Got a TV Licence?

You need one to watch live TV on any channel or device, and BBC programmes on iPlayer. It’s the law.

Find out more
I don’t have a TV Licence.

நேரடிச் செய்தி

இங்கு பிரசுரிக்கப்பட்ட நேரங்கள் அனைத்தும் பிரிட்டன் நேரமே

  1. நன்றி நேயர்களே...

    இன்றைய இந்த நேரலையில் இணைந்திருந்த நேயர்களுக்கு நன்றி. நாளை காலை வேறொரு நேரலையில் சந்திப்போம்.

    இந்த இரவு இனியதாகட்டும்.

  2. காபூல் விமான நிலையத்தில் எச்சரிக்கை விடுக்க துப்பாக்கிச்சூடு நடத்திய அமெரிக்க படை

    காபூல் விமான நிலையத்தில் கும்பலுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் தங்கள் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியிருப்பதாக தெரிவித்துள்ளது அமெரிக்கா.

    காபூல் விமான நிலையத்தில் உள்ள அமெரிக்கப் படையினர் எண்ணிக்கை 4,500 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 700 பேர் அங்கே விரைந்து கொண்டிருக்கின்றனர் என்கிறது அமெரிக்கப் பாதுகாப்புப் படை தலைமையகம் பெண்டகன்.

    அமெரிக்கர்களும், கூட்டாளிகளும் வெளியேறுவதற்கு உதவி செய்வதற்காக 6 ஆயிரம் அமெரிக்கப் படையினர் விமான நிலையத்தில் இருக்கவேண்டும் என்று திட்டமிடப்பட்டது என்று பெண்டகன் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி முன்பு கூறியிருந்தார். தற்போதைய துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும ்காயமோ, உயிரிழப்போ இல்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

  3. தப்பிச் சென்ற ஆப்கன் அதிபர் அஷ்ரஃப் கனி ஐக்கிய அரபு அமீரகத்தில்

    அஷ்ரஃப் கனி
    Image caption: அஷ்ரஃப் கனி

    கடந்த ஞாயிற்றுக்கிழமை தாலிபன்கள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நுழைந்த நிலையில், அந்நாட்டில் இருந்து தப்பித்து நாட்டை விட்டு வெளியேறிய அதிபர் அஷ்ரஃப் கனி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    "அதிபர் அஷ்ரஃப் கனியையும் அவரது குடும்பத்தினரையும் மனிதாபிமான அடிப்படையில் ஐக்கிய அரபு அமீரகம் வரவேற்றது என்பதை ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு மற்றும் சர்வதேச கூட்டுறவு அமைச்சகம் உறுதி செய்ய முடியும்," என்று அந்த அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒருவர் ஒரு அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

    இந்நிலையில், தப்பிச் செல்லும்போது அஷ்ரஃப் கனி தம்முடன் 169 மில்லியன் டாலர் பணத்தையும் தம்முடன் கொண்டு சென்றதாக தஜிகிஸ்தான் நாட்டுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் மொகம்மத் ஜஹீர் அக்பர் தெரிவித்தார். தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பே -வில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், அஷ்ரஃப் கனி தப்பிச் செய்தது தாய்நாட்டுக்கு செய்த துரோகம் என்று குறிப்பிட்டார். அத்துடன்

    பதவி நீக்கப்பட்ட முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சாலேவை தற்காலிக அதிபராக தமது தூதரகம் அங்கீகரிக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். நேற்றிரவு பிபிசி-க்கு அனுப்பிய ஆடியோ செய்தி ஒன்றில் நாட்டில் போர் இன்னும் முடியவில்லை என்றும், தாமே சட்டப்படியான காபந்து அதிபர் என்றும் சாலே தெரிவித்திருந்தார்.

  4. வனுவாட்டுவில் 6.8 அளவில் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை

    தென் பசிபிக் பெருங்கடலில் வனுவாட்டு தீவு அருகே 6.8 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    View more on twitter
  5. இரான், பாகிஸ்தானில் 20 லட்சம் ஆப்கானிய அகதிகள்

    பாகிஸ்தான் மற்றும் இரானில் வேறெந்த நட்பு நாடுகளிலும் இல்லாத வகையில் 20 லட்சம் ஆப்கானியர்கள் அகதிகளாக இருப்பது தெரிய வந்துள்ளது.

    இரு தசாப்த போர் காரணமாக, பல குடும்பங்கள் எல்லை கடந்து பாகிஸ்தான் மற்றும் இரானில் தஞ்சம் அடைந்துள்ளன. அதை விவரிக்கும் படம் இது.

    அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையர் அலுவலக தரவுகளின்படி கடந்த ஆண்டு முடிவில் பாகிஸ்தானில் 14,35,445 பேரும் இரானில் 7.80 லட்சம் பேரும் அகதியாக தஞ்சம் அடைந்திருக்கிறார்கள்.

    பாகிஸ்தானில் ஆப்கன் அகதிகள் எல்லோருடனும் சேர்ந்து நடமாட அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், இரானில் அகதியாக தஞ்சம் அடைந்தவர்கள், தடுப்பு முகாம்களில் இருக்க மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள் என்று அகதிகளுக்கான ஐ.நா அமைப்பு கூறியுள்ளது.

    ஆப்கானிஸ்தான் தாலிபன்
  6. வந்துகொண்டிருக்கும் செய்திஆப்கானிஸ்தானின் ஜலாலாபாதில் போராட்டம் - அதிருப்தியாளர்களை ஒடுக்க தாலிபன்கள் துப்பாக்கி சூடு

    ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் உள்ள ஜலாலாபாதில் போராட்டங்கள் வெடித்துள்ளன.

    அங்கிருந்து வரும் காணொளிகளில் சிலர் ஆப்கன் அரசு கொடியை ஏந்தியவாறு வீதிகளில் கோஷமிடுவதை பார்க்க முடிகிறது.

    அந்த போராட்டக்காரர்களை கலைக்க துப்பாக்கி சூடு நடத்தப்படும் சத்தமும் காணொளியில் கேட்கிறது.

    View more on twitter
  7. போரிஸ் ஜான்சன்: ஆப்கனில் பிரிட்டன் படையினரின் நடவடிக்கை வெற்றி - எதிர்கட்சி எம்.பிக்கள் அதிருப்தி

    போரிஸ் ஜான்சன்
    Image caption: போரிஸ் ஜான்சன், பிரிட்டன் பிரதமர்

    ஆப்கானிஸ்தானில் பிரிட்டன் படையினர் மேற்கொண்ட நடவடிக்கை வெற்றிகரமாக முடிந்தது என்று பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று பேசியுள்ளார். எனினும், அவரது கருத்தை தொழிலாளர் கட்சி எம்.பிக்கள் வரவேற்கவில்லை.

    பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இன்று ஆப்கன் விவகாரம் தொடர்பான விவாதத்தை தொடங்கி வைத்துப் பேசிய அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன், "ஆப்கானிஸ்தானில் தியாகம் செய்வது நமது தேசிய மனசாட்சிக்கு உட்பட்டுள்ளது" என்றும் "அது முற்றிலும் சரியானது" என்றார்.

    மேலும் அவர், "9/11 தாக்குதல் நடந்து 20 வருடங்கள் ஆகின்றன. அந்த தாக்குதலே, நேட்டோ கூட்டுப்படைகள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்து இயன்றவறை அந்த நாட்டில் நிலைமையை சீர்படுத்த நம்மால் இயன்றதை செய்ய வைத்தது," என்று கூறினார்.

    இதையடுத்து கன்சர்வேடிவ் எம்.பி. டோபியாஸ் எல்வுட், "அப்படியென்றால் இப்போது மீண்டும் 20 வருடங்களுக்கு முன்பு ஆளுகையில் இருந்த கிளர்ச்சிக்குழுவிடமே அதிகாரம் வழங்கப்படுவதை பிரதமர் ஒப்புக்கொள்கிறாரா?" என்று கேட்டார்.

    அதற்கு பிரதமர், "ஆப்கனின் அந்த நடவடிக்கையில் நாம் வெற்றி பெற்றோம். ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளின் பயிற்சி முகாம்கள் அழிக்கப்பட்டன. பல சதிகள் முறியடிக்கப்பட்டன. அவை நமது வீரர்களும் பெண்களும் அந்த நாட்டில் இருந்ததாலேயே சாத்தியமானது," என்று பதிலளித்தார்.

    "பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு உதவிய ஆப்கானியர்கள் காப்பற்றப்படுவார்களா?" என ஒரு எம்.பி கேட்டதற்கு, நிச்சயமாக, ஆப்கானிஸ்தானில் பிரிட்டனின் பணிக்கு உதவியவர்களுக்கு இயன்ற அனைத்து உதவிகளையும் அரசு செய்யும்," என்று போரிஸ் ஜான்சன் குறிப்பிட்டார். இதைத்தொடர்ந்து பிரிட்டன் பிரதமர் தெரீசா மே, அமெரிக்கா தமது படைகளை திரும்பப் பெறுவதால் அந்த நாட்டில் மாற்று நாட்டு படைகள் நிலைநிறுத்தப்படுவது பற்றி நேட்டோ பொதுச்செயலாளரிடம் பேசினீர்களா? என்று கேட்டார்.

    அதற்கு பிரதமர், மற்றொரு நாள் நான் நேட்டோ பொதுச் செயலாளர் யென்ஸ் ஸ்டோல்டென்பெர்கிடம் பேசினேன். ஆனால், நிரந்தரமாக வெளிநாட்டுப் படையினர் இருப்பது அல்லது ராணுவ தீர்வு என்பது ஒரு மாயை போன்றது என்று அவர் கூறுகிறார் என்றார். "அந்த யோசனை" 2018இல் போர் பணி முடிவடைந்ததுமே வழக்கொழிந்து விட்டது என்றும், மீண்டும் அந்த நாட்டுக்கு பிரிட்டிஷ் படையினரை அனுப்புவது பிரிட்டனுக்கோ இந்த அவைக்கோ ஒரு தேர்வு கிடையாது என்றும் போரிஸ் ஜான்சன் தெரிவித்தார். இந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய தொழிலாளர் கட்சித் தலைவர் கீர்

    ஸ்டார்மர்,ஆப்கானிஸ்தானின் மோசமான சூழ்நிலைக்கு இப்போதைய தேவை தலைமை. எனவே இந்த விவகாரத்தில் பிரதமர் மனநினைவு காட்டும் போக்கில் இருந்து வெளிவர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். நெருக்கடியான இந்த சூழலில் காபூல் நகரம் தாலிபன் கைக்கு சென்ற பிறகு நாட்டின் வெளியுறவு அமைச்சர் டோமினிக் ராப் லண்டன் திரும்பிருப்பது குறித்தும் ஸ்டார்மர் அதிருப்தி வெளியிட்டார். "கடற்கரையில்

    விடுமுறையைக் கழித்துக் கொண்டு ஒரு சர்வதேச பிரச்னையை உங்களால் ஒருங்கிணைக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து தமது விவாதத்தை நிறைவு செய்த ஸ்டார்மர், "அரசாங்கம் வசம் 18 மாதங்கள் இருந்தபோதும், கடைசிவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நாம் வகுத்த விதிகளை எவரும் ஏற்காதபோது அந்த நிதி செயல்படுத்தப்படும் நாடு அதை எப்படி பின்பற்றும். அத்தகைய விதியை மதிக்காத ஒரு குழுவிடமா ஆப்கானிஸ்தானை ஒப்பைடக்கப் போகிறோம் என்று ஸ்டார்மர் கேள்வி எழுப்பினார்.

  8. தேசிய உணவு எண்ணெய் திட்டத்துக்கு ரூ.11,040 கோடி ஒதுக்கீடு

    தேசிய உணவு எண்ணெய் - எண்ணெய் பனை திட்டத்துக்கு இந்திய ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.11,040 கோடி செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று இந்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். எண்ணெய் வித்துகள், எண்ணெய் பனை சாகுபடிப் பரப்பை அதிகரிப்பதும், உற்பத்தித் திறனை அதிகரிப்பதுமே இலக்கு என்று அவர் தெரிவித்துள்ளார்.

    View more on twitter
  9. 2018ல் வேலைக்கு தேர்வு: இதுவரை வேலை இல்லை - ம.பி. பாஜக அலுவலகம் முன் போராட்டம்

    2018ல் அரசுப் பள்ளி ஆசிரியர் வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இதுவரை தங்களுக்கு வேலை தரப்படவில்லை என்று கூறி பாஜக அலுவலகம் எதிரே கையில் ராக்கியுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். போராட்டம் நடப்பது மத்தியப் பிரதேச மாநிலத்தில்.

    முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் நேரில் வந்து உத்தரவாதம் கொடுத்தால்தான் போராட்டத்தை கைவிட முடியும் என்கிறார் வேலைக்குத் தேர்வான ஒரு பெண் ஆசிரியர்.

    ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் இந்த தகவலைப் பகிர்ந்துள்ளது.

    View more on twitter
  10. தாலிபன்களுக்கு ஆதரவாக பேசிய எம்.பி மீது தேச துரோக வழக்கு: உத்தர பிரதேச அரசு நடவடிக்கை

    இந்தியா நாடாளுமன்றம்
    Image caption: ஷஃபிகுர் ரஹ்மான் புர்கே

    ஆப்கானிஸ்தானில் ஆளுகையை கைப்பற்றிய தாலிபன்களுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ள உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சி எம்.பி ஷபிகுர் ரஹ்மான் புர்கே மீது அம்மாநில காவல்துறையினர் தேச துரோக வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.

    இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியினர் காவல்துறையிடம் புகார் அளித்திருந்தனர். இது பற்றி சம்பால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்ரேஷ் மிஸ்ரா செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்தியாவில் ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திர போராட்ட தியாகிகள் போராடி சுதந்திரம் பெற்றது போல ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் சுதந்திரம் பெற்றுள்ளனர் என பேசியிருந்ததாக பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்.

    அதன் பேரில் தேச துரோக சட்டப்பிரிவு உள்பட மூன்று பிரிவுகளில் ஷஃபிகுர் ரஹ்மான் புர்கே மீது வழக்குப் பதிவு செய்துள்ளோம். இதேபோல, சமூக ஊடகங்களில் மேலும் இருவர் மீதும் நாங்கள் வழக்குப் பதிவு செய்துள்ளோம்," என்று கூறினார்.

    என்ன பேசினார் சமாஜ்வாதி கட்சி எம்பி?

    முன்னதாக, ஊடகங்களிடம் பேசி ஷபிகுர் ரஹ்மான் புர்கே, "பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பில் இந்தியா இருந்தபோது, நமது தேசத்தின் சுதந்திர போராட்ட தியாகிகள் போராடி சுதந்திரம் பெற்றனர்.

    அதுபோலவே இப்போது முதலில் ரஷ்யா, பிறகு அமெரிக்கா என வந்த நாடுகளிடம் இருந்து தாலிபன்கள் சுதந்திரம் பெற்றுள்ளனர். இது முற்றிலும், அவர்களின் உள்விவகாரம், அதில் தலையிடக்கூடாது," என்று தெரிவித்தார்.

    இந்த நிலையில், எம்.பியின் இந்த கருத்துக்கு உத்தர பிரதேச மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மெளர்யா உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். தமது கருத்துக்காக சமாஜ்வாதி கட்சி எம்.பி வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

    முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் ஷஃபிகுரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.

    எம்.பி விளக்கம்:

    இந்த நிலையில், காவல்துறையின் நடவடிக்கையை அறிந்த ஷபிகுர் ரஹ்மான் புர்கே, "இந்திய சுதந்திர போராட்ட வீரர்களுடன் தாலிபன்களை ஒப்பிட்டு நான் பேசவில்லை. எனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நான் இந்தியக் குடிமகன். இந்திய அரசின் கொள்கைகளை நான் ஆதரிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

    இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் வந்தே மாதரம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசி பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தார் ஷபிகுர் ரஹ்மான் புர்கே.

    அப்போது பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டபோது, "இந்திய அரசியலமைப்பு இன்னும் உயிர்ப்புடன் உள்ளது. ஆனால், தேசிய கீதமான வந்தே மாதரம் இஸ்லாத்துக்கு எதிராக உள்ளது. அதை நாங்கள் பின்பற்ற மாட்டோம்," என்று பேசியிருந்தார்.

    அவரது கருத்து சர்ச்சையானதால் அதை பின்னர் அவர் திரும்பப் பெற்றுக் கொண்டார்.

  11. உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு 3 பெண் நீதிபதிகள் பெயர் பரிந்துரை

    இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு 3 பெண் நீதிபதிகள் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    உச்ச நீதிமன்றத்தில் தற்போது ஒன்பது நீதிபதிகளுக்கான இடங்கள் காலியாக உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக ஓய்வு பெற்ற நீதிபதிகள், சமீபத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி ரோஹின்டரன் நாரிமன் உள்ளிட்டோரின் இடங்கள் காலியானது.

    இதையடுத்து, தலைமை நீதிபதி தலைமையிலான நீதிபதிகள் தேர்வுக்குழு புதிய நீதிபதிகளாக நியமிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தியது.

    இதில், கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி கே.வி. நாகரத்னா, தெலங்கானா உயர் நீதிமன்ற நீதிபதி ஹிமா கோஹ்லி, குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி பெலா திரிவேதி ஆகிய மூன்று பெண் நீதிபதிகள் பெயர், உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

  12. நடப்புக் கூட்டத் தொடரிலேயே நீட் தேர்வு தொடர்பான மசோதா நிறைவேற்றப்படும்: மு.க. ஸ்டாலின்

    முரளிதரன் காசிவிஸ்வநாதன்

    ஸ்டாலின்
    Image caption: சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் (கோப்புப்படம்)

    தமிழ்நாட்டில் நடப்புக் கூட்டத் தொடரிலேயே நீட் தேர்வு தொடர்பான மசோதா கொண்டுவரப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருக்கிறார்.

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல் முறையாகப் பேசிய சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வு ரத்து உள்பட பல்வேறு கோரிக்கைகளை எழுப்பினார்.

    இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நீட் தேர்வு தொடர்பான மசோதா நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே கொண்டுவரப்படுமென அறிவித்தார்.

    "நீட் தேர்வு பிரச்சனையைப் பொறுத்தவரை, கட்சிப் பிரச்சனைகளை எல்லாம் மறந்து ஒன்றுபட்டு அதற்காகக் குரல் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். இந்தப் பிரச்சனை குறித்து அலசி ஆராய்ந்து, பொது மக்களின் கருத்துகளைக் கேட்டு அறிக்கை அளிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அவரும் அந்த அறிக்கையைத் தந்துவிட்டார். அந்த அறிக்கை சட்டரீதியாகப் பரிசீலிக்கப்பட்டு, இந்தக் கூட்டத் தொடரிலேயே இதற்கான சட்டமுன்வடிவு கொண்டுவரப்படும்" என மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

    நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு நடத்தப்படும் தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வை (நீட்) தமிழ்நாடு தொடர்ந்து எதிர்த்து வருகிறது.

  13. வந்துகொண்டிருக்கும் செய்திசுனந்தா புஷ்கர் இறந்த வழக்கில் சஷி தரூர் எம்.பி விடுவிப்பு

    காங்கிரஸ்
    Image caption: சஷி தரூர்

    தனது மனைவி சுனந்தா புஷ்கர் 2014ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி மர்மமான முறையில் ஐந்து நட்சத்திர விடுதி அறையில் இறந்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டிருந்த காங்கிரஸ் எம்.பி சசி தரூர் விடுவிக்கப்படுவதாக டெல்லி சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

    இந்த வழக்கில் மனைவியை துன்புறுத்தியதாகவும் தற்கொலைக்கு தூண்டியதாகவும் சசி தரூர் மீது டெல்லி காவல்துறையினர் 2014ஆம் ஆண்டில் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

    இந்த வழக்கு விசாரணையின்போது, சசி தரூர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விகால் பாஹ்வா, "ஆரம்பத்தில் இருந்தே டெல்லி காவல்துறையினர் இந்த வழக்கில் தவறான தகவல்கள் அடிப்படையில் குற்றச்சாட்டுகளை ஜோடித்தனர்," என்று வாதிட்டார்.

    சுனந்தா புஷ்கரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் சசி தரூர் என்றும் அவரை தற்கொலைக்கு தூண்டியது சசி தரூர் தான் என்பதையும் நிரூபிக்க காவல்துறையிடம் ஆதாரங்கள் இல்லை என்றும் அவரது சார்பில் வாதிடப்பட்டது.

    இந்த நிலையில், வழக்கில் இருந்து தான் விடுவிக்கப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சசி தரூர், "ஏழரை ஆண்டுகளாக நான் நரக வேதனையை அனுபவித்தேன். உங்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் நீதிபதி அவர்களே," என்று தமது உணர்ச்சியை வெளிப்படுத்தினார்.

    சுனந்தா புஷ்கர் உயிரிழந்தபோது சசி தரூர் இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சராக இருந்தார்.

    அவருக்கு அரசு குடியிருப்பு ஒதுக்கப்பட தகுதி இருந்தபோதும், பல மாதங்களாக ஐந்து நட்சத்திர விடுதியில் தமது மனைவியுடன் சசி தரூர் தங்கியிருந்தார். அவர் அமைச்சராக பதவி வகித்த காலத்தில், ஆடம்பர செலவுக்கும் விருந்து நிகழ்ச்சிகளுக்கும் அரசு பணத்தை செலவிடுவதாகவும் சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில், அவரது மனைவி இறந்த விவகாரத்தில் அவருக்கு காஃபியில் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் தகவல் பரவியது.

    பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமியும் சசி தரூருக்கு எதிரான வழக்கை துரிதமாக விசாரிக்க குரல் கொடுத்து வந்தார்.

    மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, ஐ.நா பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் 2006ல் நடந்தபோது ஐ.நா அவையில் உதவிச் செயலாளராக இருந்த சசி தரூர் போட்டியிட்டார். அவர் இந்தியர் என்பதால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அவரை ஆதரித்தது. ஆனால், போதிய ஆதரவு இல்லாததால் கடைசி நேரத்தில் சசி தரூர் பின் வாங்கினார்.

    ஐ.நா அவையில் நீண்ட காலம் பணியாற்றியதாலும் ஐ.நா அவை பொதுச்செயலாளர் பதவிக்கு அவர் போட்டியிட களம் கண்டதாலும் இந்தியாவில் பரவலாக அவர் அறியப்பட்டார்.

    அந்த போட்டிக்காக அவர் தமது அரசுப் பணியில் இருந்தும் விலகியிருந்தார்.

    இந்த நிலையில், தாயகம் திரும்பிய அவருக்கு காங்கிரஸ் கட்சி 2009 மக்களவை தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தது. அதில் அவர் வெற்றி பெற்றார். தொடர்ந்து 2014 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவை தேர்தல்களிலும் அவர் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

  14. ஆப்கானிஸ்தானில் இருந்து தூதரக அதிகாரிகளை பத்திரமாக மீட்டது இந்தியா

    இந்தியர்கள்

    தாலிபன்களின் வசமாகியிருக்கும் ஆப்கானிஸ்தானில் இருந்து தூதர் மற்றும் தூதரக அதிகாரிகள் அனைவரையும் பத்திரமாக மீட்டிருப்பதாக வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

    அவர்கள் அனைவரும் காபூலில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு அருகேயுள்ள ஹிண்டன் படைத்தளத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

    தூதரக அதிகாரிகள், பாதுகாப்புப் படையினர், காபூலில் தவித்து நின்ற இந்தியர்கள் சிலர் உள்பட மொத்தம் 150 பேருடன் விமானம் இந்தியாவுக்கு வந்தது.

    இந்த மீட்புப் பணி மிகவும் கடினமானதாக இருந்தது என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

    "நாடு திரும்பியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது" என ஆப்கானிஸ்தானுக்கான இந்தியத் தூதர் ருத்ரேந்திரா டாண்டன் தெரிவித்தார்.

    இன்னும் ஏராளமான இந்தியர்கள் ஆப்கானிஸ்தானில் தவித்துக் கொண்டிருப்பதாகவும், வணிக ரீதியிலான விமானச் சேவை இயக்கப்பட்டதும் அவர்கள் மீட்கப்படுவார்கள் என்றும் டாண்டன் கூறினார்.

    தாலிபன்கள் காபூல் நகரைக் கைப்பற்றியது முதலே அங்குள்ள விமான நிலையத்தில் பெருங்குழப்பம் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் விமான ஓடுபாதைகளில் கூடியிருந்தனர்.

  15. ஆப்கானிஸ்தானில் புதிய அரசை அமைக்கும் பணி தீவிரம்

    View more on twitter

    இதுவரை கத்தாரில் தங்கியிருந்த தாலிபன்களின் முக்கியத் தலைவர்கள் பலரும் ஆப்கானிஸ்தானுக்குத் நகருக்குத் திரும்பியுள்ளனர்.

    அவர்கள் புதிய அரசை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    காந்தஹார் விமான நிலையத்தில் வந்திறங்கிய தாலிபன்களின் நிறுவனர்களில் ஒருவரான முல்லா அப்துல் கானி பராதருக்கு அங்கு கூடியிருந்தவர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்த காணொளி வெளியாகியுள்ளது.

    தாலிபன்களின் புனித நகரமாகக் கருதப்படும் காந்தஹார் அவர்களது முக்கிய ராணுவத் தளமாகவும் இருந்திருக்கிறது.

  16. நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நேரலைப் பகுதியில் செய்திகளை உடனுக்குடன் தொகுத்து வழங்குபவர் செய்தியாளர் எம். மணிகண்டன்.