Got a TV Licence?

You need one to watch live TV on any channel or device, and BBC programmes on iPlayer. It’s the law.

Find out more
I don’t have a TV Licence.

நேரடிச் செய்தி

இங்கு பிரசுரிக்கப்பட்ட நேரங்கள் அனைத்தும் பிரிட்டன் நேரமே

  1. நன்றி நேயர்களே! இந்த நேரலை தொகுப்பு இத்துடன் முடிகிறது.

    நாளை காலை மீண்டும் வேறொரு நேரலை தொடங்கும். மேலதிக செய்திகளை பிபிசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள பிற கட்டுரைகளுக்கான இணைப்புகளில் படிக்கலாம்.

    கொரோனா குறித்த பிபிசி செய்திகளை எப்படி படிப்பது?

  2. ஈக்வேடாரில் ஆயிரக்கணக்கில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்

    ஈக்வேடாரில், அதிகாரப்பூர்வ தகவல்படி கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 403ஆக உள்ளது. ஆனால் தற்போதைய தகவல்படி அங்கு ஒரு மாகாணத்தில் மட்டும் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது.

    கயாஸ் மாகாணத்தில் ஏப்ரல் மாதத்தின் முதல் இரண்டு வாரத்தில் 6700 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு தெரிவிக்கிறது.

    கயாஸ் மாகாணத்தில் உள்ள கயாக்வில் என்னும் நகரம்தான் ஈக்வேடாரில் கொரோனா தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதியாகும்.

  3. "உலக சுகாதார நிறுவனத்தில் உள்ள பிரச்சனைகள் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும்"

    கொரோனா பெருந்தொற்று பரவல் முடிந்ததும் உலக சுகாதார நிறுவனத்தில் உள்ள பிரச்சனைகள் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கூறியுள்ளார்.

    "இது உலக சுகாதார நிறுவனத்தை ஆதரிக்க வேண்டிய நேரம். ஆனால் பிரச்சனைகளும் சவால்களும் உள்ளன. கொரோனா பரவல் முடிந்தபின் அவற்றை ஆராய வேண்டும்," என்று அவர் தெரிவித்துள்ளார்.

    எனினும் அந்த நிறுவனத்துக்கு வழங்கும் நிதியுதவியை நிறுத்தப்போவதில்லை என்று அவர் கூறியுள்ளார். அமெரிக்கா அந்த நிறுவனத்துக்கு வழங்கும் நிதியுதவியை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ள நிலையில் ஜப்பான் பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.

    ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே
    Image caption: ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே
  4. கொரோனா வைரஸை முதன் முதலில் கண்டறிந்த பெண்மணியின் போராட்டக் கதை

    ஜூன் அல்மெய்தா என்ற பெண்மணி, கொரோனா வைரஸ் வகைகளின் முதல் வகை வைரஸை, இப்போது நடக்கும் கோவிட் 19இன் தாக்குதலுக்கு பல்லாண்டுக்களுக்கு முன்பே கண்டறிந்துள்ளார்.

    16 வயது வரை மட்டுமே பள்ளிக்கல்வி பெற்று, பிறகு, பேருந்து ஓட்டுநராக பணியாற்றிய ஒருவரின் மகளான ஜூன் அல்மெய்தா, மனிதர்களுக்குப் பரவும் முதல் கொரோனா வைரஸை கண்டறிந்தார்.

    வைரஸ்களை எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப் உதவியுடன் படமாக்கும் வைரஸ் இமேஜிங் துறையில் முன்னேடியாக திகழ்ந்த ஜூனின் பணிகள் தற்போதைய வைரஸ் தாக்குதலில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

    கோவிட்- 19 தொற்றை உண்டாகும் சார்ஸ் கொரோனா வைரஸ் - 2 (sars-cov-2) என்பது புதிய வைரஸ் என்றாலும், 1964ஆம் ஆண்டு,லண்டனில் உள்ள புனித தாமஸ் மருத்துவமனையில், மருத்துவர் ஜூன் அல்மெய்தா கண்டறித்த கொரோனா வைரஸின் குடும்பத்தையே இதுவும் சார்ந்துள்ளது.

    1930ஆம் ஆண்டு, ஜூன் ஹார்ட் என்ற பெயரில் பிறந்து, ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவின் வடகிழக்கு பகுதியில் இவர் வளர்ந்தார். மிகவும் குறைந்த பள்ளிக்கால அனுபவத்துடன் வெளியே வந்த அவர், கிளாஸ்கோ ராயல் மருத்துவமனையில், மெய்ம்மி நோயியல் (ஹிஸ்டோபோதோலோஜி) துறையில், ஆய்வகராக பணியில் இணைந்தார்.

    பிறகு, லண்டனிற்கு வந்து சேர்ந்த ஜூன், 1954ஆம் ஆண்டு, வெனிசுவேலாவைச் சேர்ந்த கலைஞரான எண்ட்ரிக் அல்மெய்தாவை திருமணம் செய்துகொண்டார்.

    ஜூன் அல்மெய்தா மற்றும் அவரின் பணி குறித்து மேலும் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்

  5. மலேசியாவில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது

    மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இன்று ஒரே நாளில் அங்கு 69 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. அதேவேளையில் 221 பேர் சிகிச்சைக்குப்பின் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர்.

    இதன்மூலம் மலேசியாவில் வைரஸ் தொற்றியோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 5251 ஆகஉள்ளது என்றும் இதுவரை குணமடைந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 2967 என்றும் மலேசிய சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர்இஷாம் தெரிவித்துள்ளார்.

    கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 56.5 விழுக்காட்டினர் குணமடைந்துள்ள நிலையில் தற்போது 2198 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார். மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 86 ஆக உள்ளது.

    மலேசியாவில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் 601 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

    இவர்களில் 60 பேர் இந்தியத் தொழிலாளர்கள் ஆவர்.

    242 தொழிலாளர்கள் சிகிச்சைக்குப்பின் குணமடைந்துள்ள நிலையில் 356 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

  6. கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டோம் - ஜெர்மனி சுகாதாரத்துறை அமைச்சர்

    ஜெர்மனியில் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் தெரிவித்துள்ளார்.

    கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதை தொடர்ந்தே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

    அதேபோல இந்த வைரஸ் தொற்றிலிருந்து பாதிக்கப்படுபவர்களைவிட, இதிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது ஊரடங்கு வெற்றிகரமாக இருந்ததை காண்பிப்பதாகவும் ஜென்ஸ் தெரிவித்தார்.

    எனினும், இத்தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஜெர்மனியில் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,38,000ஆக உள்ளது. 3,868 பேர் உயிரிழந்துள்ளனர்.

    ஜெர்மனி
  7. சிங்கப்பூரில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது

    சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அங்குள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியானதை அடுத்து அவர்களில் ஏராளமானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    இன்று ஒரே நாளில் புதிதாக 623 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது என்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கும் விடுதிகளில்தான் அதிக எண்ணிக்கையிலான கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகி உள்ளன என்றும் சிங்கப்பூர் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

    கடந்த இருவார நிலவரத்தை வைத்துப் பார்க்கும்போது இம்மாத இறுதிக்குள் குறைந்தது10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கிருமித்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக இணைப்பேராசிரியர் அலெக்ஸ்குக் தெரிவித்துள்ளதாக சிங்கப்பூர் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

    சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 60 விழுக்காட்டினர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்று தெரியவந்ததை அடுத்து அத்தொழிலாளர்கள் தங்கும் விடுதிகளை தனிமைப்படுத்தி வருகின்றனர்.

    இதுவரை 12 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

    புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கும்விடுதிகளில் மட்டும் மொத்தம் 2,689 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகிஉள்ளது.

    சிங்கப்பூர் தொழிலாளர்கள்
  8. தமிழ்நாட்டில் புதிதாக 56 பேருக்கு தொற்று

    தமிழ்நாட்டில் இன்று புதிதாக 56 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    மாநிலத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1323ஆக உள்ளது.

    இன்று 103 பேர் உடல்நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

    இதுவரை 283 பேர் குணமடைந்துள்ளனர்.

  9. ஆப்ரிக்காவில் பரவும் கொரோனா

    ஆப்ரிக்காவில் முதன்முறையாக கொரோனா தொற்று உறுதியாகி இரண்டு மாதங்கள் ஆகின்றன.

    தென் ஆப்ரிக்காவில்தான் கொரோனா தொற்று அதிகமாக பரவியுள்ளது. அங்கு 2500க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் எகிப்து மற்றும் அல்ஜீரியாவும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன.

    கடந்த வாரத்தில் கேமரூன், நைஜர், ஐவரி கோஸ்ட் மற்றும் கினியா ஆகிய நாடுகளிலும் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் அதிகரித்தது.

    ஆப்ரிக்க பகுதியில் கொரோனா தொற்று அதிகமாக பரவினால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் ஏற்பட்ட பாதிப்புகளைக் காட்டிலும் அதிக விளைவுகளை ஏற்படுத்தும்.

    பெரும்பாலான ஆப்ரிக்க நாடுகளில் 10 லட்சம் பேருக்கு ஐந்தே தீவிர சிகிச்சை படுக்கைகள் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் ஐரோப்பாவில் 10 லட்சம் பேருக்கு 4000 படுக்கைகள் உள்ளன.

    இருப்பினும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த இன்னும் நேரம் உள்ளது என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ஆப்ரிக்க கண்டம் கடந்த காலங்களில் பல மோசமான பெருந்தொற்றுகளை எதிர்கொண்டுள்ளது.

    ஆனால் இது ஒரு புதிய வைரஸ் எனவே இதனை எதிர்கொள்ள ஆப்ரிக்கா தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

    கைகளை சுத்தப்படுத்தும் தொழிலாளி
  10. 'எதிர்காலம் என்னாகுமோ' - வடமாநிலத் தொழிலாளர்களை வதைக்கும் ஊரடங்கு

    கோவையில் அமைந்துள்ள தொழிற்சாலைகளில், வடமாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் வேலை செய்து வருகின்றனர். கொரோனா நோய்த்தொற்று பரவலை அடுத்து அமல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு உத்தரவால் தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால், இங்கு பணிபுரிந்து வந்த வடமாநிலத் தொழிலாளர்களின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

    “முதல் ஊரடங்கு காலத்தை சமாளித்துவிட்டோம். ஆனால், மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள இரண்டாம் கட்ட ஊரடங்கும், அதற்கு பிறகான வாழ்க்கையும் எப்படி இருக்கப்போகிறது எனத் தெரியவில்லை” என்கிறார் அபிஜித். பிகார் மாநிலத்தைச் சேர்ந்த இவர் கோவையில் உள்ள காட்டூர் பகுதியில் உதிரி பாகங்கள் விற்பனைச் சந்தையில் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வருபவர்.

    விரிவாகப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

    வடமாநிலத் தொழிலாளர்
  11. இந்தியர்களால் வீட்டில் சமூக இடைவெளியை பின்பற்றுவது என்பது சாத்தியமா?

    சில இந்தியர்களுக்கு, சமூக இடைவெளி என்பது வீட்டில்கூட சாத்தியமற்ற ஒன்று. இந்த பிரச்சனையை சில சுவாரஸ்யமான வரைகலைகள் மூலமாக புரிந்துகொள்ள முயல்வோம்.

    சில இந்தியர்களுக்கு, சமூக இடைவெளியை பின்பற்றுவது என்பது வீட்டில்கூட சாத்தியமற்றது

  12. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13000-ஐ தாண்டியது

    இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 13000-ஐ கடந்துள்ளது.

    இந்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று மாலை வெளியிட்ட தகவலின்படி இதுவரை 13387 பேர் இதுவரை கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1007 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது மற்றும் 23 பேர் உயிரழந்துள்ளனர் என்று சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

    உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 437ஆக உயர்ந்துள்ளது.1749 பேர் குணமடைந்துள்ளனர்.

    தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 11201 ஆக உள்ளது.

    இந்தியா முழுவதும் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 13.06% பேர் குணமடைந்துள்ளனர்.

    இந்நிலையில் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் இந்தியா தீவிரமாக உள்ளதாகவும் சுகாதாரத்துறையின் இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்தார்.

    விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

  13. தமிழகம் வந்த ரேபிட் டெஸ்ட் கிட்கள்

    தமிழ்நாடு வாங்க உத்தேசித்திருந்த 4,00,000 ரேபிட் டெஸ்ட் கிட்களில் 24 ஆயிரம் டெஸ்ட் கிட்கள் தமிழகத்திற்கு வந்து சேர்ந்திருப்பதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்

    ஊரடங்கிலிருந்து தொழிற்சாலைகளுக்கு விலக்கு அளிப்பது குறித்து திங்கட்கிழமையன்று முடிவுசெய்யப்படுமென்றும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    சேலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வுசெய்வதற்காக அங்கு சென்றிருந்த தமிழக முதலமைச்சர், ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

    "சேலத்தை பொறுத்தவரை 9 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த 9 இடங்களில் இருந்துதான் நோய் பரவல் ஏற்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இங்கு 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 பேர் குணமடைந்துள்ளனர்" என்று அவர் தெரிவித்தார்.

    மேலும், ஏப்ரல் 20ஆம் தேதி முதல் சில தொழிற்சாலைகள் இயங்கலாம் என மத்திய அரசு கூறியுள்ளது. அவை எந்தெந்த தொழிற்சாலைகள் என்பது குறித்து ஆராய்ந்து முடிவெடுக்க நிதித் துறைச் செயலர் கிருஷ்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் அந்தக் குழுவின் முடிவுகள் வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படுமென்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மேலும் படிக்க

  14. காற்று மாசு இல்லாத சென்னை

    காற்று மாசுபாடு, குப்பைமேடுகள் என இருந்த சென்னை மாநகரம், தற்போது கொரோனா காரணமாக மாசுபாடற்ற நகரமாக காட்சியளிக்கிறது.

    View more on facebook
  15. ”உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து கூறவில்லை” - சீனா

    கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து கூறவில்லை என சீனா தெரிவித்துள்ளது.

    “எண்ணிக்கைகள் நிச்சயமாக குறைக்கப்படவில்லை. அப்படி நடக்கவும் நாங்கள் விடமாட்டோம்.” என சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    சீனாவின் அதிகாரப்பூர்வ தகவல்கள் குறித்து ஏற்கனவே பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டிருந்தன.

    இந்த வார தொடக்கத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த எண்ணிக்கை குறித்து சந்தேகம் இருப்பதுபோல் பேசியிருந்தார்.

    முன்னதாக வூஹானில் இந்த தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை திடீரென 50% அளவில் அதிகரித்திருப்பதாக சீனா தெரிவித்தது.

  16. ‘பூமி இவ்ளோ மாறிடுச்சா?’

    ஓராண்டுக்கு பிறகு பூமிக்கு திரும்பி வந்தால், அதுவும் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலையில் வந்தால் எப்படி இருக்கும்?

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்துவிட்டு, இன்று அதிகாலை பூமிக்கு திரும்பியுள்ள மூன்று விண்வெளி வீரர்கள் இதுபோன்ற வினோதமான உணர்வை பெற்றுள்ளனர்

    “உலகம் எப்போதும் போலவே பார்ப்பதற்கு வியத்தகு வகையில் இருக்கிறது. ஆனால், நாங்கள் சென்று திரும்புவதற்குள் இத்தனை நடந்ததைதான் நம்ப முடியவில்லை” என்று தற்போது பூமிக்கு திரும்பியுள்ள மூன்று விண்வெளி வீரர்களில் ஒருவரான ஜெசிக்கா மேர் கூறுகிறார்.

    View more on twitter
  17. ரிசர்வ் வங்கி அறிவிப்புகளுக்கு நரேந்திர மோதி வரவேற்பு

    “இந்திய ரிசர்வ் வங்கியின் இன்றைய அறிவிப்புகள் பணப்புழக்கத்தை பெரிதும் மேம்படுத்துவதோடு கடன் வழங்கலை மேம்படுத்தும். இந்த நடவடிக்கைகள் சிறு, குறு வணிகங்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு உதவும். மேலும், அனைத்து மாநிலங்களும் மேலதிக கடன் உதவி பெறுவதற்கு வழிவகுக்கும்” என்று பிரதமர் நரேந்திர மோதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    View more on twitter
  18. பிரசவ வலியால் துடித்த பெண்; காப்பற்றிய காவலர்

    கொரோனா பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது, பிரசவ வலியால் துடித்த பெண்ணை நள்ளிரவு நேரத்தில் ஆட்டோவில் அழைத்துச் சென்று காப்பாற்றினார் புதுச்சேரி காவலர் ஒருவர்.

    புதுச்சேரியை ஒட்டியுள்ள விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டது.

    இதுகுறித்து விரிவாக படிக்க: கொரோனா வைரஸ்: பிரசவ வலியால் துடித்த பெண்; ஊரடங்கு நேரத்தில் காப்பற்றிய போலீஸ் - நெகிழ்ச்சி பதிவு

  19. கோவையில் 12 பேர் குணமடைந்தனர்

    கோயம்புத்தூரில் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 12 பேர் குணமடைந்து நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு வீடு திரும்பியுள்ளனர்.

    குணமடைந்த 12 பேரும் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் மற்றும் அவர்களின் தொடர்பில் இருந்தவர்கள். அடுத்த 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி கொள்ள இவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  20. பிரிட்டனில் 13 ஆயிரத்தை கடந்த உயிரிழப்புகள்

    கொரோனா வைரஸால் பிரிட்டன் மருத்துவமனைகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,279ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 861 பேர் கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர்.

    பிரிட்டன் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை விலக்குவதற்கு இன்னமும் குறைந்தது மூன்று வார காலமாகும் என்று பிரிட்டன் அரசின் வெளியுறவுத்துறை செயலர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில், பிரிட்டனில் கொரோனா வைரஸை எதிர்த்து போராடும் மருத்துவம் மற்றும் பிற அத்தியாவசிய பணிகளை மேற்கொள்பவர்களை பாராட்டும் வகையில் தொடர்ந்து நான்காவது வாரமாக, நாடு முழுவதும் உள்ள மக்கள் வீதிகளுக்கு வந்து கைத்தட்டினர்.

பக்கம் 1 இல் 2