தமிழகத்துக்கு தண்ணீரை திறந்துவிட்டது கர்நாடகா

  • 7 செப்டம்பர் 2016

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தமிழகத்துக்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட்டுள்ளது.

கபிணி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய இரு அணைகளில் இருந்தும், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் சுமார் 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை மாலை, பெங்களூருவில் முதலமைச்சர் சித்தராமய்யா தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கு, பாரதீய ஜனதா, மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வெளிநடப்புச் செய்தன.

பத்து நாட்களுக்கு தலா 15 ஆயிரம் கனஅடி நீரை தமிழகத்துக்கு கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என்று கடந்த திங்கட்கிழமை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, தண்ணீர் திறந்துவிட முடிவு செய்துள்ள கர்நாடக அரசு, அதே நேரத்தில் உச்சநீதிமன்றம் தனது உத்தரவை மறுபரீசீலனை செய்யக் கோரி மீண்டும் புதன்கிழமை மனுத்தாக்கல் செய்ய உள்ளது.

தொடர்கிறது போராட்டம்

அதே நேரத்தில், கர்நாடக அரசின் முடிவை எதிர்த்து, பெங்களூர், மைசூர், மண்டியா உள்ளிட்ட பகுதிகளில் இரண்டாவது நாளாக போராட்டங்கள் நடைபெறுகின்றன. பொதுப் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் இருந்து மைசூர், மண்டியா நகரங்களுக்கு பஸ் போக்குவரத்து இயக்கப்படவில்லை. பெங்களூரில், கன்னட அமைப்பினர் ரயில் நிலையத்துக்குள் புகுந்து ரயில் மறியலில் ஈடுபட முயன்றனர்.

இதற்கிடையில், 50 டிஎம்சி தண்ணீர் வேண்டும் எனக் கோரிய தமிழ்நாடு, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, காவிரி மேற்பார்வைக் குழுவிடம் விரைவில் மனுத்தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று தினங்களுக்குள் மேற்பார்வைக் குழுவை அணுகுமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கடந்த திங்கள்கிழமை உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்