சசிகலா புஷ்பாவின் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவின் முன் ஜாமீன் மனு தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை
Image caption கோப்புப் படம்

சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் மீது தொடுக்கப்பட்டுள்ள பாலியல் புகார் தொடர்பான வழக்கில் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை முன்பாக இன்று திங்கள்கிழமை நடைபெற்றது.

நீதிபதி வேலுமணி முன்பாக கிட்டத்தட்ட 2 மணி நேரம் நடைபெற்ற இன்றைய விசாரணைக்கு பிறகு தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.

சசிகலா புஷ்பா தரப்பில் வழக்கறிஞர் வீரகதிரவன் ஆஜராகி வாதாடினார்.

அவரது வாதத்தில் 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற விவகாரம் தொடர்பாக 5 ஆண்டுகளுக்கு பிறகு, 2016-ஆம் ஆண்டில் கால தாமதமாக புகார் தெரிவிக்கப்பட்டது ஏன் என்று வீரகதிரவன் கேள்வி எழுப்பினார்.

போஸ்கோ என குறிப்பிடப்படும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளதும் தவறு எனவும் கூறி வீரகதிரவன் வாதங்களை முன்வைத்தார்.

அரசு தரப்பிலான வாதத்தில், சசிகலா புஷ்பா வக்காளத்தில் முறையாக கையெழுத்திடவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டன.

இதன் பின்னரே வழக்கு விசாரணையின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக மதுரையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய சசிகலா புஷ்பா, தன்னை போன்ற பெண்களுக்கு முறையான பாதுகாப்பை அளித்து, கண்ணியமாக செயலாற்ற அனுமதிக்க வேண்டும் என கோரினார்.

பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் மீதும் அவரது குடும்பத்தார் மீதும் தூத்துக்குடியில் புகார் செய்யப்பட்டது.

அதன்பேரில் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறி, சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வரன் மற்றும் மகன் பிரதீப் ராஜா ஆகியோர் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தொடர்ந்து அந்த வழக்கில் தன்னைக் கைது செய்ய வாய்ப்பு இருப்பதால், உயர்நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா மனுத்தாக்கல் செய்தார்.

பின்னர் சசிகலா புஷ்பா மாநிலங்களவை உறுப்பினராக இருப்பதால், எங்கும் ஓடிவிட மாட்டார் என கருத்துக்கூறிய இந்திய உச்சநீதிமன்றம், அவரை 6 வாரங்களுக்கு கைது செய்யக்கூடாது என கடந்த 26 ஆம் தேதியன்று தடைவிதித்து உத்தரவிட்டது

அதே சமயம் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி அவர் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அப்போது கூறியிருந்த காரணத்தால் தான் இன்று சசிகலா புஷ்பா மதுரையில் ஆஜராகியிருந்தார்.