பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்று தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு சாதனை

படத்தின் காப்புரிமை AFP

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்று வரும், மாற்றுத் திறனாளர்களுக்கான பாராலிம்பிக் போட்டியில், ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் டி-42 பிரிவில், தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

அதே போட்டியில், இந்தியாவின் இன்னொரு வீரர் வருண் சிங் பாட்டி வெண்கலப்பதக்கம் வென்றார்.

மாரியப்பன் தங்கவேலு, அதிகபட்சமாக 1.89 மீட்டர் உயரம் தாண்டினார். வருண் சிங் பாட்டி, 1.86 மீட்டர் உயரம் தாண்டினார்.

படத்தின் காப்புரிமை Reuters

அதில், இந்தியாவின் இன்னொரு வீரர் சரத் குமார், ஆறாவது இடம் பெற்று பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். அமெரிக்காவின் சேம் க்ரூவ் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

அந்தப் போட்டியில் பங்கேற்ற 12 போட்டியாளர்களில், 6 பேர் தங்களது எட்டாவது முயற்சியில், 1.74 மீட்டர் உயரத்தைக் கடந்ததால், போட்டி கடுமையாக இருந்தது. மாரியப்பன் தங்கவேலு 10-வது முயற்சியில், 1.77 மீட்டரைக் கடந்தார். அவருடன், போலந்து, சீனா மற்றும் இந்திய வீரர் சரத் குமார் ஆகியோரும் அந்த உயரத்தை எட்டினர்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption தங்கம் வென்ற மாரியப்பன், வெண்கலம் வென்ற வருண் சிங் பாட்டி

அடுத்த கட்டங்களில், போட்டி மூன்று பேருக்கு மட்டும் என்ற நிலையில், வருண் சிங் பாட்டி, மாரியப்பன் தங்கவேலுவுடன் 1.83 மீட்டர் தாண்டினார்.

தங்கம், வெள்ளி இரண்டையும் இந்தியாதான் வெல்லப் போகிறது என்று இருந்த கட்டத்தில், அமரிக்க வீரர் 1.86 மீ்ட்டர் தாண்டினார். இந்திய வீரர்களும் அதை சமன் செய்தார்கள்.

பரபரப்பான இறுதி ஆட்டத்தில், மாரியப்பன் தங்கவேலு 1.89 மீட்டர் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார்.

மாரியப்பன் தங்கவேலு, சேலம் மாவட்டம் பெரிய வடகம்பட்டியைச் சேர்ந்தவர்.

தொடர்புடைய தலைப்புகள்