திரைப்படங்களில் நகைச்சுவை : விரைவில் தமிழோசையில்

நகைச்சுவை நடிகர் வடிவேல்
Image caption நகைச்சுவை நடிகர் வடிவேல்

பிபிசி தமிழோசை தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை குறித்து ஆராயும் ஒரு புதிய 15-பகுதித் தொடரைத் துவங்கவிருக்கிறது.

மார்ச் 30 ஞாயிற்றுக்கிழமையிலிருந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒலிபரப்பாகவிருக்கும் “ தமிழ்த் திரையுலகில் நகைச்சுவையின் வரலாறு” என்ற இத்தொடர், தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை, ஒரு குணாம்சமான பிரிவாக தோன்றி வளர்ந்த கதையைச் சொல்கிறது.

தென்னிந்திய மாநகரான சென்னையில் அமைந்திருக்கும் தமிழ்த் திரைத்துறை, இந்தியாவில், மும்பையிலிருந்து இயங்கும் பாலிவுட் திரைத்துறையைப் போல, ஒரு பெரிய வெகுஜன கலாசார நிறுவனம்.

தமிழ்ப் படங்கள், அவைகளின் தொடக்க காலத்திலிருந்தே, ஒரு சுயமான, வளமான நகைச்சுவைப் பாரம்பரியத்தைக் கொண்டு வளர்ந்திருக்கின்றன.

எ.எஸ்.கிருஷ்ணன், தங்கவேலு, எம்.ஆர்.ராதா, டி.எஸ்.பாலையா, நாகேஷ் போன்ற நடிகர்களும், மனோரமா போன்ற நடிகைகளும் வெள்ளித்திரையின் ஆரம்ப நாட்களில் ஆதிக்கம் செலுத்தினர்.

இந்தப் பாரம்பரியம் தொடர்ந்து, பிந்தைய ஆண்டுகளில் கவுண்டமணி, செந்தில், கோவை சரளா, விவேக் , வடிவேல் தற்போது சந்தானம் என்று நீடித்துள்ளது.

சம்பத்குமார் தயாரிக்கிறார்

“தமிழ்த்திரையுலகில் நகைச்சுவையின் வரலாறு” என்ற இந்தத் தொடர் பிபிசி தமிழோசையின் முன்னாள் ஆசிரியர் சம்பத்குமாரால் தயாரித்து வழங்கப்படுகிறது.

“ இந்தத் தொடரில் நடிகர்கள், திரை இயக்குநர்கள், ஆராய்ச்சியாளர்கள், திரை விமர்சகர்கள் என்று எல்லோரும் இணைந்து இந்தத் தொடரில் தங்களது அனுபவங்களையும் நினைவுகளையும், கருத்துக்களையும் என்னிடம் பகிர்ந்து கொண்டு ஒரு நல்ல தொடரை உருவாக்க உதவியிருக்கின்றனர்” என்கிறார் சம்பத் குமார். “ பலரின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் நகைச்சுவை உணர்வையும் தந்த இந்த ஒரு கலைப்பிரிவை ஆராய்ச்சி செய்து இந்த வானொலித்தொடரைத் தயாரித்தது எனக்கு ஒரு அற்புதமான அனுபவம்” என்றும் அவர் கூறுகிறார்.

Image caption நகைச்சுவை நடிகர் சந்தானம்

பிபிசி தமிழோசை கடந்த காலங்களில் திரைப்படத்துறையின் பல்வேறு அம்சங்கள் குறித்த தொடர்களை வழங்கியிருக்கிறது. அரசியலில் திரைத்துறையின் தாக்கம், தமிழ்த் திரைப்பாடல்களின் வரலாறு, தமிழ்த் திரையுலக ஜாம்பவான்கள் என்ற பல தொடர்கள் பிபிசி தமிழோசையில் ஒலிபரப்பாகியிருக்கின்றன.

தமிழ் திரையின் நகைச்சுவை பாரம்பர்யம்

“தமிழ்த் திரைத்துறை, அதன் சுமார் 100 ஆண்டுகால வரலாற்றில், தனக்கென்று ஒரு பிரத்யேகமான நகைச்சுவை பாரம்பர்யத்தை வளர்த்தெடுத்திருக்கிறது. தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை என்ற விஷயம் , தமிழ் மரபுகளைப் பெரும்பாலும் பிரதிபலித்திருக்கிறது என்பதை தமிழோசையின் இந்தத் தொடர் காட்டுகிறது. மேலும், அவ்வப்போது , ஹிந்தி மற்றும் மேலைநாட்டு ஸ்லாப்ஸ்டிக் போன்ற பிற மொழி,பிற கலாசாரக் கூறுகளையும் அது உள்வாங்கியிருக்கிறது என்பதையும் இது காட்டுகிறது. எங்கள் நேயர்கள் வரும் வாரங்களில் ஞாயிற்றுக்கிழமைதோறும் ஒலிபரப்பாகவுள்ள இந்தத் தொடரைக் கேட்டு மகிழ்வார்கள் என்று நம்புகிறோம்” என்று பிபிசி தமிழோசையின் ஆசிரியர் திருமலை மணிவண்ணன் கூறியுள்ளார்.

இத்தொடர், பிபிசி தமிழோசை ஒலிபரப்பாகும் நேரமான ஜிஎம்டி நேரம் 1545 மணியில் ( இந்திய இலங்கை நேரப்படி இரவு 9.15 மணி) வாரந்தோறும் ஒலிபரப்பாகும். இது தவிர பிபிசி தமிழோசையின் இணைய தளமான bbctamil.com (பிபிசிதமிழ்.காம்) என்ற முகவரியிலும், போட்காஸ்ட் வடிவிலும், இதை நேயர்கள் கேட்கலாம்.

பிபிசி தமிழ் சேவையின் ஒலிபரப்பை நேயர்கள் சிற்றலை வரிசைகள் 31 (9500 கிலோஹெர்ட்ஸ்), 22 மீட்டர்கள் (13830), மற்றும் 19 மீட்டர்கள் (15470 கிலோஹெர்ட்ஸ்) மூலம் கேட்கலாம். இது தவிர பிபிசிதமிழ்.காம் என்ற இணைய தளம் மூலமும் , ஒலிபரப்பாகும் அதே நேரத்திலும், ஒலிபரப்பாகி ஒருவாரம் வரையும் நிகழ்ச்சிகளை ஒலி வடிவில் கேட்கமுடியும். நிகழ்ச்சியை பேஸ்புக் மூலமும் நேயர்கள் கேட்கலாம். மொபைல் தொலைபேசி வடிவிலும் இந்த இணைய தளம் செயல்படுகிறது.