக முதலமைச்சர் அவசர அவசரமாக ஆனால் வழக்கம் போல, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு அது தொடர்பான கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாகவும் கருணாநிதி கூறியுள்ளார்.

2012 -ஆம் ஆண்டிற்குப் பிறகு நான்கு ஆண்டுகள் ஆகின்றனவே, இந்த இடைக்காலத்தில் தமிழக அரசு முக்கியமான இந்தப் பிரச்சினை பற்றி டெல்லியில் ஆளும் புதிய அரசுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறதா? நேரில் சந்தித்த போது, பிரதமரிடம் பேசியிருக்க வேண்டாமா? இப்போது அணை கட்டுவதற்கான முயற்சிக்கு மத்திய அரசு ஒப்புதல் தந்த பிறகு, அதனைத் திரும்பப் பெற வேண்டும் என்று கடிதம் எழுதுவது தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிக்கின்ற முயற்சி அல்லவா என்ற சந்தேகங்கள் எல்லாம் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட மக்கள் மத்தியில் எழுகின்றனவா அல்லவா? என்றெல்லாம் திமுக தலைவர் கருணாநிதி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

Image caption சிறுவாணி

முன்னதாக, நேற்று ஆற்றின் குறுக்கே அணை கட்ட நடத்தப்படும் முயற்சிகள் தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா எழுதியிருந்த கடிதத்தில், இந்த அணை திட்டத்திற்கு தமிழகத்தின் எதிர்ப்பினை தெரிவித்துள்ளார்.

இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனத்துறை, பருவநிலை மாற்றம் அமைச்சகம் மற்றும் கேரள அரசிற்கு தமிழக அரசு பல முறை கடிதம் எழுதியுள்ளது. இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனம், பருவ நிலை மாற்ற அமைச்சகம் இந்த அணை திட்ட கருத்துரு குறித்து தமிழக அரசிற்கு கடிதம் இதுவரை எதுவும் எழுதவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக இன்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சிறுவாணி ஆற்றை கேரளா சொந்தம் கொண்டாட முடியாது என்று குறிப்பிட்டார்.

காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கர்நாடக மாநில அரசு தீவிரம் காட்டிவரும் சூழலில், கேரளா அரசின் நடவடிக்கை, பொதுமக்களின் கவலைகளை மேலும் அதிகரித்துள்ளது.