பச்சமுத்துவின் ஜாமீன் மனு மீண்டும் ஒத்திவைப்பு

பண மோசடி வழக்கில் கைதாகியுள்ள எஸ்.ஆர்.எம். கல்வி குழுமத்தின் தலைவரும், இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனருமான பச்சமுத்துவின் ஜாமீன் மனு மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை

ஒரு நாள் போலிஸ் காவலில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட பச்சமுத்துவை, காவல்துறையினர் இன்று புதன்கிழமை மாலை 6 மணியளவில் சைதாப்பேட்டை 11 ஆவது நீதிமன்றத்தில் நீதிபதி பிரகாஷ் முன்பாக ஆஜர்படுத்தினார்கள்.

அப்போது குற்றப்பிரிவு காவல்துறையினர் தரப்பில், பச்சமுத்து, விசாரணைகளுக்கு போதுமான ஒத்துழைப்பு அளித்ததாக கூறப்பட்டது.

தொடர்ந்து பச்சமுத்துவின் ஜாமீன் மனு மீதான விசாரணையையும் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

அதே சமயம் பச்சமுத்து தரப்பின் கோரிக்கை மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு முதல் வகுப்பு சிறை வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

அதன் பின்னர் காவல் பாதுகாப்புடன் பச்சமுத்து மீண்டும் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

பச்சமுத்து மீது இந்தியக் குற்றவியல் சட்டத்தின் 406, 34, 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மருத்துவ சேர்க்கைக்கு பணம் பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விவகாரத்திலேயே பச்சமுத்து மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் முக்கியப் புள்ளியாகக் கருதப்படும் காணாமல் போன மதன் என்பவரை காவல் துறையினர் இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.