Got a TV Licence?

You need one to watch live TV on any channel or device, and BBC programmes on iPlayer. It’s the law.

Find out more
I don’t have a TV Licence.

நேரடிச் செய்தி

இங்கு பிரசுரிக்கப்பட்ட நேரங்கள் அனைத்தும் பிரிட்டன் நேரமே

 1. நன்றி நேயர்களே!

  இந்த நேரலை தொகுப்பு இத்துடன் முடிகிறது.

  நாளை காலை மீண்டும் வேறொரு நேரலை தொடங்கும். மேலதிக செய்திகளை பிபிசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் படிக்கலாம்.

  கொரோனா குறித்த பிற பிபிசி செய்திகளைப் படிக்க

 2. இன்று நடந்தவை - சில முக்கியத் தகவல்கள்

  • பெரும் நிறுவனங்கள் முதல் தனிப்பட்ட ஆய்வாளர்கள் வரை சுமார் 30 இந்தியக் குழுக்கள் கோவிட்-19 தொற்றுக்கான தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக, இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
  • சிலி நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 111 வயதான மூதாட்டி ஒருவர் நோய்த்தொற்றிலிருந்து முற்றிலும் குணமடைந்துள்ளார்.
  • பேருந்து மற்றும் ரயில்கள் மூலம் சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பயணக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் ரயில்வே கட்டணங்களை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் விமானம் மூலம் பிரிட்டன் வந்தவர்களின் எண்ணிக்கை 99% குறைந்துள்ளது என்று பிரிட்டன் அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.
  • தமிழ்நாட்டில் இன்று புதிதாக 827 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,372ஆக உயர்ந்துள்ளது.
  • இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத வகையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 150 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
  • நைஜீரியாவில் இதுவரை கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்படும் எண்ணிக்கையான 8,733-ஐ விட உண்மையில் நான்கு மடங்கு அதிக பாதிப்பு இருக்குமென்று அந்த நாட்டின் மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
  • தென் கொரியாவில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள கொரோனா வைரஸின் பரவல் தொடரும் பட்சத்தில் சமூக விலகல் விதிமுறைகள் கடுமையாக்கப்படும் என்று அந்த நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  • சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றிய தலைமை செவிலியர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
  • கோவிட்-19 நோய்த்தொற்றால் அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.
  • தொடர்ந்து ஆறாவது நாளாக நியூசிலாந்தில் புதிதாக கொரோனா தொற்று எதுவும் கண்டறியப்படவில்லை.
  coronavirus world update
 3. 4 பேருக்காக சிறப்பு விமானம்

  மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெரும் பணக்காரர் ஒருவர், ஊரடங்கு காரணமாக டெல்லியில் சிக்கிக்கொண்ட தனது குடும்பத்தினருக்காக ஒரு தனி விமானத்தையே அனுப்பியுள்ளார் என்கிறது பி.டி.ஐ செய்தி.

  180 பேர் அமரும் வசதி கொண்ட அந்த விமானம் வெறும் நான்கு பேருக்காக திங்களன்று டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

  மதுபான உற்பத்தித் தொழில் செய்யும் அந்தத் தொழில் அதிபரின் மகள், அவரது இரு குழந்தைகள், ஒரு பணியாள் ஆகியோர் இந்த விமானம் மூலம் போபல் திரும்பியுள்ளனர்.

  coronavirus lockdown india air travel
 4. கொரோனா வைரஸ் - தப்பிச்சென்ற 400 பேர்

  ஆப்ரிக்க நாடான மலாவியில் கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் மையம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்த சுமார் 400 பேர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

  அங்கு நிலவிய மோசமான சுகாதார வசதிகளே இதற்கு காரணம் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

  பிளாண்டயர் எனும் நகரத்தில் இருந்த விளையாட்டு மைதானம் ஒன்று தனிமைப்படுத்தல் மையமாக மாற்றப்பட்டிருந்தது.

  அங்கு கழிவறை, குடிநீர் வசதிகள் முறையாக இல்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

  View more on twitter
 5. கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் பிரிவில் தீவிபத்து

  வங்கதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் பிரிவில் நேற்று இரவு ஏற்பட்ட தீவிபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.

  இவர்கள் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இல்லை. எனினும், கோவிட்-19 அறிகுறிகள் இருந்ததால் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டவர்கள்.

  தீவிபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது. விபத்துக்குள்ளானது ஒரு தற்காலிக கூடாரம் போன்ற அமைப்பாகும்.

 6. பிபிசி தமிழின் சிறப்பு நேரலை

  தமிழக, இந்திய, உலக நிலவரம் குறித்த சிறப்பு நேரலை.

  View more on facebook
 7. உலக உணவுத் திட்டத்தின் எச்சரிக்கை

  கொரோனா வைரஸ் பரவல் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியத் தீவுகள் பிராந்தியத்தில் உள்ள சுமார் 1.4 கோடி மக்கள் மோசமான உணவுப் பிரச்சனையை எதிர்கொள்ளக் காரணமாக அமையும் என்று ஐ.நாவின் உணவுப் பாதுகாப்பு மற்றும் பட்டினி ஒழிப்புக்கான முகமையாக உள்ள உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.

  இது கடந்த ஆண்டின் மதிப்பீட்டைவிட நான்கு மடங்கு அதிகமாகும்.

  சமூகப் பாதுகாப்பு உதவிகளைப் பெறுவோர் மற்றும் முறைசாரா வேளைகளில் ஈடுபட்டுள்ளோர் ஆகியோருக்கு உதவிகளை அந்தந்த நாடுகளின் அரசு அதிகப்படுத்த வேண்டும் என்று இந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

  food security coronavirus
 8. உலகெங்கும் கோவிட்-19 பாதிப்பு எவ்வளவு?

  வரைபட வடிவில்

  உலக சுகாதார நிறுவனத்தால் 'பெருந்தொற்று' என்று அறிவிக்கப்பட்டுள்ள கோவிட்-19 தொற்றால் எந்தெந்த நாடுகளில் எவ்வளவு பாதிப்பு என்பதை நீங்கள் இங்கே அறிந்து கொள்ளலாம்.

  கொரோனா வைரஸ்: உலகெங்கும் கோவிட்-19 பாதிப்பு எவ்வளவு?

 9. வீட்டுக்குள்ளேயே இருந்தால்...

  கடந்த 2 மாதங்களாக உலக மக்களில் பெரும்பான்மையானவர்கள் வீடுகளில் முடங்கிக் உள்ளார்கள். அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் வெளியில் செல்கிறார்கள்.

  கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகும் ஆபத்தை இது குறைத்திருக்கலாம் என்றாலும், வேறு நோய்த் தொற்றுகளுக்கு அதிகளவில் ஆட்படக் கூடிய அளவுக்கு நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் மீது இது தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

  விரிவாகப் படிக்க: கொரோனா வைரஸ்: வீட்டுக்குள் இருந்தால் நோய் எதிர்ப்பாற்றல் எப்படி பாதிக்கப்படும்?

  coronavirus lockdown immunity
 10. தடுப்பூசி தயாரிக்கும் 30 குழுக்கள்

  பெரும் நிறுவனங்கள் முதல் தனிப்பட்ட ஆய்வாளர்கள் வரை சுமார் 30 இந்தியக் குழுக்கள் கோவிட்-19 தொற்றுக்கான தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக, இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் கே. விஜயராகவன் தெரிவித்துள்ளார்.

  அவர்களில் சுமார் 20 குழுவினர் நன்றாக முன்னேறி வருவதாக அவர் கூறியுள்ளார்.

  View more on twitter
 11. சிங்கப்பூரில் உடல்நலனைக் கண்காணிக்க புதிய செயலி

  சிங்கப்பூரில் இன்று புதிதாக 373 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 33,249ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

  புதிதாக நோய் தொற்றியோரில் ஒருவர் கூட சிங்கப்பூரர் அல்ல. நேற்று 832 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், மொத்த நோயாளிகளில் 17,267 பேர் குணமடைந்துள்ளனர்.

  இது 53 விழுக்காடு ஆகும். பலியானோர் எண்ணிக்கை 23ஆக நீடிக்கிறது. இதற்கிடையே வெளிநாட்டு ஊழியர்களின் உடல்நலனைக் கண்காணிக்க வசதியாக புதுச்செயலி ஒன்று சிங்கப்பூரில் அறிமுகமாகி உள்ளது.

  அந்நாட்டின் மனிதவள அமைச்சு இதற்கு ஏற்பாடு செய்துள்ளது. இச்செயலியில் தமிழ், ஆங்கிலம், மாண்டரின், பெங்காலி ஆகிய மொழிகளில் தகவல்கள் இடம்பெற்றுள்ளன என்றும், ஒவ்வொரு ஊழியரும் தினந்தோறும் இதில் இரண்டு முறை தங்களது உடல் வெப்ப நிலையைப் பதிவிட இயலும் என்றும் ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.

  மேலும், இருமல், தொண்டை வலி, சளி, சுவாசப் பிரச்சனை என ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டால் அதையும் இச்செயலி மூலம் தெரியப்படுத்த இயலும். அவ்வாறு தெரியப்படுத்திய அடுத்த 30 நிமிடங்களுக்குள் மருத்துவர் ஒருவர் ஊழியரை தொடர்பு கொண்டு பேசுவார்.

  தவிர, ஊழியர்கள் தற்போது எங்கு உள்ளனர் என்பதை முதலாளிகள் அறிந்து கொள்வதற்கான வசதியும் இச்செயலியில் உள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வசதியாக, வெளிநாட்டு ஊழியர்கள் பலரை வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள், சமூகப் பராமரிப்பு மையங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு சிங்கப்பூர் அரசு இடம் மாற்றியுள்ளது.

  singapore new app for coronavirus
 12. 'மலேசியாவுக்குள் ஆட்களைக் கடத்தி வருவது அதிகரிப்பு'

  பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் இருக்கும் வேளையிலும் மலேசியாவுக்குள் ஆட்களைக் கடத்தி வருவது அதிகரித்து வருவதாக மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்துள்ளார்.

  இத்தகைய குடியேறிகளால் கொரோனா வைரஸ் அதிகரிக்கும் ஆபத்துள்ளது என அவர் சுட்டிக்காட்டினார். அண்மையில் மூன்று படகுகளில் மலேசியாவுக்குள் ஊடுருவ முயன்ற 86 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்ட நிலையில், நாட்டின் எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

  கடந்த இரு மாதங்களில் மட்டும் 41 கடத்தல்காரர்கள் பிடிபட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை முடிவுக்கும் வரும் பட்சத்தில் மனிதக்கடத்தல் சம்பவங்களும், எல்லைகள் வழி பல்வேறு விதமாக ஊடுருவும் கள்ளக் குடியேறிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் அரசுக்கு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

  மலேசியாவில் தொடர்ந்து ஆறாவது நாளாக கொரோனா வைரஸ்தொற்றால் உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை. புதிதாக 10 பேருக்கு மட்டுமே வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

  பொது நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்ட மார்ச் 18ஆம் தேதியில் இருந்து இன்றுவரையிலான காலகட்டத்தில் ஒரே நாளில் பதிவான பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் ஆகக் குறைவானது இதுதான்.

  உயிரிழந்தோர் எண்ணிக்கை கடந்த ஆறு நாட்களாக 115ஆகவே நீடிக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 86 பேர் கோவிட் 19 நோயிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனர். ஒட்டுமொத்த நோயாளிகளில் 80 விழுக்காட்டினர் குணமடைந்துள்ளனர்.

  coronavirus malaysia
 13. 99% குறைந்த உள்வரு விமானப் பயணிகள்

  கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் விமானம் மூலம் பிரிட்டன் வந்தவர்களின் எண்ணிக்கை 99% குறைந்துள்ளது என்று பிரிட்டன் அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.

  இந்த ஏப்ரல் மாதம் சுமார் 1,12,300 பேர் மட்டுமே விமானம் மூலம் பிரிட்டன் வந்துள்ளனர்.

  கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முடக்கநிலையால் உலகெங்கும் பல நாடுகளில் விமானப் போக்குவரத்து முற்றிலும் அல்லது பகுதியளவில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

  coronavirus air travel
 14. வந்துகொண்டிருக்கும் செய்திதமிழகத்தில் புதிதாக 827 பேருக்கு கொரோனா

  தமிழ்நாட்டில் இன்று புதிதாக 827 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,372ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

  தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவல்களின்படி, தமிழ்நாட்டிற்குள் 710பேருக்கும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 117 பேருக்கும் இந்நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

  தமிழ்நாட்டில் கொரோனா தொற்றை சோதனை செய்ய 70 சோதனைச் சாலைகள் இயங்கிவரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 12,246 பேருக்கு இந்த சோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

  இதுவரை மாநிலத்தில் 4,55, 216பேருக்கு இந்த சோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

  கடந்த 24 மணி நேரத்தில் 639 பேர் மருத்துவமனையிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆகவே, தமிழ்நாட்டில் முழுமையாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 10,548 ஆக உயர்ந்துள்ளது. இந்நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 55 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்.

  வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர்களில் 1559 பேருக்கு இந்நோய்த் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் 936 பேர் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், 27 பேர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். 17 பேர் தில்லியையும் 19 பேர் மேற்கு வங்கத்தையும் தலா 10 பேர் கேரளா, ராஜஸ்தானையும் சேர்ந்தவர்கள் என மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.

  கடந்த 24 மணி நேரத்தில் 12 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 145ஆக உள்ளது. உயிரிழந்த 12 பேரில் 11 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். ஒருவர் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர். 9 பேர் ஆண்கள் 3 பேர் பெண்கள். இந்த 12 பேரில் ஆறு பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள். 7 பேர் உயர் ரத்த அழுத்தப் பிரச்சனை கொண்டவர்கள்.

  உயிரிழந்தவர்களில் 4 பேர் தனியார் மருத்துவமனையிலும் 6 பேர் ராஜீவ்காந்தி அரசு தலைமை மருத்துவமனையிலும் ஒருவர் ஓமந்தூரார் வளாக அரசு மருத்துவமனையிலும் ஒருவர் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர்.

  இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களில் 559 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதுவரை சென்னையில் மட்டும் 12,762 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  செங்கல்பட்டில் 45 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 19 பேருக்கும் திருவள்ளூரில் 38 பேருக்கும் திருவண்ணாமலையில் 16 பேருக்கும் இந்நோய்த் தொற்று இன்று கண்டறியப்பட்டுள்ளது.

  தற்போது கோயம்புத்தூர், நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், திருப்பூர் மாவட்டங்களில் கொரோனா நோயாளிகள் யாரும் இல்லை. ஈரோட்டில் ஒருவர் மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார்.

  coronavirus tamil nadu
 15. பட்டினியால் உயிரிழந்த உத்தரப் பிரதேச தொழிலாளி

  தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

  விபின் குமார் எனும் 19 வயதே ஆகும் புலம்பெயர் தொழிலாளர் ஒருவர் பசியால் உயிரிழந்தது தொடர்பான ஊடகச் செய்திகளின் அடிப்படையில், உத்தரப்பிரதேச அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

  பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இருந்து உத்தரப்பிரதேசம் திரும்பும்போது, விபின் குமார் உத்தரப்பிரதேச மாநிலம் சகாரன்பூரில் பசியால் உயிரிழந்தார் என பி.டி.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

  பசியால் உயிரிழக்கும் முன், தனது ஊரான ஹர்தோய் -ஐ நோக்கிய பயணத்தில், சுமார் 350 கிலோமீட்டர் தொலைவை அவர் ஆறு நாட்கள் நடந்தே கடந்திருந்திருந்தார்.

  உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்
  Image caption: உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்
 16. கொரோனாவால் லட்சக்கணக்கில் வேலை இழப்பு

  ஏப்ரல் மாதம் மட்டும் பிரான்ஸ் நட்டில் 8,50,000 பேர் வேலை இழந்துள்ளனர்.

  கொரோனா தடுப்பு முடக்கநிலை முழுதும் அமலான முதல் மாதமாக ஏப்ரல் உள்ளது.

  இதன்மூலம் அங்கு வேலைவாய்ப்பற்றவர்கள் எண்ணிக்கை 45 லட்சத்தைக் கடந்துள்ளது.

  coronavirus job loss in france european union
 17. இந்தியாவில் மாநில வாரியான பாதிப்பு எவ்வளவு?

  இந்திய மாநிலங்களில் இன்று காலை நிலவரப்படி கொரோனா வைரஸ் பாதிப்பு நிலவரம் என்ன என்பதை இந்திய அரசு வெளியிட்டுள்ளது.

  View more on twitter
 18. கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்ட 111 வயது மூதாட்டி

  கொரோனா வைரஸ்

  சிலி நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 111 வயதான மூதாட்டி ஒருவர் நோய்த்தொற்றிலிருந்து முற்றிலும் குணமடைந்துள்ளார்.

  சிலியின் தலைநகரான சாண்டியாகோவுக்கு அருகில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் வசித்து வரும் 111 வயதான ஜுவானா ஜுனிங்கா, இதன் மூலம் கோவிட்-19 நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்த அந்த நாட்டின் மிக வயதான நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

  திருமணமே செய்துகொள்ளாத, குழந்தைகள் பெற்றுக்கொள்ளாத இவர் வரும் ஜூலை மாதம் தனது 112ஆவது பிறந்த நாளை கொண்டாட உள்ளார்.

 19. புகை பிடிப்பவர்களுக்கு கொரோனா வராதா?

  கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி ஐந்து மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையிலும், அது ஏற்படுத்தி வரும் அச்சுறுத்தல் சிறிதும் குறைந்தபாடில்லை.

  குறிப்பாக, கொரோனா வைரஸ் பரவலுக்கு ஈடாக அதுகுறித்த போலிச் செய்திகளும் அதிவேகமாக பரவி வருகின்றன. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொடர்பான சில போலிச் செய்திகளின் பின்னணியை பார்ப்போம்.

  View more on youtube
 20. புலம்பெயர் தொழிலாளர் பிரச்சனை: உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

  முடக்க நிலையின் காரணமாக நாடு முழுவதுமுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்களுக்கு அப்பால் உள்ள சொந்த ஊர்களுக்கு நடந்து செல்வது மற்றும் அவர்கள் சந்திக்கும் பிற பிரச்சனைகள் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்த வழக்கில் இடைக்கால தீர்ப்பை வழங்கியுள்ளது.

  மேலும், அடுத்த கட்ட விசாரணையை ஜூன் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

  இடைக்கால தீர்ப்பு:

  • சொந்த ஊர்களுக்கு நடந்து செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களை மீட்டு தங்குமிடம், உணவு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டும்.
  • புலம்பெயர் தொழிலாளர்களின் பயணச் செலவுகளை சம்பந்தப்பட்ட மாநிலங்களே ஏற்க வேண்டும்.
  • புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கான நடவடிக்கைகளை வேகப்படுத்த வேண்டும்.
  • புலம்பெயர் தொழிலாளர்களிடமிருந்து ரயில், பேருந்து உள்ளிட்ட எவ்வித பயணக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது.
  இந்தியா
பக்கம் 1 இல் 2