வேண்டாம் குட்டைப் பாவாடை: அமைச்சர் கருத்தால் சர்ச்சை

இந்தியாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஸ்கர்ட் எனப்படும் குட்டைப் பாவாடை அணிய வேண்டாம் என்று அரசு அறிவுறுத்துவதாக கலாசாரத் துறை அமைச்சர் கூறிய கருத்திற்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சுற்றுலாப் பயணிகள் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை என்ற பட்டியல், விமான நிலையத்தில் அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் மேலும் சிறு நகரங்களில் தங்கியிருக்கும் போது இரவில் வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார் ஷர்மா.

பின்னர், கோயில்களுக்கு செல்லும் சமயத்தில் என்று குறிப்பிட்டதாகவும் ஓர் அக்கறையில்தான் அப்படி பேசியதாகவும் விளக்கம் அளித்துள்ளார் ஷர்மா.

கடந்த காலங்களில் இவ்வாறான பல சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்காக ஷர்மா விமர்சனத்திற்கு ஆளானார்.

மேற்கத்திய கலாசாரம் இந்தியாவிற்கு கேடு என்று குற்றம் சாட்டி, ஷர்மா இவ்வாறு ஆத்திரமூட்டும் அறிக்கைகளை அவ்வப்போது வெளியிடுவார்; கடந்த வருடம் பெண்கள் வெளியே செல்வது இந்திய கலாச்சாரத்தில் இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.

சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்தில் “வரவேற்பு பெட்டகம்” ஒன்று வழங்கப்படும் என்றும் அதில் “செய்யக்கூடியவை மற்றும் செய்ய தகாதவை ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும் என ஞாயிறன்று நிருபர்களிடம் பேசும் போது, இந்த கருத்தை வெளியிட்டுள்ளார் ஷர்மா.

படத்தின் காப்புரிமை AFP

“சிறு நகரங்களில் தங்கியிருந்தால் இரவில் வெளியே வரக்கூடாது, பாவாடைகள் அணியக் கூடாது; பயணம் செய்யும் கார்களின் புகைப்படங்களை தற்காப்பிற்காக தங்களது நண்பர்களுக்கு அனுப்ப வேண்டும் போன்ற வழிமுறைகள் அதில் இருக்கும்.”

சுற்றுலாப் பயணிகளுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்படுகிறதா என நிருபர் ஒருவர் கேட்டதற்கு, இந்தியா “கலாசாரமிக்க ஒரு நாடு” ஆடை உடுத்திக் கொள்ளும் போது கோயில்களுக்கென்று சில ஆடைக் கட்டுப்பாடுகள் உள்ளது என்பதை தயவு செய்து கருத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து அமைச்சர் விளக்கம் அளித்த போதிலும் சமூக ஊடங்களில் அவரின் இந்த கருத்திற்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.