புஷ் ஹௌஸிலிருந்து இடம் மாறுகிறது பிபிசி தமிழோசை

புஷ் ஹௌஸ்
படக்குறிப்பு,

புஷ் ஹௌஸ்

கடந்த எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக லண்டனின் மையமான புஷ் ஹௌசில் இருந்து உலகெங்கும் பரந்து விரிந்து கிடக்கும் தமிழ் கூறும் நல்லுலகிற்கு உலகச் செய்திகளை ஒளிபரப்பி வந்த பிபிசி தமிழோசை, 12-03-2012 திங்கட்கிழமையிலிருந்து பிபிசியின் புதிய தலைமையிடமாக விளங்கவிருக்கும், புதிய ஒலி மற்றும் ஒளிபரப்பகம், அதாவது , New Broadcasting House என்ற புதிய கட்டிடத்துக்கு இடம் மாறவிருக்கின்றது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம் .

இந்த புதிய ஒலி-ஒளிபரப்பகம் லண்டனின் வணிக மையப் பகுதியான ஒக்ஸ்ஃபோர்ட் சர்க்கஸில் அமைந்திருக்கிறது.

இந்த நியூ புரோட்காஸ்டிங் ஹௌசில் தான் பிபிசி தமிழோசை மட்டுமல்லாது, பிபிசி உலகசேவையின் பிற மொழிப் பிரிவுகள், பிபிசி உலக சேவையின் ஆங்கிலப் பிரிவு, பிபிசி தொலைக்காட்சி, உள்நாட்டு வானொலிப் பிரிவுகள், இணைய தளப் பிரிவுகள் என பிபிசியின் அனைத்து பிரிவுகளும் ஒரே கூரையின் கீழிருந்து செயல்படவிருக்கின்றன.

12 மார்ச் தொடங்கும் இந்த நகர்வானது, பிபிசியின் பல்வேறு பிரிவுகளும் புதிய இடத்துக்கு இடம் மாறி, வரும் டிசம்பர் மாதத்தில் முடிவடையும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நகர்வு திட்டமிட்டபடி முடிவடைந்தவுடன் , புதிய ஒலி-ஒளிபரப்பகம் சுமார் ஆறாயிரம் செய்தியாளர்கள் ஒரே கூரையின் கீழிருந்து செயல்படும் வகையில், ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய செய்திக் கட்டடமாக விளங்கும் என்று மதிப்பிட்டபட்டிருக்கிறது

தமிழோசையைப் பொறுத்தவரை அதன் எழுபது ஆண்டு கால வரலாறே இந்த புஷ் ஹௌசில் தான் உருவானது என்ற வகையில், இந்த மாற்றம் தமிழோசைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

படக்குறிப்பு,

பிபிசியின் புதிய ஒலி/ஒளிபரப்பு நிலையம்

சமீபத்திய செலவின வெட்டுகள் காரணமாக பிபிசி உலக சேவையில் நிறுத்தப்பட்ட மொழிப் பிரிவுகளைத் தாண்டி, எஞ்சியிருக்கும் 27 மொழிப் பிரிவுகளும், பிபிசியின் பிற பிரிவுகளுடன் புதிய ஒளிபரப்பகத்தின் ஐந்தாவது மாடியிலிருந்து புதிய தொழில் நுட்பங்களுடன் இயங்கவிருக்கின்றன .

வரலாற்று சிறப்புமிக்க புஷ் ஹவுஸை விட்டு நீங்க நேரிட்டிருப்பது ஒரு வகையில் வருந்தத்தக்கதுதான். தேம்ஸ் நதிக்கரையின் அருகே அமைந்திருக்கும் புஷ் ஹௌஸிலிருந்து தமிழோசை பல வரலாற்று சிறப்புமிக்க செய்திகளை ஒளிபரப்பியிருக்கிறது.

எனினும், புதிய ஒளிபரப்பகம் புஷ் ஹௌஸைப் போலல்லாமல் பிபிசிக்கே சொந்தமான கட்டிடம்.

பெரும் பொருட்செலவில், புதிய தொழில் நுட்பங்களுடன் அமைந்திருக்கும் இந்தக் கட்டிடத்திலிருந்து மேலும் சிறப்பாக எமது பணிகளை ஆற்ற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

முகவரி, தொலைபேசி மாற்றங்கள்

தமிழோசை நேயர்களுக்கு இந்த இடமாற்றத்தினால், எந்த மாற்றமும் இல்லை.

லண்டன் தபால் முகவரி மாறும். புதிய முகவரியை அடுத்த நேயர் நேரத்தில் அறிவிப்போம். அதுவரை லண்டனுக்கு நேரடியாக எழுதும் நேயர்கள் தற்காலிகமாக தொடர்ந்து பழைய முகவரிக்கே எழுதலாம்.

அந்தக் கடிதங்கள் எம் புதிய முகவரிக்கு வந்தடைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்திய இலங்கை நேயர்கள் தொடர்ந்து உள்ளூர் முகவரிகளுக்கே தங்கள் கடிதங்களை எழுதலாம்.

அதுபோல அலைவரிசை எண்களிலும் தற்போதைக்கு மாற்றமில்லை. இணைய தளம் மூலமாக மின்னஞ்சல் அனுப்பும் நேயர்கள் தொடர்ந்து வழமைபோல அதே முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம். புதிய தொலைபேசி இலக்கங்களை விரைவில் அறிவிக்கிறோம்.

நன்றி!