Got a TV Licence?

You need one to watch live TV on any channel or device, and BBC programmes on iPlayer. It’s the law.

Find out more
I don’t have a TV Licence.

நேரடிச் செய்தி

இங்கு பிரசுரிக்கப்பட்ட நேரங்கள் அனைத்தும் பிரிட்டன் நேரமே

  1. நன்றி நேயர்களே!

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்பு பக்கம் செல்லவும்.பிபிசி தமிழின் பேஃஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. டோக்யோ பாராலிம்பிக் முடிந்தது

    ஜப்பான் தலைநகர் டோக்யோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியா இதுவரை இல்லாத அளவிற்கு அதிக அளவிலான பதக்கங்களை வென்றுள்ளது.

    இன்றுடன் நிறைவடைந்துள்ள பாராலிம்பிக் போட்டிகளில் இந்திய வீர்ர்கள் ஐந்து தங்கப் பதக்கங்கள், எட்டு வெள்ளிப் பதக்கங்கள், மற்றும் ஆறு வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 19 பதக்கங்களை வென்றுள்ளனர். இந்த பதக்கங்களின் எண்ணிக்கையுடன் இந்தியா பதக்க வரிசையில் 24ஆவது இடத்தில் உள்ளது.

    இதற்கு முந்தைய அனைத்து பாராலிம்பிக் போட்டிகளிலும் சேர்த்து இந்தியா 12 பதக்கங்களே வென்றுள்ளது. இப்போது ஒரே போட்டியில் 19 பதக்கங்களை வென்றுள்ளது.

    93 தங்கப் பதக்கங்களுடன் மொத்தம் 199 பதக்கங்களை பெற்று சீனா முதலிடத்தில் உள்ளது. பிரிட்டன் 41 தங்கப் பதக்கங்களுடன் மொத்தம் 122 பதக்கங்களை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. 37 தங்கம் உள்பட 104 பதக்கங்களை வென்ற அமெரிக்கா மூன்றாம் இடம் பிடித்தது.

    View more on twitter
  3. தாலிபனின் எழுச்சி பாகிஸ்தானை எவ்வாறு பாதிக்கும்?

    புதிய தாலிபன் அரசைக் கட்டுப்படுத்த நினைக்கும் சில மேலை நாட்டு சக்திகளுக்கு, பாகிஸ்தான் மத்தியஸ்தராக விளங்கும் என்று நம்பப்படுகிறது.

    ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள உறவு தனித்துவமானது. இரு நாடுகளுக்கு இடையே இருக்கும் எல்லை 2570 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இரு நாடுகளுக்கும் வணிகத் தொடர்பு உண்டு. பல மரபுசார்ந்த, இனக்குழு சார்ந்த, மதரீதியான தொடர்புகளும் உண்டு.

    View more on youtube
  4. டீக்ரே தனிநாடு கேட்ட போராளிகள் 5,600 பேர் கொல்லப்பட்டதாக கூறும் எத்தியோப்பியா

    தனிநாடு கோரி எத்தியோப்பியாவின் மத்திய அரசோடு போர் தொடுத்துவரும் டீக்ரே விடுதலைப் போராளிகள் மீது விமானப் படை உதவியோடு நடத்தப்பட்ட கடும் தாக்குதலில் 5,600 போராளிகள் கொல்லப்பட்டதாக எத்தியோப்பியாவின் முன்னணி ராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

    கடந்த நவம்பர் முதல் டீக்ரே போராளிகளுக்கும், எத்தியோப்பிய மத்திய அரசுக்கும் இடையே சண்டை நடந்துவருகிறது. ஆனால், மூத்த ராணுவத் தளபதி பாச்சா தெபெலீ எந்த காலகட்டத்தில் இந்த உயிரிழப்புகள் நேரிட்டன என்று தெளிவுபடுத்தவில்லை.

    சமீபத்தில் நடந்த சண்டைகளில் இந்த உயிரிழப்புகள் நேரிட்டிருக்கலாம் என்கிறார்கள் செய்தியாளர்கள்.

    இறந்தவர்கள் தவிர, 2,300 போராளிகள் காயமடைந்திருப்பதாகவும், 2 ஆயிரம் பேர் பிடிபட்டிருப்பதாகவும் தளபதி பாச்சா கூறியுள்ளார்.

    இந்த சண்டையால் பல பத்து லட்சம் பேர் பட்டினி கிடக்கும் சூழ்நிலை உருவாகியிருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

    டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி (டீ.ம.வி.மு) போராளிகள் அருகில் உள்ள அம்ஹாரா, அஃபார் பகுதிகளுக்குள்ளும் ஊடுருவத் தொடங்கியுள்ள நிலையில், எத்தியோப்பியாவைப் பிளக்க டீ.ம.வி.மு. முயற்சி செய்வதாக லெப்டினன்ட் ஜெனரல் பாச்சா டெபெலீ குற்றம்சாட்டியுள்ளார்.

    Ethiopia: Thousands reported killed in clashes
  5. கேரளாவில் நிபா வைரஸ்: தமிழ்நாட்டு எல்லையில் கட்டுப்பாடுகள் தீவிரம்

    நிபா வைரஸ் பரவல் காரணமாக கேரள மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்குள் நுழைபவர்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இத்தகவலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

    கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    நிபா வைரஸானது ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குப் பரவும் தன்மை கொண்டதாக உள்ளது. பன்றி, வௌவால்கள் மூலமாகவும் மனிதர்களுக்குப் பரவுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    தற்போது கோழிக்கோடு அருகே நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு எல்லைகளிலும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    ``நிபா வைரஸ் குறித்த தகவல் வந்ததும் கேரள மாநில எல்லையோரத்தில் அமைந்துள்ள ஒன்பது மாவட்டங்களிலும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வருகின்றவர்களுக்கு பரிசோதனைகள் செய்யப்படுகின்றன" என்கிறார், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்.

    இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், `` கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்குள் வருகிறவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை, காய்ச்சல் கண்டறியும் சோதனை ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை மட்டும் பெரும்பாலும் எல்லைக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்" என்கிறார்.

    மேலும், `` பரிசோதனைகளையும் காய்ச்சல் முகாம்களையும் அதிகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. புதிய வைரஸ்கள் வரும்போது அதற்கு ஆலோசனைகளை கூறவும் சிறந்த மருத்துவ நிபுணர்கள் உள்ளதால் தமிழ்நாடு பாதுகாப்பாகவே உள்ளது" என்கிறார்.

    fruit nipah virus
  6. குட்டப்பட்டி நாராயணன் மணி மண்டபம்: எடப்பாடி திறந்து வைத்தார்

    இந்திய தேசிய காங்கிரஸ் மூத்த நிர்வாகியும் , காமராஜருக்கு நெருக்கமானவருமான முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் குட்டப்பட்டி நாராயணன் நினைவாக அவரது சொந்த ஊரான குட்டப்பட்டியில் கட்டப்பட்ட மணி மண்டபத்தை சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.

  7. வ.உ.சிதம்பரனார் நினைவில்லத்தில் தமிழிசை

    தமிழிசை

    கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் 150 வது பிறந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.

    தொடர்ந்து அவருடைய வரலாற்றை விளக்கும் புகைப்படங்களை அவர் பார்வையிட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இந்திய சுதந்திரத்திற்காக போராடிய மரியாதைக்குரிய வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாக அவர் கூறினார்.

    இளைஞர்கள் எல்லா சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாறுகளையும் படியுங்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு ரசிகர்களாக இருங்கள். சுதந்திரத்திற்காக அவர்கள் போராட்டம் நடத்தவில்லை என்றால் நாம் இன்று சுகமாக நடமாட முடியாது.

    இந்தியாவில் முதன் முதலாக சுதேசி கப்பல் விட்ட வ.உ.சி உள்ளிட்ட அனைத்து சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாற்றை தேடித் தேடிப் படியுங்கள் என்றார்.

    குறைந்தபட்சம் 75 சுதந்திர போராட்ட வீரர்கள் வாழ்ந்த இடங்கள், அவர்கள் வேலை செய்த இடங்கள், படித்த இடங்கள் அவருடைய போராட்டங்கள் குறித்து தேடித்தேடி இளைஞர்கள் படிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

    மண்ணுக்காக போராடியவர் மண்ணெண்ணெய் விற்று கடனாளியாகி வறுமையில் உயிரிழந்தார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் எனக் கூறிய அவர், மொழிக்காகவும் நாட்டுப்பற்றுகாக்காகவும், சமூகத்திற்காகவும் பாடுபட்டுக் கொண்டிருக்கும் தலைவர்களை அவர்கள் இருக்கும் காலத்தில் ஒவ்வொருவரும் போற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

    தமிழ்நாட்டில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறித்து தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு "அரசியல் குறித்து கருத்து சொல்ல இயலாது. நான்ஆளுநராக உள்ள இரண்டு மாநிலங்களிலும் விநாயகர் விநாயகர் சிலை வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது," என்றார்.

  8. பாராலிம்பிக்கில் வெள்ளி வென்ற நொய்டா மாவட்ட ஆட்சியர்

    டோக்யோவில் நடந்துவரும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியில், நொய்டா மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வரும் சுஹாஸ் எத்திராஜும் பேட்மின்டனில் எஸ் எல் 4 பிரிவில் கலந்து கொண்டார்.

    அவர் இன்று பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லுகாஸ் மசூரோடு இறுதிப் போட்டியில் மோதி வெள்ளிப் பதக்கம் வென்றார். லுகாஸ் ஏற்கனவே இரு முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்ற உலகின் சிறந்த வீரர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த சுஹாஸோடு, இந்திய பிரதமர் நரேந்திர மோதி தொலைபேசி மூலம் பேசி தன் வாழ்த்துக்களைத் தெரிவித்ததாக ஏ.என்.ஐயில் செய்தி வெளியாகியுள்ளது.

    View more on twitter
  9. காபூலில் பெண்கள் போராட்டம்- ஒடுக்கிய தாலிபன்

    பெண்கள் போராட்டம்.

    ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் கைப்பற்றிய பிறகு, தற்போது அந்நாட்டிலுள்ள பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடத் தொடங்கினர். சமீபத்தில் காபூலில் நடந்த அப்படி ஒரு போராட்டத்தை தாலிபன்கள் நசுக்கியுள்ளனர். உரிமைக்காகப் போராடிய பெண்கள், அதிபர் மாளிகையை நோக்கிச் செல்ல முயன்ற போது கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் மிளகு ஸ்ப்ரே போன்றவைகளால் தாங்கள் இலக்கு வைக்கப்பட்டதாக பெண்கள் குழுவினர் கூறியுள்ளனர்.

  10. கேரளாவில் 12 வயது நபர் நிஃபா வைரசால் பலி

    கேரளாவில் 12 வயது நபர் ஒருவர் நிஃபா வைரசால் பலியாகியுள்ளார். அவரது குடும்ப உறுப்பினர்களுக்கோ, அவருடன் தொடர்பில் இருந்த எவருக்குமோ நோய் அறிகுறிகள் இல்லை என்று கூறியுள்ளார் கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ். நிலைமையை சமாளிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

  11. பாராலிம்பிக்ஸ்: இந்தியாவின் கிருஷ்ண நாகர் பேட்மிண்டனில் தங்கம் வென்றார்.

    கிருஷ்ண நாகர்

    டோக்யோ பாராலிம்பிக்சில் பாட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் SH6 போட்டியில் இந்தியாவின் கிருஷ்ண நாகர் தங்கப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் அவர் சீனாவின் கை மான் சு-வை வீழ்த்தினார். இது இந்த பாராலிம்பிக்சில் இந்தியா வெல்லும் 5-வது தங்கப் பதக்கம். 19-வது பதக்கம்.

  12. வணக்கம் நேயர்களே!

    தமிழ்நாடு, இந்தியா, உலக நாடுகள் தொடர்புடைய செய்திகளை இந்த நேரலைப் பக்கத்தில் பகிர்கிறோம். எங்களோடு இணைந்திருங்கள்.