Got a TV Licence?

You need one to watch live TV on any channel or device, and BBC programmes on iPlayer. It’s the law.

Find out more
I don’t have a TV Licence.

நேரடிச் செய்தி

இங்கு பிரசுரிக்கப்பட்ட நேரங்கள் அனைத்தும் பிரிட்டன் நேரமே

  1. கொரோனா வைரஸ் இன்று என்ன?

    கொரோனா வைரஸ் தொடர்பாக ஏப்ரல் 14 அன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள.

    இங்கே க்ளிக் செய்யுங்கள்

    கொரோனா வைரஸ்: ”எனக்கே அனைத்து அதிகாரமும்” - டொனால்ட் ட்ரம்ப்

  2. நன்றி நேயர்களே!

    இந்த நேரலை தொகுப்பு இத்துடன் முடிகிறது.

    நாளை காலை மீண்டும் வேறொரு நேரலை தொடங்கும். மேலதிக செய்திகளை பிபிசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள பிற கட்டுரைகளுக்கான இணைப்புகளில் படிக்கலாம்.

    கொரோனா குறித்த பிபிசி செய்திகளை எப்படி படிப்பது?

  3. கொரோனா பாதிப்பு: ‘உச்ச நிலையை நெருங்குகிறது அமெரிக்கா’

    அமெரிக்காவில் கொரோனா வைரஸின் பாதிப்பு ‘உச்ச நிலையை நெருங்கி வருவதாக’ அந்த நாட்டின் மூத்த சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

    அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மற்றும் நோய்த்தடுப்பு மையத்தின் இயக்குநர் ராபர்ட் ரெட்பீல்டு, அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், கொரோனா வைரஸ் பாதிப்பு அந்த நாடு முழுவதும் ‘நிலைப்பட்டு வருவதாக’ கூறியுள்ளார்.

    உலக அளவில் கோவிட்-19 நோய்த்தொற்றிலும், உயிரிழப்பிலும் மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அதாவது, அமெரிக்காவில் 5,57,663 பேர் கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

    இருப்பினும், அமெரிக்காவில் கோவிட்-19 நோய்த்தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் கடந்த சில நாட்களாக உயிரிழப்புகள் குறைந்து வருகின்றன.

    அமெரிக்க பொருளாதாரத்தை மீட்டெடுப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “அது படிப்படியாக மேற்கொள்ளப்படும்” என்று கூறினார்.

    அமெரிக்கா
  4. நியூயார்க்கில் பத்தாயிரத்தை கடந்த உயிரிழப்புகள்

    அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தை கடந்துள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் நியூயார்க்கில் 671 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த மாகாணத்தின் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ தெரிவித்துள்ளார்.

    நியூயார்க் மாகாணத்தில் ஒவ்வொரு நாளும் கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், அது ஒட்டுமொத்த எண்ணிக்கையாக பார்க்கையில் புதிய உச்சத்தை அடைந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

  5. பசிக்கொடுமையால் குழந்தைகளை ஆற்றில் வீசினாரா தாய்?

    நேற்று (ஞாயிற்றுக்கிழமை) டிவிட்டரில் ஒரு செய்தி பலரால் பகிரப்பட்டது. சாதாரண மக்களால் மட்டும் அல்ல, அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் என பலராலும் இந்த செய்தி பகிரப்பட்டு வந்தது.

    "உத்தரப்பிரதேச மாநிலம் பதோய் மாவட்டத்தில் தினக்கூலியாக இருக்கும் பெண் ஒருவர் முடக்கம் காரணமாக சாப்பாடு சரிவரக் கொடுக்க முடியாததால் தன்னுடைய ஐந்து குழந்தைகளை ஆற்றில் வீசினார்" என ஐஏஎன்எஸ் செய்தி முகமை கூறியுள்ளதாக அவுட்லுக்கில் வெளியான செய்திதான் அது.

    இதுகுறித்து விரிவாக படிக்க: ஊரடங்கு உத்தரவால் உணவில்லாமல் குழந்தைகளை ஆற்றில் வீசிய தாய்? - உண்மை என்ன? #BBCFactcheck

  6. கொரோனா தடுப்பு பணியில் ரஷ்ய ராணுவம்?

    ரஷ்யாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ள நிலையில், நாட்டில் நிலைமை மோசமாகி வருவதாக அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

    “கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் நாட்டின் சூழ்நிலை மாறி வருகிறது. கவலையளிக்கும் வகையில் அந்த மாற்றம் நன்மைப் பயக்கும் வகையில் இல்லை” என்று புதின் தனது அரசின் அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

    இத்தாலி மற்றும் மற்ற நாடுகளை போன்று கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்படலாம் என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

    ரஷ்யா
  7. புதுச்சேரியிலும் ஊரடங்கு நீட்டிப்பு

    தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் வரும் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள இரண்டு வார கால முடக்க நிலை நாளையுடன் முடிவுக்கு வரும் நிலையில், ஒடிஷா, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மத்திய அரசு அரசின் அறிவிப்புக்கு முன்னரே ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளன.

  8. பிரிட்டனில் பதினோரு ஆயிரத்தை கடந்த உயிரிழப்புகள்

    பிரிட்டனில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,329 என்னும் புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

    கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 717 பேர் கோவிட்-19 நோய்த்தொற்றால் உயிரிழந்துள்ளதாக பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.

    கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து இதுவரை இங்கிலாந்தில் 10,261 பேர், ஸ்காட்லாந்தில் 575 பேர், வேல்சில் 384 பேர், வடக்கு அயர்லாந்தில் 124 பேர் உயிரிழந்துள்ளனர்.

  9. தாராவியில் அதிகரிக்கும் கோவிட்-19 பாதிப்பு

    தெற்காசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியாக கருதப்படும் தமிழர்கள் பெருமளவில் வசிக்கும் மும்பையின் தாராவி பகுதியில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 49ஆக உயர்ந்துள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது. அவர்களில் இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

    கொரோனா
  10. பெல்ஜியத்தில் தொடரும் உயிரிழப்புகள்

    பெல்ஜியத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,903ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 303 பேர் உயிரிழந்துள்ளனர்.

    மற்ற ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தாலும், வெறும் 1.5 கோடி மக்கள் தொகை கொண்ட பெல்ஜியத்தில் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு, விகிதாச்சார அடிப்படையில் ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளுக்கு நெருக்கமாக உள்ளது அந்த நாட்டில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    பெல்ஜியத்தில் இதுவரை 30,000க்கும் மேற்பட்டோருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

    கொரோனா வைரஸ்
  11. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 1,173ஆக உயர்வு

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,173ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் இதுவரை மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

    “கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 98 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை 58 பேர் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்” என்று தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

  12. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 9,352ஆக உயர்வு

    இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,352ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் இதுவரை மொத்தம் 324 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 905 பேருக்கு பாதிக்கப்பட்ட நிலையில், 51 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  13. கோவிட்-19 தொற்றிலிருந்து மீண்டு வந்த தமிழக இளைஞரின் அனுபவம்

    ராணிப்பேட்டை மாவட்டம் கீழ்விஷரத்தைச் சேர்ந்த 26 வயதான அஹமதுல்லாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானபோது அவரும், அவரது குடும்பத்தாரும் அதிக மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.

    19 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் இருந்த அஹமதுல்லாவுக்கு பக்கபலமாக இருந்தது அவரது பள்ளிக்கூட நண்பர்கள்.

    அஹமதுல்லா தனது அனுபவத்தை பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார்.

    இதுகுறித்து விரிவாக படிக்க: கொரோனா வைரஸ்: கோவிட் 19 தொற்றிலிருந்து மீண்ட வேலூர் இளைஞரின் நம்பிக்கை பகிர்வு

  14. ரஷ்யாவில் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு

    ரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,550 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதிலிருந்து இதுவரை ரஷ்யாவில் ஒரே நாளில் பதிவான அதிகபட்ச பாதிப்பு இதுவே ஆகும்.

    ரஷ்யாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள 18,328 பேரில் 11,500க்கும் மேற்பட்டோர் அந்த நாட்டின் தலைநகர் மாஸ்கோவில் உள்ளனர். அவர்களில் இதுவரை 148 பேர் உயிரிழந்துள்ளனர்.

    பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளை காட்டிலும் ரஷ்யாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறைவாக இருந்தாலும், அந்த நாட்டு அரசு நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் பெரும்பாலான பிராந்தியங்களில் முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா
  15. ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள்

    தமிழகத்தில் ஏப்ரல் 30ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் காரணத்தால் மே மாதத்திற்கென நியாய விலைக் கடைகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள் விலையில்லாமல் தரப்படுமென தமிழக அரசு அறிவித்துள்ளது.

    கட்டடத் தொழிலாளர் உட்பட பதிவுபெற்ற அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் இரண்டாவது முறையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு மே மாதத்திற்கென 15 கிலோ அரசி, பருப்பு, சமையல் எண்ணை ஆகியவை விலையில்லாமல் வழங்கப்படும்.

    இதுகுறித்து விரிவாக படிக்க: தமிழகத்தில் வரும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க உத்தரவு

  16. இரண்டு லட்சம் பரிசோதனைகளை கடந்த இந்தியா

    கொரோனா வைரஸை விரைவாக உறுதிப்படுத்தும் ‘ராபிட் கிட்’ மருத்துவ கருவிகளின் முதல் தொகுப்பு வரும் 15ஆம் தேதி சீனாவிலிருந்து இந்தியா வர உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.

    இன்று மாலை டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தை சேர்ந்த ராமன் கங்ககேத்கர், “இந்தியாவில் நேற்று வரை கோவிட்-19 உறுதிப்படுத்துவதற்காக 2,06,212 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதே எண்ணிக்கையில் நாம் பரிசோதனையை மேற்கொண்டால், அடுத்த ஆறு வாரங்களுக்கு தேவையான மருத்துவ பரிசோதனை கருவிகளின் இருப்பு உள்ளது” என்று கூறினார்.

  17. தமிழகத்தில் ஏப்ரல் 30ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிப்பு

    கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் அமல்படுத்தப்பட்டிருக்கும் இரண்டு வாரகால முடக்க நிலை நாளையுடன் முடிவுக்கு வர உள்ள நிலையில், தமிழகத்தில் வரும் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு.

  18. அமெரிக்காவிலிருந்து வருபவர்களுக்கு கட்டாய பரிசோதனை

    அமெரிக்காவிலிருந்து தங்களது நாட்டுக்கு வரும் அனைவரையும் கட்டாயம் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தும் புதிய நடவடிக்கையை இன்று (ஏப்ரல் 13) முதல் நடைமுறைப்படுத்தியுள்ளதாக தென் கொரியா அறிவித்துள்ளது.

    கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்ட சீனாவும், அதன் அண்டை நாடான தென் கொரியாவும் உள்நாட்டில் நோய்த்தொற்று பரவலை குறிப்பிடத்தக்க அளவுக்கு கட்டுப்படுத்தி உள்ள நிலையில், வெளிநாடுகளிருந்து வருபவர்களால் அங்கு மீண்டும் நோய்த்தாக்கத்தின் அளவு அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

    (கோப்புப்படம்)
    Image caption: (கோப்புப்படம்)
  19. “வரும் செப்டம்பரில் கொரோனா வைரஸ் எதிர்ப்பு தடுப்பூசி”

    கொரோனா வைரஸ் எதிர்ப்பு தடுப்பூசி வரும் செப்டம்பர் மாத வாக்கில் பொது மக்கள் பயன்பாட்டுக்கு வருவதற்கு வாய்ப்புள்ளதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பாற்றலியல் பிரிவு பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

    பிபிசி வானொலி சேவையின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பேராசிரியர் சாரா கில்பர்ட், கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டு வரும் தடுப்பூசியின் முதல்கட்ட பரிசோதனைகள் “வெகு விரைவில் நடைபெற உள்ளது.” அது வெற்றியடையும் பட்சத்தில் மிகப் பெரிய அளவில் உற்பத்தியை மேற்கொள்வதற்கு தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.

    “நாம் பெருமளவிலான உற்பத்தி திறனை இந்த ஆண்டே அடைய முடியாது என்றாலும் கூட, விரைவில் உற்பத்தியை தொடங்குவது சாலச்சிறந்தது” என்று அவர் கூறுகிறார்.

    கொரோனா
  20. ஜெர்மனியில் அதிகரித்து வரும் குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை

    தங்களது நாட்டில் வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை விட அந்த நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஜெர்மனி அறிவித்துள்ளது.

    ஜெர்மனியில் இதுவரை 1,27,854 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 50 சதவீதத்துக்கும் மேலானோர் அந்த நோய்த்தொற்றிலிருந்து முற்றிலும் குணம் அடைந்துள்ளதாக அந்த நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஸ்பெயினில் கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 166,831 பேரில் 37% பேர் அதிலிருந்து மீண்டுள்ள நிலையில், இத்தாலியில் இதுவரை நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள 156,363 பேரில் 22 சதவீதத்தினரும், பிரான்சில் பாதிப்பு உறுதியான 133,670 பேரில் 21 சதவீதத்தினரும் குணமடைந்துள்ளனர். இங்கிலாந்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள 85,208 பேரில் வெறும் 0.3% பேர் மட்டுமே அதிலிருந்து மீண்டுள்ளனர்.

    ஜெர்மனியில் அதிவிரைவாக நோய்த்தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதால் நோய்த்தாக்கத்தின் ஆரம்ப நிலையிலேயே உரியவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதாகவே கூறப்படுகிறது.

    இதை அடுத்து ஜெர்மனியில் அமல்படுத்தப்பட்டுள்ள முடக்க நிலையை பகுதி அளவு தளர்த்துவது தொடர்பாக இன்று ஆலோசிக்கப்பட உள்ளது.

பக்கம் 1 இல் 2