மாநிலங்களிடம் புள்ளிவிவரம் கேட்கும் காவிரி மேற்பார்வைக் குழு

அனுமதிக்கப்படாத அளவு தண்ணீர் பயன்படுத்தப்பட்டிருப்பதால், அதுதொடர்பான புள்ளிவிவரங்கள் கிடைத்த பிறகே அடுத்தகட்டமாக முடிவெடுக்க முடியும் என்று காவிரி மேற்பார்வைக் குழு தெரிவித்துள்ளது.

அடுத்த கூட்டம் வரும் 19-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை, மத்திய நீர்வளத்துறைச் செயலர் சஷிசேகர் தலைமையில் நடந்த மேற்பார்வைக்குழுக் கூட்டத்தில், கர்நாடகம், தமிழ்நாடு, புதுவை மற்றும் கேரள மாநில பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

தண்ணீர் அதிகமாக வரும், பருவமழை காலங்களில், கர்நாடக அரசு நடுவர் மன்ற உத்தரவில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக பயன்படுத்தியிருப்பதாக தமிழக அரசின் சார்பில் புகார் முன்வைக்கப்பட்டது.

அதேபோல், தமிழகத்துக்கு தென்மேற்குப் பருவமழையை விட, வடகிழக்குப் பருவமழை காலத்தில் அதிக மழை கிடைப்பதாக கர்நாடக அரசின் சார்பில் புகார் கூறப்பட்டது.

இதுதொடர்பாக, அறிவியல் பூர்வமான புள்ளிவிவரங்களை வழங்குமாறு குழுவின் தலைவர் கோரிக்கை விடுத்தார். ஆனால், இருதரப்பும் அந்த விவரங்களை வழங்கவில்லை.

இதையடுத்து, அந்த விவரங்கள் இல்லாமல் முடிவெடுக்க முடியாது என குழுவின் தலைவர் தெரிவித்தார்.

தண்ணீர் பற்றாக்குறை காலங்களில், எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்பது தொடர்பாக நடுவர் மன்றம் தெளிவான உத்தரவு பிறப்பிக்கவில்லை என கர்நாடக அரசின் சார்பில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதால்தான் தண்ணீர் திறந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதே நேரத்தில், கர்நாடகத்தில் போதிய தண்ணீர் இல்லை என்று கூறப்படும் கூற்று தவறு என்று கூறிய தமிழகப் பிரதிநிதிகள், அதுதொடர்பான புள்ளிவிவரங்களைத் தாக்கல் செய்தனர்.

கடந்த ஒன்பது மாதங்களில், நான்கு மாநிலங்களிலும் பெய்த மழை, நீர்த்தேக்கங்களின் இருப்பு விவரம் உள்ளிட்டவற்றை 15-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அவற்றை ஆய்வு செய்த பிறகு, 19-ம் தேதி மீண்டும் கூடி விவாதிக்கப்படும் என்றும் மேற்பார்வைக்குழு தெரிவித்துள்ளது