பிபிசி உலகசேவை நிதிவழி மாற்றம் குறித்து கவலைகள்

Image caption வெளியுறவு அலுவலகத்திலிருந்து பிபிசி உலகசேவைக்கு கிடைத்துவரும் நிதி, வரும் ஏப்ரல் முதல் தொலைக்காட்சி அனுமதிக் கட்டணத்திலிருந்து பெறப்படும்

எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் பிபிசி உலக சேவைக்கான நிதி-வழியில் ஏற்படுகின்ற மாற்றம் குறித்து வெளியுறவு விவகாரங்கள் தொடர்பான பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் தெரிவுக்குழு கவலை வெளியிட்டுள்ளது.

பிபிசியின் ஏனைய செய்திச் சேவைகளைப் போல பிபிசி உலகசேவைக்கான நிதியையும் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து தொலைக்காட்சி அனுமதி கட்டணப் பணத்திலிருந்தே (லைசன்ஸ் ஃபீ) பெறப்படவுள்ளது.

இதுவரை நாட்டின் வெளியுறவு தலைமையகத்திலிருந்தே பிபிசி உலகசேவைக்கான நிதி அளிக்கப்பட்டுவந்தது.

பிபிசி நிர்வாகக் கட்டமைப்புக்குள்ளேயே உலக சேவையின் நிலையை பலப்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையொன்று கேட்டுள்ளது.

பிபிசி உலகசேவைக்கு வணிக கூட்டொப்பந்தங்கள் ஊடாக மேலதிக வருமானத்தை ஈட்டுவதற்கான யோசனைகள் மூலம் பிபிசியின் செய்தி நடுநிலைத் தன்மை கேள்விக்குள்ளாகும் என்றும் அந்த அறிக்கையில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் வணிகரீதியான நன்மைகளைவிட, பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீனமான செய்திக்காக பிபிசிக்கு இருந்துவரும் நற்பெயருக்கே எப்போதுமே முன்னுரிமை அளிக்கப்படும் என்று பிபிசி விடுத்துள்ள அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.