திருநெல்வேலி: உவரி தேர் பவனி விபத்தில் 4 பேர் பலி

படத்தின் காப்புரிமை BBC World Service

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உவரியில் மாதா கோவில் சப்பர பவனியின் போது மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர். 16 பேர் காயமடைந்துள்ளனர்.

உவரியில் உள்ள வேளாங்கண்ணி மாதா கோவிலில் நடக்கும் பத்து நாள் திருவிழாவில், கடந்த பல ஆண்டுகளாக சப்பர பவனி எனப்படும் தேர் திருவிழா நடந்துவருகிறது. இந்த ஆண்டு திருவிழாவில் ஒன்பதாவது நாளான இன்று அந்த பவனி நடத்தப்பட்டது.

இன்று காலை ஒன்பதரை மணியளவில் சப்பர பவனி துவங்கிய நிலையில், சிறிது நேரத்திலேயே சப்பரம் செல்லும் வழியில் தாழ்வாகத் தொங்கிக் கொண்டிருந்த மின்சார கம்பிகளில் சப்பரம் உரசியது.

இதில் அந்தச் சப்பரத்தை தாங்கிச் சொன்ற ராஜா, கிளைவ், நிமோ, ராஜா ஆகிய நான்கு பேர் உயிரிழந்தனர். இவர்களில் மூவருக்கு திருமணமாகவில்லயென்றும் ஒருவர் திருமணமாகி இரு குழந்தைகளை உடையவர் என்றும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றனர். நான்கு பேருமே மீனவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் பதினைந்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். அவர்கள் திசையன் விளையில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

மின் வாரியம் சப்பரம் பவனிவரும் பகுதியில் மின்சாரத்தைத் துண்டிக்காததே, விபத்திற்குக் காரணம் என அப்பகுதி மக்கள் ஊடகங்களிடம் புகார் தெரிவித்தனர்.

இந்த தேர் பவனிக்கென முறையான அனுமதி பெறவில்லையென்று மாவட்ட துணை ஆட்சியர் விஷ்ணு தெரிவித்திருக்கிறார். இழப்பீடு வழங்குவது குறித்து அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.