Got a TV Licence?

You need one to watch live TV on any channel or device, and BBC programmes on iPlayer. It’s the law.

Find out more
I don’t have a TV Licence.

நேரடிச் செய்தி

இங்கு பிரசுரிக்கப்பட்ட நேரங்கள் அனைத்தும் பிரிட்டன் நேரமே

  1. ஆகஸ்ட் 9ஆம் தேதி செய்திகள் நேரலை பக்கம் நிறைவடைகிறது

    இத்துடன் இன்றைய நேரலையை நிறைவு செய்கிறோம்.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.

    பிபிசி தமிழின் பேஃஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப்

    பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. ஆஸ்திரேலியா படுதோல்வி - 62 ரன்னில் சுருட்டி தொடரை வென்ற வங்கதேசம்

    கோப்பையை வென்ற வங்கதேசம்
    Image caption: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 டி20 போட்டியில் 4 போட்டிகளை வென்று கோப்பையை வென்ற வங்கதேசம்

    தாகாவில் நடந்த வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா படுதோல்வி அடைந்திருக்கிறது. டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட் செய்ய தீர்மானித்தது.

    20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 122 ரன்களைக் குவித்தது. வங்கதேசம் சார்பாக மொஹம்மத் நயீம் அதிகபட்சமாக 23 ரன்களை குவித்தார்.

    ஆஸ்டன் டர்னர், ஆஸ்டன் அகர், ஆடம் சாம்பா தலா ஒரு விக்கெட்டும், நாதன் எல்லிஸ், டன் க்றிஸ்டியன் தலா இரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    123 ரன்களை எடுத்தால் வெற்றி என களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 13.4 ஓவரில் 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்து படு தோல்வி அடைந்திருக்கிறது.

    ஆஸ்திரேலியா சார்பில் மேத்யூ வேட் (22 ரன்கள்), பென் மெக்டெர்மாட் (17 ரன்கள்) தவிர எந்த ஒரு வீரரும் இரட்டை இலக்கில் ரன்களை எடுக்கவில்லை.

    வங்க தேசம் சார்பில் பந்து வீசிய ஷயிப் அல் ஹசன் 3.4 ஓவர் வீசி 9 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசரடித்தார். மொஹம்மத் சைஃபுதீன் 3 ஓவர்களை வீசி 12 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐந்து போட்டிகளைக் கொண்ட இந்த டி20 தொடரில் நான்கு போட்டிகளில் ஆஸ்திரேலியாவை வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது வந்ததேசம். நான்காவது போட்டி மட்டுமே ஆஸ்திரேலியா வென்றது குறிப்பிடத்தக்கது.

  3. டெல்லியில் மூன்று வாரங்களில் 80 சதவீத மாதிரிகளில் டெல்டா திரிபு: சுகாதாரத்துறை

    கொரோனா வைரஸ்
    Image caption: கோப்புப்படம்

    இந்திய தலைநகர் டெல்லியில் கடந்த மூன்று வாரங்களில் சேகரிக்கப்பட்ட 5,752 மாதிரிகளில் 1,689 பேருக்கு டெல்டா வகை திரிபும், 947 பேருக்கு ஆல்ஃபா வகை திரிபும் கண்டறியப்பட்டுள்ளது.

    இந்த மாதிரிகள் அனைத்தும் மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டதில் இந்த முடிவு தெரிய வந்துள்ளது.

    டெல்லியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் பணியை டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் கவனித்து வருகிறது. இந்த ஆணையத்தின் கூட்டத்தின் முடிவில் பாதிப்பு தொடர்பான தகவல்களை நகர சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

    அதில் கடந்த ஜூலை மாதம் மரபணு பகுப்பாய்வுக்காக தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட மாதிரிகளில் 83.3 சதவீதம் அளவுக்கு டெல்டா வகை திரிபு (B.1.617.2) கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு முன்பு மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மாதிரிகளில், கடந்த ஏப்ரலில் 53.9 சதவீதம், மே மாதம் 81.7 சதவீதமும், ஜூன் மாதம் 88.6 சதவீதமும் டெல்டா வகை திரிபு கண்டறியப்பட்டிருந்தது.

    இது தவிர ஆல்ஃபா வகை திரிபு ( B.1.1.7) 947 மாதிரிகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த இரு வகை கொரோனா திரிபுகளும் கவலை தரக்கூடிய திரிபுகள் ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

    இந்தியாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் முறையாக டெல்டா வகை திரிபு கண்டறியப்பட்டுள்ளது.

    இதேபோன்ற திரிபு 95 நாடுகளுக்கும் மேலாக பரவியிருப்பதும் பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது.

    இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் கொரோனா இரண்டாம் அலையின்போது கடுமையான தாக்கத்தை இந்த வகை கொரோனா திரிபுகள் ஏற்படுத்தியிருந்தன.

    பிரிட்டனில் ஆல்ஃபா வகை திரிபு முதல் முறையாக கடந்த ஆண்டில் கண்டறியப்பட்டது.

  4. பெகாசஸ் ஸ்பைவேர் - இந்திய பாதுகாப்பு அமைச்சகம் பதில்

    பெகாசஸ் ஸ்பைவேர் எனும் உளவு மென்பொருளை உருவாக்கிய இஸ்ரேலிய நிறுவனமான என்.எஸ்.ஓ உடன் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் எந்த பணப் பரிவர்த்தனையும் மேற்கொள்ளவில்லை என்று இந்திய நாடாளுமன்றத்தில் அந்த அமைச்சகத்தால் எழுத்துப்பூர்வமாக அளிக்கப்பட்ட பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் வி.சிவதாசன் இந்திய அரசு என்.எஸ்.ஓ நிறுவனத்துடன் பணப்பரிவர்த்தனை எதுவும் மேற்கொண்டுள்ளதா என்று கேட்டிருந்தார்.

    பெகாசஸ் மூலம் இந்திய அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் வேவு பார்க்கப்பட்டதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, அரசு அது தொடர்பாக விளக்கம் அளித்து, விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

  5. ஒரு லட்சம் கோடி ரூபாயை முந்தைய ஆட்சியாளர்களிடம் இருந்து மீட்க வேண்டும் - தினகரன்

    ttv dhinakaran

    தமிழக அரசின் பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கையில் சொத்து வரி, வாகன வரி, மின் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தியே ஆகவேண்டும் என்ற தொனியிலான அம்சங்கள் இடம்பெற்றிருப்பது பெரும் கவலை அளிக்கிறது, என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார் அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.

    அப்படி ஒரு முடிவினை தி.மு.க அரசு மேற்கொள்ள திட்டமிட்டிருந்தால், அது கடும் கண்டனத்திற்குரியது. கொரோனா பாதிப்பு உள்ளிட்ட சூழல்களால் மிகப்பெரிய பொருளாதாரப் பின்னடைவை சந்தித்திருக்கும் மக்கள், அதிலிருந்து இன்னும் மீண்டு வராத நிலையில் வரி உயர்வு, கட்டண உயர்வு என்பதெல்லாம் 'வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல' அமைந்துவிடும் என்று அவர் தெரிவித்துளார்.

    அதற்குப் பதிலாக முந்தைய ஆட்சியாளர்கள் முறைகேடாகவும் தவறாகவும் செலவழித்ததாக வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ரூ. ஒரு லட்சம் கோடியை அதற்கு காரணமானவர்களிடமிருந்து மீட்டெடுக்கும் வேலையை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும். அப்படி செய்யாமல் வெறுமனே அறிக்கை கொடுத்ததோடு மட்டும் நின்றுவிட்டால், பழைய 60:40 பங்கீட்டு பாசத்தில் தி.மு.க அரசு இப்படி நடந்து கொள்கிறதோ என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியாது.

    எனவே, யாரோ சிலர் செய்த தவறுகளுக்காக ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் தலையிலும் நிதிச்சுமையை ஏற்ற தமிழக அரசு முயற்சிக்கக்கூடாது. மக்களுக்கு பாதிப்பில்லாமல் நிதி நிலையைச் சீரமைப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  6. 'யாரும் பாதுகாப்பாக இல்லை'

    inger anderson

    ஐபிசிசி-யின் அறிக்கை இன்று வெளியாகியுள்ள சூழலில், புவி வெப்பமடைந்து வருவது பற்றி 30 ஆண்டுகளுக்கும் மேலாக வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர் என்று ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின் தலைவர் இங்கர் ஆண்டர்சன் கூறியுள்ளார்.

    "(வல்லுநர்கள் கூறியதை) உலகம் கவனித்தது. ஆனால் போதிய அளவுக்கு வலிமையான நடவடிக்கைகள் எடுக்கவில்லை. இதன் விளைவாக பருவநிலை மாற்றம் தற்போது ஒரு பிரச்னையாக உருவெடுத்துள்ளது. யாரும் பாதுகாப்பாக இல்லை; நிலைமை வேகமாக மோசமடைந்து வருகிறது. பருவநிலை மாற்றத்தை உடனடி அச்சுறுத்தலாக நாம் கையாள வேண்டும், " என்று அவர் கூறினார்.

    ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் மனித சக்திக்கு உட்பட்டவையே என்றும் வீணாக்க நம்மிடம் நேரம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

  7. வெப்ப அலைகள், அதீத மழை, வறட்சி பற்றி ஐபிசிசி அறிக்கை சொல்வதென்ன?

    இன்னும் தீவிரமான மற்றும் அடிக்கடி நிகழும் வெப்ப அலைகளை நாம் இனி வரும் காலங்களில் பார்ப்போம் . உலக அளவில் அதிக மழைப்பொழிவு நிகழ்வதும் அதிகரிக்கும். உலகின் சில பாகங்களில் வறட்சி உண்டாவதும் அதிகரிக்கும். உலகம் வெப்பமடைவதைக் குறைப்பதே இவற்றை தவிர்க்க வாய்ப்புள்ள வழி என்கிறார் இந்த ஐபிசிசி அறிக்கையை இயற்றியவர்களுள் ஒருவரான ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் ஃப்ரெட்ரிக் ஓட்டோ.

  8. IPCC அறிக்கையில் வல்லுநர்கள் கூறுவதென்ன?

    climate change

    IPCC எனப்படும் பருவநிலை மாற்றம் தொடர்பான நாடுகளுக்கு இடையேயான குழுவின் அறிக்கை வெளியாகியுள்ளது. இந்தக் குழு ஐக்கிய நாடுகள் மன்றத்தின் ஓர் அங்கமாகும்.

    14,000-கும் மேலான அறிவியல் கட்டுரைகளை ஆராய்ந்து அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையே, பருவநிலை மாற்றம் தொடர்பான முழுமையான மற்றும் சமீபத்திய விவரங்களை அளிக்கும் மிகப்பெரிய அறிக்கையாகும்.

    மனித நடவடிக்கைகளே புவி வெப்பமடையக் காரணம் என்பது மிகவும் தெளிவாகவும், மறுக்க முடியாத வகையிலும் தெரிகிறது என்று இந்த அறிக்கையை இயற்றியவர்களில் ஒருவரான இங்கிலாந்தின் ரீடிங் பல்கலைக்கழகப் பேராசிரியர் எட்வர்ட் ஹாக்கின்ஸ் தெரிவித்துள்ளார்.

    புவி வெப்ப அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என வருடாந்திர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், மிகவும் விரைவாகவே புவி வெப்பம் 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரிக்கும். 2034ஆம் ஆண்டின் நடுவில் இந்த அளவுக்கு புவி வெப்பம் உயரலாம், என்று ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் பல்கலைக்கழக பேராசிரியர் மால்ட மைன்ஹாசன் இந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

  9. உயரும் இந்திய பெருங்கடல் மட்டம் - என்ன ஆபத்து? ஐபிசிசி அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்கள்

    பருவநிலை மாற்றம்

    உலக அளவிலான சராசரியை விட ஆசியாவைச் சுற்றியுள்ள கடல் மட்டத்தின் உளவு தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஐபிசிசி எனப்படும் பருவநிலை மாற்றம் தொடர்பான நாடுகளுக்கு இடையேயான குழுவின் அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    முன்பு நூறு ஆண்டுகளில் ஒருமுறை கடலில் காணப்பட்ட இந்த நீட்மட்டம், 2050க்குள் இனி ஆறு முதல் ஒன்பது ஆண்டுகளில் ஏற்படலாம் என்று இந்த அறிக்கை தொடர்பான விவரங்களை ஆய்வு செய்த இந்திய வெப்ப மண்டல வானிலை விஞ்ஞானி ஸ்வப்னா பனிக்கல் கூறியுள்ளார்.

    இந்த கடல் மட்ட உயர்வு, இந்திய பெருங்கடலில் அதிகமாக இருப்பதை ஆய்வு அறிக்கை குறிப்பிடுகிறது என்றும் அவர் தெரிவித்தார். 2006 முதல் 2018ஆம் ஆண்டுக்கு இடையிலான காலகட்டத்தில் ஆண்டுக்கு 3.7 மில்லி மீட்டர் அளவுக்கு கடல் மட்டம் உயர்ந்தது.

    பூமி 1.5 டிகிரி வெப்பம் உயரும்போது கடலின் வெப்பம் ஒரு டிகிரி கூடுதலாக அதிகரிக்கும் என்றும் 42 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கை கூறுகிறது.

    இந்த ஆய்வறிக்கையை கடந்த வெள்ளிக்கிழமை 195 உறுப்பு நாடுகள் ஏற்றுக் கொண்டன. இந்த நாடுகள்தான் பருவநிலை மாற்றத்தின் இயல்பு மற்றும் புவி வெப்பமயமாதலுக்கு மனிதர்கள் எவ்வாறு காரணமாகிறார்கள் என்பதை ஆராய்ந்து வருகின்றன.

    வரும் நவம்பர் மாதம் பருவநிலை மாற்றம் தொடர்பான COP26 என்ற உலக தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்துக்கு முன்பாக இந்த அறிக்கை வெளி வந்துள்ளது.

    மேலும், நவீன கால பருவநிலை மாற்ற அறிவியல் அணுகுமுறை ஆலோசனைகளை தமது அறிக்கையில் இந்த குழு உலக நாடுகளுக்கு வழங்கியிருக்கிறது. பருவநிலை மீதான மனிதர்கள் விளைவித்த மோசமான இந்த தாக்கம், யதார்த்தமான உண்மை என்று ஐபிசிசி குழுவின் இணை தலைவர் வெலரீ மெஸ்ஸன் டெல்மோட் கூறியிருக்கிறார்.

  10. தமிழ்நாட்டின் கடன் எவ்வளவு உயந்துள்ளது?

    tamil nadu govt

    தமிழ்நாடு அரசின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிட்டார். `கடந்த 5 ஆண்டுகளில் 1.50 லட்சம் கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்தளவுக்கு சரியவில்லை' என அமைச்சர் தெரிவித்தார்.

    தமிழகத்தின் 2020-21 நிதி ஆண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடியாக உள்ளது.

    2021 - 22ம் ஆண்டின் இடைக்கால நிதிநிலை அறிக்கை கணக்கீட்டின்படி மாநிலத்தின் ஒட்டுமொத்த கடன் ரூ.5,70,189 கோடியாக உள்ளது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2,63,976 கடன் உள்ளது.

    1999-2000 - ரூ.18,989 கோடி

    2000-2001 - ரூ.28,685 கோடி

    2001-2002 - ரூ.34,540 கோடி

    2005-2006 - ரூ.50,625 கோடி

    2011-2012 - ரூ.1,03,999 கோடி

    2015-2016 - ரூ.2,11,483 கோடி

    2017-2018 - ரூ.3,14,366 கோடி

    2020-2021 - ரூ.4,56,660 கோடி

    2021 - ரூ.4,85,502 கோடி

    வெள்ளை அறிக்கையில் இடம்பெற்றுள்ள விவரங்கள் என்ன?

  11. பெண் எஸ்பி பாலியல் வழக்கு - முன்னாள் டிஜிபி நீதிமன்றத்தில் முன்னிலை

    ராஜேஷ் தாஸ்

    பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் இன்று விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.

    அதைத்தொடர்ந்து, தனக்கு எதிராக நீதிமன்றத்தில் காவல்துறை தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிகை நகலை அவர் பெற்றுக்கொண்டார்.

    வழக்கு விசாரணை 16-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

    ராஜேஷ் தாஸ் மீது சுமத்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு தொடர்பாக, குற்றப்பிரிவு மத்திய குற்றப் புலனாய்வுத் துறை வழக்குப் பதிவுசெய்துள்ளது.

    அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பபட்டிருந்தார்; பின்னர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

    கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி டெல்டா மாவட்டங்களில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதற்குப் பிறகு அவருக்கு கள்ளக்குறிச்சியிலும் விழுப்புரத்திலும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

    இந்த நிகழ்ச்சியின் பாதுகாப்பு ஏற்பாடுகளை சட்டம் - ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் கவனித்துவந்தார். டெல்டா மாவட்ட நிகழ்ச்சி முடிந்ததும் விழுப்பும் நோக்கி ராஜேஷ் தாஸ் காரில் சென்றபோது, வழியில் மரியாதை நிமித்தம் சந்தித்த பெண் ஐ.பி.எஸ். அவருக்கு வணக்கம் செலுத்தினார்.

    அவரை காரில் ஏற்றிக்கொண்ட ராஜேஷ் தாஸ், அவரிடம் சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் அந்தப் பெண் அதிகாரி அதிலிருந்து தப்பிக்க கடுமையாக முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது.

    அந்தக் கார் உளுந்தூர் பேட்டை அருகில் வந்தபோது, அங்கு சில காவல்துறை மூத்த அதிகாரிகள் நின்றிருந்தனர். கார் அங்கே நின்றதும், கதவைத் திறந்துகொண்டு வெளியில் ஓடிவந்த பெண் அதிகாரியை அங்கிருந்தவர்கள் வேறு காரில் ஏற்றி அனுப்பிவைத்தனர்.

  12. ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு நரேந்திர மோதி தலைமை

    narendra modi

    ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு இந்த மாதத்துக்கான தலைமைப் பொறுப்பில் இந்தியா இருக்கும் சூழலில், இன்று நடக்கவுள்ள அதன் கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோதி தலைமை வகிக்கவுள்ளார்.

    இக்கூட்டத்துக்கு தலைமை வகிக்கும் முதல் இந்தியப் பிரதமர் ஆகிறார் நரேந்திர மோதி.

    2021 ஜனவரி 1ஆம் தேதி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தற்காலிக உறுப்பினர் ஆனது. இரண்டு ஆண்டுகளுக்கு இந்தியா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினராக இருக்கும்.

    பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பு மாதம்தோறும் உறுப்பு நாடுகளுக்கிடையே சுழற்சி முறையில் மாறும்.

  13. ஆப்கானிஸ்தானில் 3 நாட்களில் 5 மாகாணத் தலைநகரை கைப்பற்றிய தாலிபன்கள்

    சண்டையில் ஈடுபடும் ஆஃப்கன்  படைவீரர் ஒருவர்
    Image caption: சண்டையில் ஈடுபடும் ஆஃப்கன் படைவீரர் ஒருவர்

    ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில், ஞாயிறன்று ஒரே நாளில் மூன்று நகரங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

    ஆப்கானிஸ்தான் அரசுக்கு கேந்திர மற்றும் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த குண்டூஸ் நகரை அவர்கள் கைப்பற்றினர்.

    இந்நகரம் நாட்டின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. சார்-ஈ-புல் மற்றும் தலோகான் ஆகிய நகரங்களும் தாலிபன்கள் வசமாகியுள்ளது. இந்த மூன்று நகரங்களுடன் சேர்த்து வெள்ளிக்கிழமை முதல் ஐந்து மாகாணத் தலைநகரங்களை அவர்கள் கைப்பற்றியுள்ளனர்.

    வடக்கு ஆப்கானித்தானில் உள்ள ஜாஸ்ஜான் மாகாணத்தின் தலைநகர் ஷெபெர்கானை தாங்கள் கைப்பற்றியுள்ளதாக தாலிபன்கள் அறிவித்தனர். வெள்ளியன்று நிம்ரோஸ் மாகாண தலைநகரான சராஞ் நகரைக் கைப்பற்றினர்.

    ஆப்கானிஸ்தான் அரசுடன் தாங்கள் சண்டை நிறுத்த ஒப்பந்தம் எதையும் மேற்கொள்ளவில்லை என்று தாலிபன் அமைப்பு தெரிவித்துள்ளது.

    அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின்பு இந்த ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதிக்கு முன்னரே அமெரிக்கப் படைகள் முழுமையாக ஆப்கானிஸ்தானிலிருந்து விலக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

    இதைத் தொடர்ந்து அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து விலகி வருகின்றன. அமெரிக்கா தலைமையிலான மேற்கத்தியப் படைகள் பெருமளவு ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், நாட்டின் பல பகுதிகளை தாலிபன் தீவிரவாதிகள் கைப்பற்றி வருகிறார்கள்.

    இரட்டை கோபுர தாக்குதலைத் தொடர்ந்து, 20 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தது.

    அதற்கு முன்பு இஸ்லாமியவாத அடிப்படைவாத அமைப்பான தாலிபன் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது.

  14. வடகொரியாவில் வெள்ளத்தால் கடும் உணவுப் பஞ்சம்: நெருக்கடியில் கிம் ஜோங் உன்

    கிம்

    வடகொரியாவில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு ராணுவத்துக்கு அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் அழைப்பு விடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    வெள்ளத்துக்குப் பிறகு 1,000 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன மற்றும் சுமார் 5,000 பேர் வெளியேற்றப்பட்டனர் என்று அரசு தொலைக்காட்சி கூறியுள்ளது.

    ஏற்கெனவே வடகொரியா பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. உணவுப் பற்றாக்குறையால் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய நெருக்கடிகளுக்கு மத்தியில் கனமழையும் சேர்ந்திருக்கிறது.

    கடந்த ஜூன் மாதத்தில் நாடு உணவு தொடர்பாக "பதற்றமான" சூழல் ஏற்பட்டதாக கிம் ஜோங் உன் கூறியிருந்தார்.

    கடந்த ஆண்டு ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக வடகொரியாவில் தானிய உற்பத்தி இலக்குகள் தவறிப்போயின. அதனால் இந்த ஆண்டு அறுவடையை நாடு நம்பியிருந்தது.

    வீடுகள் அவற்றின் கூரைகள் வரை வெள்ளத்தில் மூழ்கியிருப்பதையும், கிழக்கு மாகாணமான தெற்கு ஹம்யோங்கில் உள்ள சேதமடைந்த பாலங்கள் மற்றும் இரயில் பாதைகளையும் அரசுத் தொலைக்காட்சி காட்டியது.

    நூற்றுக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்கள் நீரில் முழ்கியிருப்பதாக AFP செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

    பேரழிவிலிருந்து மீள்வது குறித்து விவாதிக்க ஆளும் தொழிலாளர் கட்சியின் ராணுவ ஆணையம் வியாழக்கிழமை ஒரு கூட்டத்தை நடத்தியதாக அதிகாரப்பூர்வ கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்தக் கூட்டத்தில் கிம் ஜோங் உன் கலந்து கொள்ளவில்லை, ஆனால் மக்களுக்குத் தேவையான பொருள்களை ராணுவம் இந்தப் பகுதியில் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் அவர் கூறியனுப்பி இருந்தார் என்று கேசிஎன்ஏ கூறியது.

    ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை வடகொரியாவில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    அணு ஆயுதச் சோதனைகளின் காரணமாக சர்வதேச அளவில் வடகொரியா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

    கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த தனது எல்லைகளை வடகொரியா மூடியுள்ளது. உணவு, உரம் மற்றும் எரிபொருள்களுக்கு சீனாவை மட்டுமே வடகொரியா நம்பியிருக்கிறது. தற்போது எல்லைகள் மூடியிருப்பதால் இந்தச் சரக்குப் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டிருக்கிறது.

    1990 களில் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு வடகொரியா நாடு தழுவிய பஞ்சத்தால் பாதிக்கப்பட்டது. அந்த நேரத்தில் பட்டினியால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 30 லட்சம் வரை இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.

  15. நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய முக்கிய நிகழ்வுகளை இந்தப் பகுதியில் தொகுத்து வழங்குபவர் செய்தியாளர் எம். மணிகண்டன்.