பச்சமுத்துவுக்கு போலீஸ் காவல்

படத்தின் காப்புரிமை

பண மோசடி வழக்கில் கைதாகியுள்ள எஸ்.ஆர்.எம். கல்வி குழுமத்தின் தலைவரும் இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனறுமான பச்சமுத்துவை ஒருநாள் போலீஸ் காவலில் எடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப்பிரிவு காவல் துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு ஒன்றில், பச்சமுத்துவை 5 நாட்களுக்கு தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணை இன்று செவ்வாய்க்கிழமை சைதாப்பேட்டை 11 ஆவது நீதிமன்றத்தில் நீதிபதி பிரகாஷ் முன்பாக நடைபெற்றது.

காவல்துறையினரின் வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி பிரகாஷ், 5 நாட்களுக்கு பதிலாக 1 நாள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார்.

நீதிமன்றத்தின் உத்தரவின்படி புதன்கிழமை காலை முதல் மாலை வரை பச்சமுத்துவிடம் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொள்வார்கள்.

பின்னர் மாலை 5.30 மணியளவில் பச்சமுத்து மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.

பச்சமுத்துவின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான விசாரணை, செப்டம்பர் 1 ஆம் தேதியன்று நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ கல்லூரியில் சேர்க்கைக்காக பணம் பெற்று மோசடி செய்ததாக எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டையடுத்து, பச்சமுத்து மீது குற்றவியல் சட்டத்தின் 406, 34, 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.